முதலாவது நீ போதிக்கும் உபதேசத்தில் நிலைத்திரு
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். 1 தீமோத்தேயு 4:16.
இன்றைக்கு சபையில் போதிக்கிறவர்கள் தாங்கள் போதிக்கிற உபதேசங்களுக்கு தாங்களே கீழ்படிவதில்லை நாம் போதிக்கும் உபதேசங்களுக்கு போதிக்கிற நாம் கீழ்படிந்து நடக்கும் போது அதை கேட்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.மேலும் நாமும் இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத் 5-19 ல் இந்த கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான் என்றார். இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஊருக்கு தான் உபதேசம் பண்ணுகிறார்கள். பெரும்பாலானோர் கற்பனைகளை மீறி போதிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இதை அன்றைக்கு இயேசு கிறிஸ்து அவர்கள் உபதேசத்தின் படி செய்யுங்கள் ஆனால் அவர்களின் செயல்களின் படி செய்யாதிருங்கள் என்றார்.(நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு 23-3)
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15.
இன்றைக்கு சத்திய வசனத்தை போதிக்கிற நாம் தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமுமாக இருக்க வேண்டும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. (இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? ரோமர் 2:21).
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9:27. என்று பவுல் குறிப்பிடுகிறார். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அருளப்பட்ட சத்தியத்தை போதிப்பதற்கு தேவ பயமில்லாமல் போய்விட்டது. வேதாகமத்தை எடுத்து பிரசங்கம் பண்ணுவது ஒரு Fashion ஆக மாறிவிட்டது. வசனத்தை போதிக்கிற அநேகரிடம் தேவபயமில்லை. பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியத்தை செய்கிறவர்கள் இல்லை. தாங்கள் போதித்த தேவ வசனங்களுக்கு கீழ்படிகிற விஷயத்தில் நிர்விசாரமாக இருக்கிறார்கள். தாழ்மையை பற்றி பேசுகிறவர்கள் பெருமையினாலும் மேட்டிமையினாலும் நிறைந்திருக்கிறார்கள். உண்மையை பற்றி பிரசங்கிக்கிற அநேக போதகரிடம் பணவிஷயத்தில் உண்மையில்லை.அநேகர் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிப்பவர்களாகவே இருக்கின்றனர். அன்பு மற்றும் சகோதர சிநேகத்தை போதிக்கிறவர்கள் அநேகரிடம் பேசுவதில்லை. பொருளாசை விக்கிரக ஆராதனை என்று சபையில் போதிக்கிறவர்கள் விலையுயர்ந்த பொருள்களையும் வாகனங்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். பரிசுத்தத்தை பற்றி போதிக்கிறவர்கள் உலக ஆசை இச்சைகளுக்கு அடிமையாயிருக்கிறார்கள்.மறுமையை பற்றி பேசுகிறவர்கள் உலக ஆசீர்வாதத்துக்காக தேவனுக்கு பிரியமில்லாத எதையும் துணிகரமாக செய்கிறார்கள். புத்திக்கெட்டாத சமாதானத்தை இயேசு தருகிறார் என்கிறவர்கள் சபையில் அரசியல் செய்து பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள். என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3:1.
என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.எனவே கிறிஸ்துவின் சாயலாய் இருக்கிற சுவிசேஷத்தை நாம் பிரசங்கம் பண்ணுகிற நாம் நியாயம் தீர்க்கபடாதபடிக்குமிகவும் ஜாக்கிரதையாக செயல்படுவோம்.நாம் போதிக்கும் சத்தியத்தின் சாயலை அதாவது மாதிரியை நம் செயல்களில் நாம் காட்டுவோம். (இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2:21).
எனவே ஊழியம் செய்கிற நாம் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியம் செய்வோம். நாம் போதிக்கிற சத்தியத்துக்கு நாம் கீழ்படியவில்லையென்றால் நம்மை நாமே வஞ்சித்து கொள்ளும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுவோம்.
எனவே பவுல் சொன்னபடி பிரசங்கம் பண்ணுகிற நாமே ஆகாதவர்களாக போகாதபடிக்கு நம் சரீரங்களை ஒடுக்கி கீழ்படுத்துவோம். (நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதமல்லாமல்,
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 2 தீமோத்தேயு 3:14,15 ஆமென்.