top of page

கிறிஸ்து உன்னை மன்னித்தாரே...

உங்களால் ஏன் பிறனை மன்னிக்க முடியவில்லை??!

 

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று இயேசு சொன்னார் அதாவது எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். பிதாவானவர் இரக்கம் உள்ளவராய்  இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்  ஏனென்றால் இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்றும் எச்சரித்தார்.

 

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.  கொலோசெயர் 3-13

 

தேவனிடமிருந்து பாவ மன்னிப்பை பெற்று கொண்டு பிறனை மன்னிக்காமல் கிறிஸ்துவை உடையவன் என்று சொன்னால் நாம் மாயமாலமான கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

 

இன்றைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களையும் நம்முடைய சாபங்களையும் சிலுவையில் தன்னுடைய இரத்தத்தை சிந்தி நீக்கி போட்டிருக்கிறார்.விலைமதிக்க முடியாத இரட்சிப்பு என்ற பாவ மன்னிப்பை நமக்கு பெற்று தந்திருக்கிறார்.

 

(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.  கொலோசெயர் 1-14

 

அப்படி இருக்கும் போது நாம் பிறருக்கு எப்படி அளக்கிறோம். நாம் பிறருடைய அதாவது பிறர்  நமக்கு செய்த தப்பிதங்களை மற்றும் தீமைகளை மன்னித்து இருக்கிறோமா?நாம் பிறருக்கு எப்படி அளக்கிறோமோ அப்படியே அளக்கப்படுவோம். இன்னைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் சபைக்கு போகிறோம் ஆனால் பலரோடு பேசுவதில்லை.பலர் தங்கள் உடன் பிறந்தவர்களோடு வருடக்கணக்காக பேசுவதில்லை.பலர் தங்கள் பிள்ளைகளோடும்...பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களோடும் பேசுவதில்லை.ஏன் தெரியுமா? தங்கள் இருதயத்தில் பகையும் கசப்பையும் கோபத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.உண்மை என்னவெனில் இவர்கள் அவர்கள் செய்த தப்பிதங்களை மன்னிக்கவில்லை.தேவனுடைய பார்வையில் இது சரியானதா? சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று இயேசு சொன்னார். அப்படியென்றால் இருதயத்தில் பகையை வைத்து கொண்டு சண்டை போடுகிற நாம் யார்?

 

உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும் உன் பாவங்களை கார்மேகத்தை போலவும் அகற்றிவிட்டேன் என்னிடத்தில் உன்னை மீட்டுக் கொண்டேன் என்று ஏசாயா 44 22 ல் கர்த்தர் சொல்கிறார்.

 

மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி அவர் சிலுவையில் சாபமாகி நம்மை மீட்டுக் கொண்டார் என்று கலாத்தியர் 3-13 ல் பவுல் எழுதுகிறார்.

 

கடந்த நாள்களில் ஒரு சகோதரி என்னோடு பேசினார்கள். அவருக்கு தெரிந்த ஒரு சகோதரி ஆலயத்துக்கு போகிறவர் தான், கிறிஸ்தவர் தான், என் மீதான கோபத்தில் என்னை சாபமான வார்த்தைகளால்  திட்ட ஆரம்பித்தார்கள் என்றார்கள். மிகவும் வேதனையோடு பேசினார்கள். பிரியமானவர்களே.

இன்றைக்கு குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பகைமையால் நீதி மன்றத்தில் வழக்காடுகிறார்கள். நீங்கள் அவர்களை மன்னித்து விடுதலை பண்ணவில்லை என்றால் நீங்கள் விடுவிக்கப்பட முடியாது. இயேசு கிறிஸ்து உங்களை சபிக்கிறவனை ஆசீர்வதிக்க சொன்னார்.பகைக்கிறவர்களை சிநேகியுங்கள் என்றார். நிந்திக்கிறவனுக்காகவும் துன்பப்படுத்துகிறவனுக்காகவும் ஜெபம் பண்ண சொன்னார், தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிக்க வேண்டினார்.அவர்களை விடுவித்தார். நாம் எப்படி நடக்க வேண்டும் என்ற   அடிச்சுவடை அதாவது மாதிரியை அவர் நமக்கு காண்பித்திருக்கிறார் அவர் நடந்தபடி தான் நாமும் நடக்க வேண்டும்.

