top of page

ஊழியத்தில் உங்களுக்கு

கொடுக்கப்பட்டதை மாத்திரம் செய்யுங்கள்

 

சமீபத்தில் ஒரு ஊழியக்காரரை ஒரு சபைக்கு அழைத்திருந்தார்கள்.  அவருக்கு பிரசங்கம் பண்ண 50 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது, துதி ஆராதனை முடிந்து செய்தியின் நேரம் வந்த போது அந்த சபையின் ஊழியர் அவரை அழைத்து செய்தி கொடுக்கும்படி சொன்னார். இவரோ சபையாரை எழுப்பி விட்டு ஒரு 10 நிமிடங்கள் ஆராதனைக்குள் நடத்தி தன் பாட்டு திறமையையும் ஆராதிக்கும் திறமையையும் காட்ட ஆரம்பித்தார்,  அதன் பிறகு தன்னை பற்றி பேச ஆரம்பித்தார், சுமார் 15 நிமிடங்கள் தன் ஊழியங்களை பற்றியும் தன்னை பற்றியும் சற்று பெருமையாக பேசி தன்னை தானே புகழ்ந்து கொண்டார். மேலும், சற்று பெருமையாக பேசிக்கொண்டு நான் பெருமைக்காக சொல்லவில்லை, கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக என்றார். 25 நிமிடங்கள் கடந்து விட்டது. இனி தான் செய்திக்கு போவதாக சொல்லிக் கொண்டு செய்திக்கான வசனத்தை சொல்லி கொண்டு சின்ன ஜெபத்தை ஏறெடுத்தார். அதனிடையே ஒரு பாடலை அழகாக பாடி தன்னுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தினார், இப்பொழுது 35 நிமிடங்கள் கடந்து போனது. அவருக்கு கொடுக்கப்பட்டதோ 50 நிமிடங்கள் ஆனால் இருப்பதோ 15 நிமிடங்கள். செய்தியை ஆரம்பித்தவர் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருப்பதால் வேகமாக போகிறேன் என்று சொல்லி அவசர அவசரமாக பேச ஆரம்பித்தார்.இறுதியில் அவர் பேச வேண்டிய ஐந்து காரியங்களில் மூன்று காரியங்களை மாத்திரம் பேச முடிந்தது. எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என்று நேரத்தின் மேல் பழியை போட்டார். அடுத்த முறை வரும் போது மீதியை பார்த்து கொள்ளலாம் என்றார். மக்களுக்கு சொல்ல வேண்டிய கர்தருடைய வார்த்தையை முழுமையாக பேசி முடிக்காத இவர் தன் ஊழியத்தில் தோல்வியடைந்தவர் தானே.?

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள், மற்றும் சிலர் கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டி சென்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

 

ஒரு தடவை ஒரு சபையில் ஒரு வாலிபர் கூடுகையில் இரண்டு ஊழியக்காரர்களை அழைத்திருந்தார்கள், இருவருக்கும் 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது,  முதலாவது பேசிய ஊழியக்காரர் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்து கொண்டார், அந்த கூடுகையை ஏற்பாடு பண்ணிய சபையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்று கொண்டிருந்தனர். அதிக நேரத்தை திருடிய அந்த ஊழியக்காரர் மேல் எரிச்சல் அடைந்தனர். இப்படியாக சில ஊழியக்காரர் அடுத்த ஊழியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை திருடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இது  தன்னை தானே பிரியப்படுத்தும்  ஒரு வகையான சுயநலம்.இவர்கள் ஊழியத்தில் தங்களை முன் நிறுத்த விரும்புகிறவர்கள். ஒரு முதிர்ந்த ஊழியர் இப்படியாக சொன்னார்...நீங்கள் உண்மையிலே  பரிசுத்த ஆவியினால் நடத்த படுவீர்களானால் ஒரு மணி நேர பிரசங்கத்தை உங்களுக்கு கொடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் பேசி முடிப்பீர்கள்.

