top of page

சபை கூடுதல் தேவையில்லை என்று போதிக்கும் தவறான கொள்கை

 

இன்றைக்கு சிலர் நம் சரீரம் தேவன் தங்கும் ஆலயம். எனவே நம் சரீரமே சபை. எனவே சபைக்கு போக வேண்டியதில்லை என்று தவறாய் போதிக்கிறார்கள்.

 

கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.  எரேமியா 7-4

 

பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஒவ்வொருவருடைய சரீரமும் தேவனுடைய ஆலயம் என்று வேதம் சொன்னாலும் அவருடைய நாமத்தினாலே இரண்டோ மூன்றோ அல்லது அநேகம் பேர்கள் கூடி வந்து ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும் ஸ்தலமும் அவர் அசைவாடும் ஆலயமே என்பதை மறுக்க முடியாது.இது தான் சபை கூடிவருதல். இதை விட்டு விடாதிருங்கள் என்று பவுல் எச்சரிப்பதை மறுப்பதற்கில்லை. வேதாகம வசனங்களை சோதித்து பாருங்கள். இப்படியும் எழுதப்பட்டிருக்கிறதே என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

 

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3-16

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3:17

 

அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.   ரோமர் 12-5

 

தேவனை ஒன்று சேர்ந்து ஆராதிக்கும் நாம் தான் அதாவது ஒரு கூட்டம் சபை என்கிற அமைப்பில் செயல்படுகிறது.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்றும் அழைக்கப்படுகிறது.

எனவே நம்முடைய சரீரமாகிய ஆலயம் மேலும் ஜனங்கள் கூடி ஆராதிக்கும் தேவாலயம் என்கிற கட்டிடம் அடுத்ததாக வெளிப்படுத்தின விஷேசத்தில் சொல்லப்பட்ட ஆட்டு குட்டியானவரே ஆலயமாக இருப்பார் என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு.இதை தெளிவாக விளங்கி கொள்ளாமல் நாம் தான் ஆலயம் எனவே சபைக்கு போக வேண்டியதில்லை என்று தவறாக போதிக்காதீர்கள்.

 

அன்றைக்கு தேவனை விட்டு விட்டு சபை கட்டிடங்களை  ஆராதித்து அதை மகிமைபடுத்தினபடியால் தேவன் இப்படியாக சொன்னார்.

 

 வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?  ஏசாயா 66-1

 

சபை கட்டிடத்தை அல்லது சபை அமைப்பை அல்லது ஊழியக்காரர்களை ஆராதிப்பதை விட்டு விட்டு ஆலயத்திலும் பெரியவரான இயேசுவை ஆராதிக்க வேண்டும்.

 

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று மத்தேயு 12-6 ல் இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

இயேசு அனுதினமும் தேவாலயத்தில் சத்தியத்தை போதித்தார்.

 

அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.  ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.  லூக்கா 21:37,38

 

இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் சபையில் ஊழியக்காரன் மூலமாக பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் ஜனங்களை கண்டித்து உணர்த்துகிறார்.

 

பவுல் இப்படியாக சொல்கிறார், உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.

கொலோசெயர் 1-26 அதாவது பவுல் தேவனால் ஜனங்கள் கூடுகிற சபைக்கு ஊழியக்காரனாக நியமிக்கப்பட்டார்.

 

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். எபிரேயர் 10-25

 

சபை கூடுதலை விட்டு விடாதீர்கள் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. சபை என்பது கிறிஸ்து தன்னுடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்தது.

 

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.அப்போஸ்தலர் 20-28

 

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.  அப்போஸ்தலர் 2-47

 

பழைய ஏற்பாட்டில் இருந்தே சபைகளை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சபை என்பது ஒரு கூடுகை. அது ஒரு கட்டிடத்தில் நடக்கலாம், வீடுகளில் நடக்கலாம். எங்கே எனது நாமத்தினாலே இரண்டோ மூன்றோ பேர்கள் கூடி வருகிறார்களோ அவர்கள் மத்தியில் இருக்கிறேன் என்று இயேசு சொன்னார். வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட ஏழு சபைகளை பார்க்கும் போது, அந்த சபைகள் எல்லாம் குறைகள் உள்ள சபைகள் தான் ஆனாலும் அந்த சபையை விட்டு வெளியே போ என்று தேவன் சொல்லவில்லை குறையை சரி செய்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார்.

 

  • சபைகள் ஜனங்களை தேவனுக்கு நேராக திருப்ப வேண்டும்.

  • சபைகள் ஜனங்களுக்கு இரட்சிப்பின் வழிகளையும் நித்திய வழிகளையும் போதித்து பரலோகத்துக்கு நேராக வழி நடத்தப்பட வேண்டும்.

  • சபைகள் குறை உள்ளது தான்  ஆனால் சபைக்கு போகக் கூடாது என்று சொல்லுவற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

  • சத்தியத்துக்கு புறம்பாக கள்ள போதகங்களை போதிக்கும் சபைகளை விட்டு விலக வேண்டும்.

 

கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது இதன் அர்த்தம் என்றால்? கிறிஸ்துவின் உபதேசத்தில் மேல்சபை கட்டப்படவேண்டும். தேவசித்தம் இல்லாமல் சபையில் எந்த ஊழியங்களையும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. அவருடைய அனுமதியைப் பெற்று தான் செய்ய வேண்டும் சந்திப்பின் நாளிலே ஆண்டவர் அந்த ஊழியக்காரரை நோக்கி சபையில் மற்றும் ஊழியங்களில் என் சித்தம் செய்தாயா என்று கேட்பார்.

