top of page

யேசபேலின் ஆவியினால் ஆளுகை செய்யப்பட்ட சபைகள்.

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. 1 இராஜாக்கள் 21

 

கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார், ஸ்திரிக்கு புருஷன் தலையாயிருக்கிறான். இந்த யசபேலின்ஆவி,சபை நடத்தும் ஊழியக்காரனையே ஆளுகை செய்து சபையையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறது. இந்த ஆவி ஒரு பெண் மூலமாக செயல்படும். பெரும்பாலான சபைகளில் ஊழியக்காரனின் மனைவி மூலமாகவோ அல்லது ஏதாவது ஒரு பெண் மூலமாகவோ இந்த ஆவி செயல்படுகிறது. அந்த சபையில் அந்த ஆவியை உடைய  பெண் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

 

சில சபைகளில் செயல்படும் ஆவி தீர்க்க தரிசனம் என்கிற பேரில் குறி சொல்லும்,  இந்த ஆவி இருக்கும் சபைகளில் ஜனங்களிடம் எந்த ஆவிக்குறிய மாற்றமும் இருக்காது,  ஜனங்கள் அப்படியே இருப்பார்கள், இந்த ஆவி ஆளுகை செய்கிற சபைகளில் உள்ள ஊழியக்காரன் பெலவீனமான பாண்டமாக இருப்பார்கள். தேவ  திட்டங்களையும் தேவ தரிசனங்களையும் சபையில் செயல்படுத்த தடையாக இருப்பது இந்த ஆவி தான்.  இந்த ஆவியினால் கட்டப்பட்ட  பெண்ணின் ஆலோசனையை கேட்டு தான் ஊழியக்காரர் முடிவுகளை எடுப்பார்.

 

மேலும் பல சபைகள் உடைந்து போவதற்கு பெண்கள் பின்புலத்தில் கிரியை செய்கிற இந்த ஆவிகள் தான் காரணம். இத்தகய ஆவி தான் பல சபைகளில் பிரிவினையை உண்டாக்குகிறது. சபைகளில் அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களின் பின்புலத்தில் கூட இந்தஆவியை பெற்ற ஒரு பெண் இருக்க கூடும்.

 

எனக்குத் தெரிந்த ஒரு ஊழியக்காரர் கேரளாவில் ஒரு சபைக்கு ஊழியத்துக்காக சென்றார். அவர் மேடையில் இருக்கும்போது முன்பாக ஒரு பெண் வெள்ளை உடை அணிந்து ட்ரம் அடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர்  சபையின் ஊழியக்காரரைப் பார்த்து இந்த பெண் யார்? அந்த பெண்ணிடம் ஒரு அசுத்த ஆவி செயல் பட்டு கொண்டிருக்கிறதை காண்கிறேன் என்றார்.

இதை சொன்னவுடனே அந்த ஊழியக்காரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் இவரை பார்த்து, இந்த பெண் தான் இந்த சபையிலே முக்கியமானவர்,  தீர்க்கதரிசியும் கூட. நீங்கள்  இப்படி எல்லாம் தவறாக பேசக்கூடாது என்று கடிந்து கொண்டு செய்திக்கு பதிலாக கடைசி ஜெபத்தை மாத்திரம் கொடுத்தார். இவர் அந்த ஜெபத்தை செய்வதற்காக மைக் எடுத்த போது அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த அந்த ட்ரம் ஐ கீழே எரிந்து விட்டு ஆட ஆரம்பித்தார். எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி. மேலும் அந்த பெண்ணிடம் இருந்த ஆவி நீ என்னை கண்டுபிடித்து விட்டாய் என்று இவரை பார்த்து கத்த ஆரம்பித்தது.

