top of page

தேவன் இணைத்ததை பிரிக்காதீர்கள்

 

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள், ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். மத்தேயு 19:4-6

மேற் சொல்லப்பட்ட வசனத்தை சொன்னவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இன்றைக்கு அநேகர் தங்கள் குடும்ப வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களாகவே இருக்கின்றனர். ஊழியக்காரர்களின் குடும்பத்தில் கூட அன்பும் ஐக்கியம் இல்லை, இவர்கள் ஊருக்கு உபதேசிக்கிறார்கள். தங்களுக்கு தானே போதிப்பதில்லை. ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்.1 தீமோ 3-5.

ஒரு விசுவாசியோ அல்லது ஊழியக்காரனோ...யாராயிருந்தாலும் சரி..அவனது சாட்சி வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்படும். ஒரு மனைவியோ கணவனோ தங்கள் துணையை இவர் (இவள்) கர்த்தருக்கு பயந்து அவர் கற்பனைகளுக்கு செவிக்கொடுத்து வாழ்கிற அன்பானவர் என்று சொல்ல வேண்டும்.பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை குறித்து சாட்சி சொல்ல வேண்டும்.

 

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிகொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்று கொள்ளுகிறோம். 1யோவான்3:22

 

இன்றைக்கு நாம் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தை ஏன் பெற்று கொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்டீர்களா? இயேசு கிறிஸ்து சொன்னப்படி இசைந்து இருக்கிற குடும்பத்தில் தான் ஆசீர்வாதம்.

 

பல குடும்பத்தின் இசைவை தடுப்பது அவர்கள் குடும்பத்தார்களும் நண்பர்களும் தான். பல குடும்பங்களில் கணவன் மனைவியை அவர்களுக்கு எதிராக தூண்டி விட்டு பிரிவினைகளை உண்டாக்குவது பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தார்களே. இயேசு கிறிஸ்து சொன்ன தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன் என்ற வார்த்தையை குறித்து யாருக்கும் பயமில்லை. கணவன் மனைவி விஷயத்தில் மனித ஆலோசனையை தவிர்த்து அவர்களை இணைத்த தேவ ஆலோசனையை நாடுவது மிகவும் முக்கியம்.

 

அன்றைக்கு ஏவாள்,ஏதேன் தோட்டத்தில் சாத்தானுடைய குரலுக்கு செவிகொடுத்தாள். கடைசியில் சாத்தானுக்கு கீழ்படிந்து தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்து ஒருவருக்கொருவர் குற்றப்படுத்தி கொள்வதை பார்க்கலாம்.  இறுதியில் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போய் ஏதேனை விட்டு துரத்தப்பட்டார்கள். அந்த விருட்சத்தை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று தேவன் சொல்லியிருக்க சாத்தானோ சாகவே சாக மாட்டாய் என்று சொல்லி அவளை,  வஞ்சிக்கிறான்.

 

பிரியமானவர்களே நீங்கள் ஒரு கணவன் மனைவியாக இருக்கலாம். நீங்கள் இசைந்திருப்பதற்கு எதிராகவும் தேவனுடைய கற்பனைகளுக்கு எதிராகவும் பேசி பிரிவினையை கொண்டு வரும் சாத்தானின் குரலை அடையாளம் கண்டு கொண்டு விலகி செல்லுங்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னார். உங்களிடம் பேசுகிறவர்கள் உங்கள் தாயாரோ தகப்பனாரோ யாராக இருந்தாலும் சரி சமாதானத்துக்கடுத்தவைகளை பேசுகிறார்களா?அல்லது தேவனுடைய கற்பனைகளுக்கு எதிராக பேசி பகையையும் கசப்பையும் பிரிவினைகளையும் விதைக்கிறார்களா என்பதை பகுத்தறியுங்கள்.ஒரு கணவனோ மனைவியோ எந்த பிரச்சனையானாலும் விவாகரத்து என்ற தேவனுடைய கட்டளைக்கு விரோதமாக செயல்படாதீர்கள். ஒரு கணவனோ மனைவியோ விபச்சாரம் செய்தாலோ அல்லது மரணித்தாலோ மாத்திரமே விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.எனக்கு தெரிந்த ஒரு புற மதத்தவர் தன் இள வயதில் நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாக ஆகி போன தன் மனைவியை வேறு திருமணம் செய்யாமல் 25 வருடங்கள் கவனித்து வந்திருக்கிறார்.தன் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அவர் தன் மனைவி மீது எவ்வளவு அன்பாக இருந்திருப்பார் என்பதை நினைத்து பாருங்கள். எத்தனை கிறிஸ்தவ குடும்பத்தினர் தேவன் இணைத்ததற்கு விரோதமாக  விவாகரத்து செய்கின்றனர்? விவாகரத்து செய்யும்படியாக தூண்டி குடும்பங்களை பிரிப்பது சாத்தானின் தந்திரமே.