 

கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார். 2 தீமோத்தேயு 4-17

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்...பிரசங்கத்தின் நோக்கம் நிறைவேறுவதற்காகவும், ஜனங்கள் கேட்கும்படியாகவும் முதலாவது பிரசங்கம் பண்ணுகிற நீங்கள் தேவனால் பெலப்படுத்தப்பட வேண்டும்.நீங்கள் தேவ வல்லமையோடு பிரசங்கம் பண்ணும் போது அநேகர் வசனத்தை கேட்டு அதற்கு கீழ்படிவார்கள். நீங்கள் எவ்வளவு நேரம் பிரசங்கம் பண்ணுகிறீர்கள் என்பது முக்கியமல்ல!  நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படுகிறீர்களா? உங்கள் பிரசங்கம் பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கிறதா என்பது மிகவும் முக்கியம்.

 

பிரசங்கம் பண்ண தெரியாதவனிடமிருக்கும் பரிசுத்தாவியின் நிறைவினால் அநேகர் இரட்சிப்புக்குள்ளாக நடத்தபடுவார்கள். அருமையாக வார்த்தை ஜாலத்தால் பேசும் பலரின் பிரசங்கத்தை கேட்டும் அநேகர் புகழ்ந்து பேசுவார்கள் ஆனால் ஒரு மனமாற்றமும் அங்கு நடக்காது.ஒரு முறை ஒரு ஊழியக்காரர் எங்கள் சபைக்கு பிரசங்கம் பண்ண வந்திருந்தார்.அவரது பிரசங்கம் சாதாரணமாக இருந்தது. இவர் என்னதை பிரசங்கிக்கிறார் என்று நாங்கள் சலித்து கொண்டோம், இவரை ஏன் கூப்பிட்டோம் என்று கூட நினைக்க தோன்றியது, ஆனால் கடைசி ஜெபத்தில் பிரசங்கத்தை கேட்ட முக்கால்வாசிப் பேர் எழும்பி நின்று பரிசுத்தமாக வாழ தங்களை ஒப்பு கொடுத்தார்கள்.  நான் ஒன்றை புரிந்து கொண்டேன் இவர் அற்புதமான தேவ மனிதர், இவரது பிரசங்கம் வேத அறிவிலிருந்து பேசப்பட்டது அல்ல தன் ஜீவியத்திலிருந்து வந்தது.

 

இன்றைய தேசங்களுக்கான ஜெபங்களில் கூட அநேகர் தங்களுக்கு கொடுத்த நேரத்தில் ஜெபத்தை முடிப்பதில்லை!  அதிக நேரத்தை எடுக்கிறார்கள். கடைசியாக ஜெபத்ததை நடத்துகிறவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் இவரது நேரத்தை ஏற்கனவே பயன்படுத்திவிட்டார்கள். அதாவது திருடி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்ல 30 நிமிடங்கள் ஜனங்களை ஜெபத்தில் நடத்துங்கள் என்றால் ஆராதித்து கொண்டிருக்கிறார்கள்.

 

பலரை ஜெபிக்க சொன்னால்  பிரசங்கம் பண்ணி கொண்டு கடைசியில் நேரம் இல்லாமையால் அடுத்து வருபவரின் நேரத்தை இவர்களே ஆக்கிரமித்து கொள்கிறார்கள். சிலர் ஜெபிக்கும் போது வேதாகம சம்பவங்களை ஆண்டவருக்கே போதிக்கிறார்கள். அதாவது இப்படி நடந்தது ஆண்டவரே அப்படி நடந்தது ஆண்டவரே என்று வேதாகமத்தின் நிகழ்வுகளை தேவனுக்கே சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதை மறந்து விடுகின்றனர். எதற்காக அழைக்கப்பட்டீர்களோ அந்த ஊழியத்தை செய்யுங்கள், உங்கள் வேத அறிவை ஜனங்களுக்கு தெரியப்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு கொடுத்த ஜெப நேரம் மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தை வீணடிக்காதீர்கள், எதற்காக ஜெபிக்க சொல்கிறார்களோ அதற்கு மாத்திரம் ஜெபியுங்கள், வீணான வார்த்தைகளால் அலப்பாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் ஊழியத்தை ஒழுங்கும் கிரமமுமாக செய்ய பழகுங்கள்.

