top of page

வசனத்துக்கு கீழ்படியாத புத்தியில்லாதவர்கள்  

 

அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.  1 பேதுரு 2:8.

 

இன்றைக்கு ஒரு கூட்டம் வேதாகமத்தில் சொல்லப்பட்ட வசனங்களுக்கு கீழ்படியாமல் இடறிவிடுகிறார்கள். ஜீவனுள்ளோர் தேசத்தில் நடக்கும்படியாக என் கால்களை இடறலுக்கு தப்புவியும் என்று தாவீது தேவனை நோக்கிச் சொல்கிறான்.அநேக சபைகள் ஜனங்களை தேவ வசனத்துக்கு கீழ்படியும் படி நடத்துவதில்லை.அநேகர் ஒரு கடமைக்காகவே ஆலயத்துக்கு போகிறார்கள்.அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவே இருக்கின்றனர். அன்றைக்கு ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் ஆண்டவர் சொன்ன கட்டளைகளை மீறினபடியால் ஆசீர்வாதங்களை இழந்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கூட கீழ்படியாமையால் கானானுக்குள் பிரவேசிக்காமல் போனார்கள். ஆரோன் தேவனுடைய கனமான ஊழியத்துக்கு அழைக்கபட்டவன்.ஆனால் கீழ்படியாமையால் கானானுக்குள் அவன் பிரவேசிக்கவில்லை.(ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. எண்ணாகமம் 20-24).

 

மோசே தேவன் சொன்ன கட்டளையை மீறினபடியால் கானானுக்குள் போகவில்லை.நம்முடைய வாழ்வின் இலக்கு பரம கானான்.நாம் சத்தியத்துக்கு கீழ்படியும் போது தான் அதில் பிரவேசிக்க முடியும்.என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கி பார்ப்பேன் என்று ஆண்டவர்  சொன்னதை குறித்து எச்சரிக்கையாக இருக்க கடவோம்.இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு போவதற்கு முன் சொன்ன முக்கியமான கட்டளை ஞானஸ்நானம். (ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.  மத்தேயு 28:19,20.

இன்றைக்கு ஞானஸ்நானம் என்ற இயேசு சொன்ன கட்டளைகளுக்கு எதிராக அநேக சாக்கு போக்குகளை சொல்லி அதை தவிர்த்து விடுகிறார்கள். (யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.

பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். லூக்கா 7:29,30)

ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க மாட்டான் என்று இயேசு எச்சரித்தார்.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை.அது இயேசு கடைபிடிக்க சொன்ன கட்டளை.

 

 அது மாத்திரமல்ல அவர் கீழ்படிய சொன்ன அநேக சத்தியங்களுக்கு சபை கீழ்படிவதில்லை.சிலர் ஞானஸ்நானம் என்ற சத்தியத்துக்கு கீழ்படிந்து விட்டு அவர் செய்ய சொன்ன தேவநீதியையும்  தேவ அன்பையும்,பரிசுத்தமாகுதலையும்  விட்டு விடுகிறார்கள்.இன்றைக்கு இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படியவில்லையென்றால் நாம் அவரை புறக்கணிக்கிறோம்.( என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்க தோன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12-48)

 

இன்றைக்கு ஆலயத்துக்கு போகிற நாம் கேட்கிறவர்களாக மாத்திரம் இருக்கிறோம்.சத்தியத்தின் படி நாம் நடப்பதில்லை. (அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.  யாக்கோபு 1:22)

 

எனவே பிரியமானவர்களே, இந்த கடைசி நாள்களில் சகல சத்தியத்துக்கு கீழ்படியும்படி உங்களை ஒப்பு கொடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் போது அவர் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.நாம் சகல சத்தியத்துக்கும்  கீழ்படியும்படி பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை ஒப்பு கொடுப்போம்.  தேவ வசனமே நாம் நித்திய ஜீவனுக்கு வழி நடத்தபடுவதற்கு நம் கால்களுக்கு தீபமாக அதாவது வெளிச்சமாக இருக்கிறது.வெளிச்சம் இல்லாமல் நித்தியத்துக்கு போகும் வழியை நாம் அறிந்து கொள்ள முடியாது.புத்தியில்லாத கன்னிகைகள் வெளிச்சம் இல்லாததினால் பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் போனார்கள். பரிசுத்த ஆவியாகிய எண்ணை இல்லாததினால் அவர்கள் விளக்கு அணைந்து போயிற்று, அதே மாதிரி  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். மத்தேயு 7:26 என்று இயேசு சொன்னார்.

 

எனவே நாம் பல வருடங்களாக சபைக்கு போய் கொண்டு சத்தியத்தை கேட்டு அதன்படி செய்யாத புத்தியில்லாதவர்களாக இருந்தால் பரலோக வாசல் நமக்கு அடைக்கப்படும். எனவே நாம் புத்தியில்லாதவர்களா புத்தியுள்ளவர்களா என்பதை நிதானித்து அறிவோம்.வார்த்தையின் வெளிச்சத்தில் வழி நடத்தப்படாத நாம் நிச்சயமாக பரலோகத்தை காணமுடியாது.அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1 யோவான் 2:4.

bottom of page