 

அடுத்ததாக, உங்கள் பிரச்சனைகளை எதிர் பாலரோடு தயவு செய்து பகிர்ந்து கொள்ளாதீர்கள். தங்கள் பிரச்சனைகளை எதிர்பாலரோடு பகிர்ந்து கொண்டு விபச்சாரம் என்ற பாவத்தில் விழுந்து போனவர்கள் பலர். 

 

அடுத்தவர்களை Compare பண்ணி

 

  • அவர்கள் எவ்வளவு அன்பாயிருக்கிறார்கள்

  • அவர்கள் எவ்வளவு அழகாயிருக்கிறார்கள்

  • அவர்கள் எவ்வளவு அறிவுள்ளவர்களாயிருக்கிறார்கள்

  • அவர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்கிறார்கள்

 

என்றெல்லாம் Compare பண்ணாதீர்கள். 

 

உங்கள் துணை தேவன் உங்களுக்கு கொடுத்தது. எல்லா குடும்பங்களிலும் குறைவுகளும் நிறைவுகளும் இருக்கும். குறைவுகளை புறக்கணித்து நிறைவுகளை பார்த்து வாழ கற்று கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் குறைகளை தப்பிதங்களை நிதானித்து அறிந்து அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் தப்பிதங்களுக்காக மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.மேலும் மன்னிக்கவும் தயங்காதீர்கள். நீங்கள் மன்னிக்கவில்லையென்றால் உங்கள் பரம பிதாவும் அப்படியே செய்வார் என்று இயேசு எச்சரித்தாரே? இன்றைக்கு தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்காமல்  மன்னிக்காமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் ஒரே  வீட்டில் வாழும் அநேக கணவன் மனைவிகள் உண்டு. காணிக்கை போடுவதற்கு முன் சகோதரனோடு உள்ள குறையை சரி செய்ய இயேசு கட்டளையிட்டாரே??அப்படியென்றால் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு என்ன தகுதியை தேவன் உங்களிடம் எதிர்பார்ப்பார்?

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீங்கள் பூமிக்கு  உப்பாயிருக்கிறீர்கள். உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்றார். இன்றைக்கு குடும்பத்தில் உப்பாக வெளிச்சமாக இல்லையென்றால் எப்படி பூமிக்கு உப்பாக வெளிச்சமாக இருப்பீர்கள். நீதி மன்றங்களில் நடக்கும் கிறிஸ்தவ விவாகரத்துகளினால் இயேசுவின் நாமம் தூசிக்கப்படுகிறது, தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாத கணவன் மனைவிகளினாலே தானே கசப்பும் வைராக்கியமும் சண்டைகளும். பவுல் தீமோத்தேயுக்கு தீத்துக்கு எழுதிய நிருபங்களில் புருஷர்களும் ஸ்திரிகளும் சண்டை காரர்களாக இல்லாமல் நல்லவர்களாகவும் அமைதல் உள்ளவர்களாகவும் இருக்க கடவர்கள் என்று எழுதுகிறார்.

 

அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். 1 பேதுரு 3-7

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

கொலோசெயர் 3-19

 

மேற் சொல்லப்பட்ட வசனங்களுக்கு எத்தனை கணவன்மார்கள் கீழ்படிகிறார்கள்? உங்கள் மனைவியும் உங்களோடு கூட நித்திய ஜீவனை சுதந்தரிப்பதால் அவர்களை கனம் பண்ணுங்கள். எவ்வளவு அற்புதமான வார்த்தைகள். மனைவியை கைநீட்டி அடிக்கும் விசுவாசிகள் எத்தனை பேர்? எவ்வளவு கொடுமையான விஷயம். நீங்கள் உங்கள் மனைவியை கனம் பண்ணாவிட்டால் உங்கள் பிள்ளைகள் உங்களை எப்படி கனம் பண்ணுவார்கள்?  கணவனும் மனைவியும் முதலாவது தங்கள் பிள்ளைகளுக்கு  முன்பாக சாட்சியாக வாழ்ந்து காட்டுங்கள். வெளியே பிறர் முன்பாக  நடித்து கொண்டிருக்காதீர்கள்.