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.  1 யோவான் 2-6

 

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான், அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள், அவைகள் எரிந்துபோம்.  யோவான் 15-6

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமையை சொன்னார்.ஒரு ராஜா  தன்னிடம் கடன் வாங்கினவனை அழைத்து நீ உன் மனைவி பிள்ளைகள் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று கடனை அடைக்கும் படி சொன்னான்.அதற்கு இவன் ஐயா எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் எப்படியாகிலும் கடனை அடைத்து விடுகிறேன் என்று சொல்லி அவன் கெஞ்சிக் கேட்கும் போது அவனுக்கு இரங்கி அவனை விடுதலை பண்ணி அவன் கடனையும் அவனுக்கு மன்னித்து விட்டான் ஆனால் இவனோ இவனுக்கு கீழே கடன் வாங்கிய ஒருவனிடம் கடனை திரும்ப கேட்டான். கடனை திரும்ப செலுத்த அவன் நேரம் கேட்ட போதும் அதற்கு  சம்மதியாமல்  அவனைக் காவலில் வைத்தான். இதை அறிந்த அந்த ராஜா அவனை அழைத்து நான் உனக்கு இரங்கினது போல நீ அவனுக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி வாங்கின கடனை கொடுத்தே ஆக வேண்டும் என்று அவனை ஜெயிலில் போட்டான்.

 

தேவன் நம் தப்பிதங்களையெல்லாம் மன்னித்த போதிலும் நாம் பிறருக்கு மன்னிக்காமல் இருக்கும் போது எப்படி நம் கடன்கள் மன்னிக்கப்படமுடியும்.??

 

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.  மத்தேயு 6:14

 

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மத்தேயு 6:15

 

இப்பொழுது புரிகிறதா?எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்பதை. மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள். விடுதலை செய்யுங்கள் விடுதலை பெறுவீர்கள். இரக்கம் செய்யுங்கள் இரக்கம் பெறுவீர்கள்.

 

 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் யோவான் 8-32 என்று இயேசு சொன்னார். சத்தியத்தை அறியாமல் அதன்படி செய்யாமல் நீ விடுதலையை பெற முடியாது.

 

இன்றைக்கு நாம் ஜெபிக்கும் அநேக ஜெபங்களுக்கு ஏன் பதில் கிடைக்கவில்லை தெரியுமா?

 

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.  மாற்கு 11-25

 

பிறனை மன்னிப்பது தேவனுடைய நீதியில் ஒன்று அதை தான் இயேசு சிலுவையில் காண்பித்தார். முதலாவது அதை செய்யுங்கள், பிறகு ஊழியம் செய்யலாம்.!!

 

இது தான் தேவனுடைய வழியும் கூட.. நாம் நம்முடைய காரியங்களில் மனுஷமார்க்கமாய் நடக்கிறோம். என் வழிகள் உன் வழிகளல்ல என்று தேவன் சொல்கிறார்.

 

அடுத்ததாக இன்றைக்கு அநேகர் தெய்வீக சுகத்தை ஏன் பெற்று கொள்ள முடியவில்லை தெரியுமா?

 

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு 5-16

 

நாம் எவ்வளவு காணிக்கை கொடுத்தும் ஏன் நமக்கு ஆசீர்வாதமில்லை ஏன் நம் காணிக்கை ஏற்று கொள்ளபடவில்லை தெரியுமா?

 

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.  மத்தேயு 5:23,24.

 

பிரியமானவர்களே நீங்கள் பிறருக்கு விரோதமாக தீங்கு செய்திருந்தாலோ அல்லது அவர்களை தூசித்து பேசியிருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பை பெற்று குறையை சரி செய்யுங்கள்.

 

இன்றைக்கு தங்கள் குடும்பத்தாரோடு குறைகளை வைத்திருப்பவர்கள் தான் சபைகளில் மூப்பர்களாகவும் ஊழியக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

இருளில் இருக்கும் இவர்கள் எப்படி ஜனங்களை வார்த்தையின் வெளிச்சத்தில் நடத்துவார்கள்.??

 

 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள், மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள், விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.  லூக்கா 6:37

 

ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2-1

 

நாங்கள் தான் நீதிமான்கள் என்று நினைத்து கொண்டு பிறரை குற்றவாளிகளாக தீர்ப்பு செய்யாதிருங்கள். உங்கள் குறைகளை நிதானித்து அறியுங்கள்.உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

 

தயவு செய்து மேல் சொல்லப்பட்ட வசனங்களை ஒருமுறை தெளிவாக படியுங்கள்.ஏன் நாமும் நம் பிள்ளைகளும் தெய்வீக ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளவில்லை என்பதை சரியாக விளங்கி கொள்வீர்கள்..

 

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 1 பேதுரு 3-9

ஆமென் ஆமென்.

bottom of page