 

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது. 1 கொரிந்தியர் 2-5.

மேற் சொல்லப்பட்ட வசனத்தை கவனித்தீர்களா? பிரசங்கம் பண்ண தெரியாதவனிடமிருக்கும் பரிசுத்தாவியின் நிறைவினால் அநேகர் இரட்சிப்புக்குள்ளாக நடத்தபடுவார்கள். பாடல் பாட தெரியாத ஒருவன் ஆராதிக்கும் போது அவனிடம் இருக்கும் பரிசுத்த ஆவியின் நிறைவினால் அநேகர் அழுது ஒப்பு கொடுப்பார்கள். அருமையாக வார்த்தைகளாலும் வேத அறிவினாலும் பல அறிவியல் மற்றும் உலக நடப்புகளை பேசி நேரம் போவதே தெரியாமல் பிரசங்கிப்பவர்கள் உண்டு. ஆனால் அங்கு ஒரு மனமாற்றமும் மனம் திரும்புதலும் நடக்காது. அழகாக பாடல்களை பாடி இனிய இசையோடு உள்ள ஆராதனையை நடத்துகிறவரை தூள் கிளப்பிடீங்க என்று மனிதர்கள் புகழ்ந்து பேசுவதை பார்க்கலாம். ஆனால் சபையில் ஒரு மாற்றமும் நிகழாது.

 

ஒரு கர்த்தருடைய மனுஷன் தன்னுடைய நாவாகிய கடிவாளத்தை பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்பு கொடுக்க வேண்டும்.அவர் அவன் நாவை தனது நாவாக்கி சபையில் கிரியை செய்கிறார். கர்த்தர் எரேமியாவை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டார், அவர் என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன் என்றார். ஆசாரியனுடைய உதடுகள் அறிவை காக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

 

படிப்பறிவில்லாத வேத அறிவில்லாத பேதுரு பிரசங்கம் பண்ணிய போது 3000 பேர் மற்றும் 5000 பேர் இரட்சிக்கப்பட்டார்களே. அவன் பிரசங்கம் பண்ணிய போது பிரசங்கத்தை கேட்ட அனைவரும் தேவ வல்லமையால் நிரப்பபட்டார்களே. இது யார் செயல்??  அவன் மேல் இருந்த தேவ வல்லமை அல்லவா? அதே மாதிரி உங்களையும் தேவன் இந்த கடைசி நாள்களில் பயன்படுத்த விரும்புகிறார். இயேசு சொன்னது போல பேசுவது நீங்களல்ல உங்களிடம் இருக்கும் பரிசுத்த ஆவியானவரே, அதாவது உங்களிடம் இருந்து பேசுவது பரிசுத்த ஆவியானவரின் குரலாக இருக்க வேண்டும். ஆவியிலே அனலாயிருங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள். என் ஊழியக்காரரை அக்கினி ஜூவாலையாக மாற்றுவேன் என்று கர்த்தர் சொன்னது முற்றிலும் உண்மை. அன்றைக்கு மேல் வீட்டறையில் தேவ வல்லமையை பெற்ற அப்போஸ்தலர்கள் தேவனால் மிகவும் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார்கள், அவர்கள் நாவிலிருந்தும் பேச்சிலிருந்தும் அதிகாரமும் வல்லமையும் கடந்து சென்றது, அவர்கள் மேலிருந்த அபிஷேகமே சகலத்தையும் போதித்தது, அவர்கள் ஊழியத்தில் தேவன் செய்ய சொன்னதை மாத்திரம் செய்தார்கள். பேச சொன்னதை மாத்திரம் செய்தார்கள், தேவ சித்தத்தை நிறை வேற்றினார்கள்.

இன்றைக்கு நீங்களும் இப்படி பட்ட கீழ்படிதலோடு ஊழியத்தை செய்ய உங்களை ஒப்பு கொடுங்கள். ஆமென்

bottom of page