 

எந்த காரியத்தை செய்யும் போது மனசும் மாம்சமும் விரும்பினவைகளை செய்யாமல் சுய புத்தியை சாராமல் ஒருவருக்கொருவர் கனம் பண்ணி எந்த தீர்மானம் எடுக்கும் போதும் தலையாகிய கிறிஸ்துவின் சமூகத்தில் வைத்து ஆவியானவரின் ஆலோசனை படி தேவ சித்தத்தை குடும்பத்தில் செயல்படுத்தும் போது அந்த குடும்பம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.

 

அடுத்ததாக, அநேக குடும்பங்களில் குடும்ப ஜெபம் இல்லை! குடும்பமாக தேவனை வீடுகளில் ஆராதித்து ஜெபிக்கும் போது தேவ பிரசன்னம் அந்த வீடுகளில் கடந்து வரும். தேவ பிரசனத்தில் இருக்கும் குடும்பத்தில் தான் உலகம் தராத சந்தோஷமும் சமாதானமும் காணப்படும்.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வந்த பிலேயாம் மூலமாக தேவன் பேசும் போது நீ அந்த ஜனங்களை சபிக்க வேண்டாம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  என்றார். மேலும், அவர்களது கூடாரங்களும் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவை என்று தேவன் சொன்னார்......   நம்முடைய குடும்பத்தை பற்றி இப்படியாக தேவன் சாட்சி கொடுக்க முடியுமா?? ஊருக்கு உபதேசிப்பது இருக்கட்டும்.முதலாவது உங்கள் குடும்பத்தில் ஊழியம் செய்யுங்கள். முதலாவது உங்கள் குடும்பத்தினரை தேவனுக்கு நேராக நடத்துங்கள்.

கர்த்தருடைய வசனத்துக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கும் குடும்பத்தில் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.அவர்கள் தங்கள் கையின் பிரயாசத்தை சாப்பிடுவார்கள் (சங் 128)

 

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 11

மேற் சொல்லப்பட்ட வசனத்தின் படி மனைவிக்கு புருஷன் தலையாயிருக்கிறான். இன்றைக்கு அநேக குடும்பங்களில் மனைவியை அடிமை மாதிரி அதாவது வேலைக்காரியை மாதிரி வைத்திருக்கிறார்கள். பெண் அடிமைத்தனம் பல குடும்பத்தில் காணப்படுகிறது.

ஆனால் வேதாகமத்தில் இருவரும் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அநேகர் புரிந்து கொள்ளவே இல்லை. சொந்த மாம்சத்தை பகைத்தவன் ஒருவனுமில்லையே??

ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கும் போது அங்கு அடிமைத்தனம் என்கிற பேச்சுக்கே இல்லை. ஏனென்றால் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும், அன்பு தீங்கு நினையாது.

அநியாயத்தில் சந்தோஷப்படாது.  கணவன் கிறிஸ்துவின் தலைமையை ஏற்று கொள்ளும் போது அங்கு கிறிஸ்துவின் தெய்வீக அன்பு நிறைந்திருக்கும். நிச்சயமாகவே நீ பெரியவனா நான் பெரியவனா என்ற வாக்குவாதம் இருக்காது. புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கும் போது அவன் கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு கீழ்படிந்திருக்க வேண்டும். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என்கிற கிறிஸ்து காட்டிய நுகத்தை ஏற்று கொண்டு முதன்மையாக இருக்க விரும்புகிறவன் கடையானவனாக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்ன தாழ்மையை கடைபிடிக்க வேண்டும்.கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவி தாழ்மையின் முன் மாதிரியை காண்பித்தார். அது தான் கிறிஸ்துவின் சாயல்..அது தான் அவர் மாதிரி.அது தான் கிறிஸ்துவின் ஆவி.கிறிஸ்துவின் ஆவி அதாவது சுபாவம் இல்லாதவன் அவருடையவன் இல்லை.

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் 1 யோவான் 2-6.

 

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 2 யோவான் 1-9

 

அதே மாதிரி மனைவியும்  பவுல் சொன்னது போல அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3 -4. 

என்ற வசனத்தின் படி தன்னை அலங்கரித்து கொள்ளும் போது அந்த குடும்பம் தெய்வீக தன்மை உள்ள கிறிஸ்துவின் குடும்பமாக இருக்கும். கிறிஸ்து தலையாயிருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருப்பார்கள்.பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டு அவருடைய ஆவியால் நிரப்பபட்டிருப்பார்கள்.

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

ஏசாயா 44-3 என்ற ஆவிக்குறிய ஆசீர்வாதம் இவர்களுடையதே. இவர்களுடைய அலங்கத்துக்குள்ளே தான் சாமாதானமும் இவர்கள் அரண்மனைக்குள்ளே தான் சந்தோசமும் இருக்கும்.

 

நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118-15. ஆமென்.

bottom of page