இறுதியில் அந்த பெண்ணிடம் இருந்த பிசாசு துரத்தப்பட்டது.அந்த ஊழியக்காரர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

 

இங்கிலாந்து தேசத்தில் ஒரு  சபையின் ஊழியக்காரரின் மனைவி ஊழியத்தில் தலையிட ஆரம்பித்தார். அந்த சபையில்,  ஜெபிக்கிற குழுவினர் இருந்தார்கள் இவர் அவர்களிடம்,என்னை கேட்காமல் ஜெபிக்க கூடாது என்று கட்டளையிட்டார். இப்படி பல காரியங்களில் தலையிட ஆரம்பித்தார் இறுதியில் அந்த ஊழியக்காரர் தன் மனைவியின் அனுமதியின்றி எதையும் செய்ய மாட்டார். கடைசியில் அந்த சபையே உடைந்து விட்டது.

பல சபைகளில் இந்த ஆவி பெண்கள் மூலமாக சபையின் அதிகாரத்தை தங்கள் கையில் கொண்டு வந்து விடுகிறது.

பல சபைகளில் ஊழியக்காரர்கள் இத்தகய ஆவியை உடைய பெண்களிடம் அடிமையாக இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சியடைய செய்கிறது. பல சபைகளில் தேவ சித்தத்திற்கு மாறாக பொறுப்பாளர்களை இந்த ஆவி தான் நியமிக்கிறது.

சில ஊழியக்காரர்கள் வேசித்தனமுடைய இத்தகய ஆவியினால் விபச்சாரம் என்கிற பாவத்தில் விழுந்து தங்கள் ஊழியத்தையே இழந்து போகிறார்கள்.

 

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். வெளிப்படுத்தினத விசேஷம் 2:20

 

கிறிஸ்து தான் சபைக்கு தலையாயிருக்கிறார் என்பதில் ஊழியக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஊழியக்காரர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ ஆலோசனை படி முடிவுகளை எடுக்க வேண்டும். கிறிஸ்து தங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை யாருக்கும் கொடுத்து விட கூடாது. மனைவி புருஷனுக்கு எல்லா காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க கடவள் என்கிற கட்டளை ஊழியக்காரிகள் வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டும்.

 

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

எபேசியர் 5-23

 

இன்றைக்கு குறி சொல்லக்கூடிய பல பெண்கள் தங்களை தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டு சபையில் எழும்புகிறார்கள்.

 

இவர்கள் சபையில் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறார்கள். ஏவாளோடு பிசாசு பேசினது போல இவர்களோடு பேசி, ஆதாமை  போல ஊழியக்காரர்களையும் வீழ்ச்சியடைய செய்கிறார்கள்.

 

அப் 2-18 ல் ஊழியக்காரிகள் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையாக பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்டு தீர்க்கதரிசனம் சொல்கிற தேவனால் பயன்படுத்த படும் பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களை அவர்கள் கனிகளினால் தான் பகுத்தறியுங்கள்.

 

இன்றைக்கு  நகையை கழற்றி  வெள்ளை உடை உடுத்து கொண்டு அந்நிய பாஷை பேசுகிற பெண்களை,வெளிப்புறமான அடையாளங்களை வைத்து புனிதர்கள் என்று கருதுகிறார்கள். ஆனால், அவர்களிடம் சாந்தமும் அமைதலுள்ள ஆவியும் இருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

 

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3-4

 

எனவே பிரியமானவர்களே உங்கள் சபைக்காகவும் உங்கள் சபை ஊழியக்காரர் குடும்பத்துக்காகவும் தொடர்ந்து ஜெபியுங்கள்.சபை கிறிஸ்துவின் கன்மலையின் மேல் அதாவது கிறிஸ்துவின் உபதேசத்தின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும்.தேவனுடைய அதிகாரத்தின் கீழ் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி சபை நடத்தப்பட வேண்டும்.இன்றைக்கு பல சபைகள் தேவனுடைய ஆலோசனையிலிருந்து மனித ஆலோசனைக்கு கடந்து போய் விட்டது. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.  ரோமர் 10-3

bottom of page