நாம் கிறிஸ்துவை போல உயிர்தெழுவதற்கு தகுதி பெற்றிருக்கிறோமா??
இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை கொண்டாடுகிறோம். ஆனால் அதே உயிர்த்தெழுதல் நமக்கும் இருக்கிறது.அதை அறியாமல் இருக்கிறோம். இன்றைக்கு நாம் மரித்தால் கிறிஸ்துவை போல் அவர் வருகையில் உயிர்ப்பிக்கபடுவோமா?
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும் போது,ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம் எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும் போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 1 கொரிந்தியர் 15:52-55
அதாவது மரித்தோர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை போல அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்.
இந்த உலகத்தில் வாழ்கிற நாமும் மறுரூபமாக்கப்படுவோம். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:16,17
மேல் சொல்லப்பட்ட வசனங்களில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் என்று சொல்லப்பட்டதை கவனித்தீர்களா?
இன்றைக்கு நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.ஆனால் கிறிஸ்துவுக்குள் இல்லை. அதாவது ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய சிருஷ்டியாக இருக்கிறான். பழையனவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாகின.
கிறிஸ்துவின் ஆவி(கிறிஸ்துவின் திவ்விய சுபாவம்) இல்லாதவன் அவருடையவன் அல்ல.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
இன்னும் நாம் மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து கொண்டு உலகத்தானாக இருந்து கொண்டு கிறிஸ்துவினுடையவர்கள் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் அல்ல! கிறிஸ்துவையுடையவர்கள் மாத்திரமே அவர் வருகையில் மருரூபமாக்கப்படுவார்கள். கிறிஸ்தவனாக அல்ல...கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் தான் நித்திய ஜீவனை பெற்று கொள்வார்கள்.
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும்(கிறிஸ்துவை) உடையவன். 2 யோவான் 1-9
இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்படிகிறவர்கள் தான் கிறிஸ்துவை உடையவர்கள்.நாம் சகல சத்தியத்துக்குள் நடத்தபடுவதற்கு தான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப் பட்டிருக்கிறார்.இன்றைக்கு பரிசுத்த ஆவியானவருக்கு செவிக்கொடுக்காத அநேக சபைகள் உண்டு.
கிறிஸ்துவே சபைக்கு தலையாக இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. கிறிஸ்து சபைக்கு தலையானால் இயேசு சொன்ன வசனத்தின் படி சபை கீழ்படிய வேண்டும்.
இயேசு சொன்ன கட்டளைகளை புறம்பே தள்ளுகிற சபைகள் கிறிஸ்துவின் சபைகளல்ல.நீங்கள் ஒரு வேளை இயேசு கீழ்படிய சொன்ன வசனங்களுக்கு இன்னும் கீழ்படியாமல் இருக்கிறீர்களா?உங்களை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். உபாகமம் 10:13
அடுத்ததாக இந்த உயிர்த்தெழுதலின் ரகசியத்தை பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். யோவான் 5:28,29
அதாவது நன்மை செய்கிறவர்களுக்கு நித்திய ஜீவன்.தீமை செய்கிறவர்களுக்கு ஆக்கினை.இதை தான் அவர் அவனவன் கிரியைகளுக்ளுக்கான பலன் என்னோடே கூட வருகிறது என்றார்.
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. 3 யோவான் 1:11
இன்றைக்கு நாம் தீமைக்கு தீமையை சரிக்கட்டி கொண்டு தேவ நீதியை அறியாமல் நம் சுய நீதியினாலே நாம் செய்தது சரி என்று சொல்கிறோம், தீமையை நன்மை என்று சொல்கிறோம்.
தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! ஏசாயா 5:20,21
ஒருவனுக்கும் தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்.தீமையை வெறுத்து நன்மையை பற்றி கொண்டிருங்கள் என்று ரோமர் 12 ல் சொல்லபப்பட்டிருக்கிறதே.ஒருவன் உங்களுக்கு தீமை செய்தால் அதற்கு பதிலாக நன்மை செய்யுங்கள் என்று இயேசு சொன்னாரே.
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். பிரசங்கி 3:12
இறுதியாக பவுல் இப்படியாக சொல்கிறார்……
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் பாக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:10,11
பவுல் சொன்னதை கவனித்தீர்களா?மரித்தோரிலிருந்து எழுந்திருப்பதற்கு தகுதியாகும்படிக்கு எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணுகிறோமா?.
இன்றைக்கு நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது. மருரூபமாக்கப்படும் அனுபவத்துக்கும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்புவதற்கு தகுதியாகும் படிக்கு கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரிப்பதை குப்பையாக எண்ணி உலக ஆசை இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமைகளை லாபமாக எண்ணுகிறோம்.
பிரியமானவர்களை, நம்மை நாமே நிதானித்து அறிவோம். நாம் ஆலயத்துக்கு தவறாமல் போயும் கிறிஸ்துவின் வருகையில் எடுத்து கொள்ளபடவில்லையென்றால் எல்லா மனிதர்களை பார்க்கிலும் பரிதவிக்கபட்டவர்களாக்கப்படுவோம். ஒருவேளை இந்த உலகத்தில் மரணித்தால் அதாவது கிறிஸ்துவின் உபதேசத்துக்கு கீழ்படிந்து வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரிக்கவில்லையென்றால் அவர் வருகையில் ஆக்கினையை அடையும் படிக்கு உயிர்த்தெழுந்து புறப்பட்டு போவோம். எனவே இன்றைக்கு நம்மை நிதானித்து அறிந்து கிறிஸ்துவுக்காக வாழ நம்மை நாமே ஒப்பு கொடுப்போம்.
இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. 1 தெசலோனிக்கேயர் 3:13
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெசலோனிக்கேயர் 5:23.
தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். 1 கொரிந்தியர் 6:14
ஆமென் ஆமென்.