top of page

தன்னை தானே பெருமைபடுத்தி உயர்த்தி கொள்ளும் பெருமையின் ஆவி

 

 

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். யோவான் 12-43

 

 தேவன் நம் இருதயத்தின் எண்ணங்களை கூட ஆராய்ந்து அறிகிறார்.இன்றைக்கு ஊழியத்தில் நாம் அநேக காரியங்களை செய்தாலும் பெரும்பாலும் நம்மை நாமே உயர்த்தி கொள்வதற்காக  பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

 

2 கொரிந்தியர் 10-18. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.

 

உபாகமம் 18-13.என் நாமத்தை பிரஸ்தாபபடுத்துகிற எந்த ஸ்தானத்திலும் நான் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றைக்கும் தேவனை மகிமைபடுத்துவதற்கு பதிலாக நம்மை நாமே உயர்த்தி கொள்ளும் எந்த ஸ்தானத்திலும் தேவ மகிமை வெளிப்படுவதில்லை. ஆனால் தேவன் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் நோக்கத்தையும் ஆராய்ந்து அறிகிறார். அன்றைக்கு பாபேல் கோபுரத்தை கட்டி தங்களை பிரஸ்தாபபடுத்தி கொண்டவர்கள் சிதறடிக்கபட்டதுபோல இன்றைக்கு ஊழியத்தை செய்து கொண்டு தேவனை மகிமை  படுத்தாமல் தங்கள் ஊழியத்தையும் சபையையும் மேன்மைபடுத்துகிறவர்கள் தேவ கோபத்துக்கு ஆளாகாதபடிக்கு ஜாக்கிறதையாக இருங்கள்.

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களுக்கு சாத்தான் வைத்திருக்கும் கண்ணி பெருமை என்ற ஆயுதம்.  சாத்தான் எந்த காரியத்தினால் கீழே விழுந்தானோ அதே மாதிரி இன்றைக்கும்  ஊழியக்காரர்களை வீழ்ச்சியடைய செய்து கொண்டிருக்கிறான்.  இன்றைக்கு வீண் புகழ்ச்சிக்காக அநேக காரியங்களை செய்து கொண்டு தேவனுக்காக நான் இதை செய்கிறேன் என்று தங்களை விளம்பரப்படுத்தி தாரை ஊதுகின்ற ஊழியக்காரர்கள் அநேகர். இணையதளங்களில் மனித புகழ்ச்சிக்காக தங்களை பற்றிய செய்திகளையும் ஊழியங்களையும் தேவனுடைய அனுமதியின்றி வெளிப்படுத்தி அங்கீகாரம் தேடி கொள்கிறவர்கள் பலர். இணையதளங்களில் தங்களை பற்றிய காரியங்களை வெளிப்படுத்துவதன் முக்கிய நோக்கம் தங்களை பிரபலப்படுத்துவதேயாகும். இவர்கள் மனித புகழ்ச்சிக்காக  தங்களை பெருமைபடுத்தி இந்த உலகத்தில் பெயரையும் புகழ்சியையும் அடைந்தாலும் பரலோகத்தில் ஒரு பலனையும் பெற்று கொள்வதில்லை.

 

எனவே இந்த கடைசி நாள்களில்  தேவ வல்லமையால் ஊழியத்தை செய்து கொண்டு தேவனை மகிமைபடுத்தாமல் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் சபையையும் மகிமைபடுத்தி கொண்டிருப்பீர்களென்றால் உடனே  மனம் திரும்புங்கள். இயேசு நமக்கு காட்டிய மாதிரியான  மனத்தாழ்மையை பெற்று கொண்டு தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்வோம். ஆமென்.

bottom of page