top of page

குமாரன் நமக்கு கொடுக்கப்பட்டார், ஆனால் தேவன் கொடுத்த விலையேறப்பெற்ற பரிசை நாம் உதாசினப்படுத்தினோம் !!

 

னிதர்கள் நமக்கு கொடுக்கும் பரிசையோ அல்லது நினைவு பொருள்களையோ எவ்வளவு பத்திரமாக பாதுகாக்கிறோம். ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் நமக்கு கொடுத்த விலையேறப் பெற்ற குமாரனாகிய கிறிஸ்துவை உதாசினப்படுத்தியிருக்கிறோம். கிறிஸ்து இல்லாத கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டங்கள் வெறும் பாரம்பரியமாகவும் மாயமாலமாகவும் தான் இருக்கும்.

 

மேலும், கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.  ரோமர் 8-10

 

ஒரு நாளை குறிப்பிட்டு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைவு கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.  ஆனால் அந்த நாளில் குடித்து வெறித்து பாவம் செய்வது தவறு.

 

அவர் பரிசுத்தராயிருப்பது போல உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.

 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்து அதன் மூலமாக பெற்று தந்த இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்று கொள்ளாவிட்டால் எல்லா மனிதர்களை பார்க்கிலும் பரிதபிக்கபட்டவர்களாக ஆகி விடுவோம்.

 

ஏனென்றால், அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு அழைத்த தேவனுடைய மகா பெரிதான அழைப்பை உதாசினப்படுத்தி இன்னமும் இருளின் அதிகாரத்தின் அடிமைத்தனத்திலே வாழ்ந்து கொண்டு கிறிஸ்து பிறந்தார் என்று கொண்டாடுவதில் எந்த பயனும் இல்லையே.

 

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

 

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

 

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.1 யோவான் 4-8-11

 

மேலே சொல்லப்பட்ட  முக்கியமான வசனங்களை ஒருமுறை கூட கவனமாக படியுங்கள்.

 

நாம் பிழைக்கும் படியாக அதாவது பாவத்தின் அடிமைதனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தப்பித்து கொள்ளும்படியாகவும் நமக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கப்பட்டார்.சந்திப்பின் நாளிலே அதற்கு நாம் நிச்சயமாக கணக்கு கொடுக்க வேண்டும்.

 

மேலும் 11 ம் வசனத்திலே இவ்விதமாக நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததாலே நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் கடனாளிகளாயிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டீர்களா?

ஆனால் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் நம் வீடுகளில் சமாதானம் இல்லையே??.

 

ஆலயத்தை அலங்கரித்து கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் சபையினரிடம் பகைமையும் கசப்பும் பொறாமையும் பிரிவினைகளும் இருக்கிறது.

 

சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து என்று கேரல் பாட்டு பாடுகிறவர்கள் பலரிடம் பேசுவதே இல்லை. பல சபைகளில் மூப்பர்கள் இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கும் சபைகளில் அரசியல் செய்யும் நமக்கும் என்ன வித்தியாசம்??

 

ஏழை, பணக்காரன், நீ பெரியவனா, நான் பெரியவனா என்று தங்களை உயர்த்தி கொள்ளும் மேட்டிமை….  மேலும், சாதிப் பிரிவினைகளின் அலங்கோலத்தின்  அடிமைத்தனங்களில் சிக்கி கொண்டிருக்கிறோம்.  இன்னும் நம்முடைய முரட்டாட்டங்களை விட்டு விடாமல் ஒருவருக்கொருவர் அன்பில்லாமல் நம்மில் நாமே பிரிவினைகளை வைத்து கொண்டு போலியாக கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிறோம்.

 

அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான் என்று வேதம் சொல்கிறது.

 

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1 யோவான் 3:23

 

அவருடைய கற்பனைகளை கைக் கொள்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.

 

இன்றைக்கு  இயேசுவை நேசிக்கிறேன் என்று சபையில்  ஆராதிக்கிறவர்கள், தங்கள் சகோதர சகோதரிகள் மற்றும் பிறரிடம் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

 

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?  1 யோவான் 4-20

 

இன்றைக்கு நம்மை நிதானித்து பார்ப்போம். நீங்கள் உண்மையாக கிறிஸ்துவை நேசித்தீர்களென்றால் அவர் கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்.ஒருவன் என் மேல் அன்பு கூர்ந்தால் என் கற்பனைகளை கைக்கொள்வான் என்று இயேசு சொன்னார்.

 

கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதற்கு முன் நாம் நம்மை சரிப்படுத்தி கொள்வோம். நம் முரட்டாட்டங்களை விட்டு விடுவோம்.

 

யாரிடம் பகைமை உணர்வோடு பேசாமல் இருக்கிறோமோ அவர்களிடம் நம் தப்பிதங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாவோம்.

 

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

அப்போஸ்தலர் 17-30

 

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

லூக்கா 24-47

 

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 5-39

 

என்று இயேசு சொன்னது போல வேத வசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.அதற்கு மாறாக நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து நிதானித்து பாருங்கள்.கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்கிறோம்.

ஆனால் கிறிஸ்துவையும் அவர் உபதேசத்தையும் விட்டு விட்டோம். இனியாவது வெறும் கிறிஸ்தவனாக வாழாமல் கிறிஸ்துவை உடையவர்களாக வாழ நம்மை அற்பணிப்போம்.

 

 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

1 யோவான் 5:12

 

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 2 யோவான் 1-9

 

அவருடைய கற்பனைகளை கைக்கொள்கிறவவன் அவரில் நிலைத்திருக்கிறான். என்று வேதம் சொல்கிறது. பல வருடங்களாக ஆலயத்துக்கு போகிறோம், கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிறோம். ஆனால் கிறிஸ்து நமக்குள் இல்லாமல் கொண்டாடுவது போலியான கிறிஸ்து பிறப்பின் ஆராதனையாக தான் இருக்கும்.எனவே இந்த நாள்களில் நம்மை நாமே நிதானித்து அறிவோம்.மனம் திரும்புவோம்.

தேவன் இவ்விதமாக தன் ஒரே பேறான குமாரனை தந்து இவ்விதமாக நம்மில் அன்பு கூர்ந்திருக்க நாமும் ஒருவரிலொருவர்  அன்பு கூற கடனாளிகளாயிருக்கிறோம் என்கிற வசனத்தின் படி நம்மை ஒப்பு கொடுப்போம்.

 

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

 

யோவான் 13-34 என்ற இயேசு சொன்ன புதிய கட்டளைக்கு கீழ்படிய நம்மை அற்பணிப்போம்.

 

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 2 யோவான் 1-9.
 

ஆமென்.

bottom of page