உயிருள்ளவன் என்று சொல்கிறாய்,ஆனால் செத்தவானாயிருக்கிறாய்
ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து, உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். வெளி3-1-4
தேவன் நம்முடைய கிரியைகளை அதாவது செயல்பாடுகளை அறிந்திருக்கிறார்.அநேகர் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டாலும் செத்தவர்களாக இருக்கிறார்கள்.அநேகர் ஆவிக்குரியவர்கள் என்று சொல்லி கொண்டாலும் அவர்களுடைய வாழ்க்கை பகுதியில் இருள் இருக்கிறது.பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும். பாவத்தின் சம்பளம் மரணம்.ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ரோமர் 7-19,20.
என்று பவுல் சொல்வது போல இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிறவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள்.இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததற்கான நன்மை என்னவெனில் மத் 4-15 ல் இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.என்பதேயாகும்.ஆனால் இன்றைக்கு அநேக குடும்பங்கள் இருளின் ஆதிக்கத்தில் நிறைந்திருக்கிறது.நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கி அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்தில் உட்படுத்தின பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம் என்று என்று கோலோ 1-13 ல் பவுல் சொல்கிறார்.இன்னும் நாம் பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகும்படி தகுதி பெறவில்லை. ஆவிக்குறிய விடுதலையை நம் வாழ்க்கையில் பெற்று கொள்ளவில்லை.,(தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். 1 யோவான் 2-11).
இன்றைக்கு நம் வாழ்க்கையில் பிறரோடு பகைகள் வைராக்கியங்கள் கசப்புகள் சண்டைகள் இருக்குமானால் நாம் இன்னும் இருளில் இருக்கிறோம் என்பதே அப்பட்டமான உண்மை.அதாவது உங்கள் கிரியைகள் சாகிறதுக்கேதுவாக இருக்கிறது.உங்கள் வஸ்திரங்கள் கறைப்படிந்து இருக்கிறது.சாவுக்கேதுவான கிரியைகளை ஆவியானவரே உயிர்பிக்க முடியும்.காணிக்கை போடுவதற்கு முன்பாக உன் சகோதரனிடம் உள்ள குறைகளை சரி செய் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.காணிக்கை போடும் போது கூட குறையற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால் பரிசுத்தமில்லாதவர்கள் தேவனை தரிசிக்கமுடியாது என்று இயேசு சொன்னதை பற்றி நாம் கவலையற்றிருக்கிறோம்.
அடுத்ததாக, நீ கேட்ட சத்தியத்தை கைக்கொண்டு மனம் திரும்பு.இல்லையென்றால் நினையாத நேரத்தில் திருடன் வருவது போல உன்மேல் ஆக்கினை தீர்ப்பு வரும் என்று எச்சரிக்கிறார். நீ விழித்து கொண்டு சாவுக்கேதுவானவைகளை ஸ்திரப்படுத்து என்று ஆவியானவர் எச்சரிக்கிறார்.இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லி கொண்டு காணக்கூடாத நித்தியமான நிஜமான பரலோக ராஜ்ஜியத்தை அறிந்து கொள்ளாதவர்களும் விலை மதிக்க முடியாத இரட்சிப்பை முழுமையாக பெற்று கொள்ளாதவர்களும் ஆவிக்குறியவர்கள் என்று தங்களை சொல்லி கொண்டு சத்தியத்துக்கு கீழ்படியாதவர்களும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு படிப்படியாக ஆவிக்குறிய மரணம் சம்பவித்து கொண்டிருக்கிறது.இவர்களை தான் உன் கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறையுள்ளவைகளாக காணவில்லை என்று ஆவியானவர் எச்சரிக்கிறார்.(ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார். எபேசியர் 5-14.
ஆனால் தங்கள் வஸ்திரங்களை கறைப்படுத்தாத ஜெயம் கொள்கிறவர்கள் மாத்திரமே வெண்வஸ்திரம் தரிபிக்கப்பட்டு பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்என்று ஆவியானவர் எச்சரிக்கிறார்.ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3-14).
(சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெசலோனிக்கேயர் 5-23) ஆமென்.