இன்றைக்கு சில சபைகளில் ஊழியக்காரர்கள் கிறிஸ்துவுக்கு பதில் தாங்களே தலையாக இருந்து கொண்டு  இறுமாப்பாய் ஆளுகிறார்கள். தேவனுடைய சித்தத்தை செயல்படுத்தவில்லை. தேவன் சொன்ன ஐந்து விதமான ஊழியங்கள் சபையில் ஏற்படுத்தப்படவில்லை.

 

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,  எபேசியர் 4:12

அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:13

பல சபைகள் இந்த மாதிரியின் படி சுவிசேஷகர்களை மிஷனரிகளை அனுப்புகிறார்கள்.

 

இன்றைக்கு வேதாகமத்தை கற்றுத் தேர்ந்து விட்டோம் எனக்கு எல்லாம் தெரியும் நான் புதிய வெளிப்பாட்டை பெற்றிருக்கிறேன் என்று சொல்கிறவர்கள்  பெருமையினால் தான் சபைக்கு போவதில்லை. அவர்கள் சபைக்கு போய்  சபையில் போதிக்க படுவதை உட்கார்ந்து கேட்பதில்லை.எனக்குத் தெரிந்த முன்னணி சுவிசேஷகர்கள் அதாவது தேவனால் உலகமெங்கிலும் வல்லமையாக  பயன்படுத்தக்கூடிய ஊழியக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரு சபையில் போய் விடுகிறார்கள் அவர்கள் அங்கு போகும் போது அந்த சபையில் உள்ளவர்கள் நீங்கள் இன்றைக்கு இங்கு பிரசங்கிக்க வேண்டும் என்று சொல்லும்போது அவர்கள் சொல்கிறார்கள். இல்லை இல்லை நாங்கள் கேட்பதற்காக வந்திருக்கிறோம் என்று தங்களை தாழ்த்தி அங்கு போதிப்பதை கேட்கிறார்கள்.  அநேக சுவிசேஷகர்கள் ஒரு சபையில் அங்கமாகி அவர்கள் சுவிசேஷ ஊழியத்தை செய்கிறார்கள். எந்த ஊழியத்தை நீங்கள் செய்தாலும் ஒரு சபையில் அங்கமாக இருக்க வேண்டும்.

அல்லது ஒரு சபை கூடுகையில் இணைந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சபையார் அவர்களுக்காக ஜெபிப்பார்கள். பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை. சபையின் பாதுகாவல் அவர்களுக்கு உண்டு.

 

மற்றவர்களுக்கு போதிக்கிற நீங்கள் சத்தியத்தை கேட்க வேண்டும்.சபையில் ஜனங்களோடு சேர்ந்து தேவனை ஆராதிக்க வேண்டும். கேட்கிறதற்கு தீவிரமாயிருங்கள் என்று  வேதம் சொல்கிறது. இன்றைக்கு  கொஞ்சம் சத்தியத்தை அறிந்தவர்கள் பிறர் சொல்வதை கேட்பதில்லை. ஓயாமல் பேசி கொண்டே இருக்கிறார்கள்!! . எனக்கு எல்லாம் தெரியும் என்று தங்களை தானே மேன்மையாக எண்ணி கொண்டு வீம்புகளில் மேன்மை பாராட்டி கொண்டு கடைசியில் வீழ்ந்து போனவர்கள்.  .ஏனென்றால் இவர்கள் இயேசுவின் மனத்தாழ்மையான நுகத்துக்குள் இல்லை.

 

ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.  1 கொரிந்தியர் 8-2

 

இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா.   ரோமர் 2-21

மற்றவனுக்கு போதிக்கிற நீ போதிக்கப்பட வேண்டும்.உன் செவிகள் சத்தியத்தை கேட்பதற்காக தீவிரித்து வர வேண்டும்.இந்த கடைசி நாள்களில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற பெருமையால் வஞ்சிக்கப்படாதிருங்கள்

 

தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;  எண்ணாகமம் 24-16

 

மேற் சொல்லப்பட்ட வசனங்களில் தீர்க்கதரிசி தாழ விழுந்து தன்னை தாழ்த்துவதை பாருங்கள். நீங்கள் வசனத்தை தேவ வசனத்தை போதிக்கிறவர்களாயிருந்தால் இயேசு கிறிஸ்து உனனதத்திலிருந்து வந்து சீஷர்களின் கால்களை கழுவின தாழ்மையின் மாதிரி இருக்கட்டும்.

உலகெங்கிலும் வல்லமையாக பயன்படுத்தபடுகிற ஊழியக்காரர்கள் தங்களை தாழ்த்தி ஒரு சபையின் ஓரத்தில் போய் உட்கார்ந்து சத்தியத்தை கேட்கும் போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சபை கூடுதலை புறக்கணிக்கும் நீ வானத்துக்கு மேலே ஏறிக் கொண்டிருக்கிறாய்.

 

பவுல் பரலோக தரிசனங்களை கண்டவுடன் தன்னை தானே தாழ்த்துகிறான்.

சுவிசேஷத்தை குறித்து மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை என்று பவுல் சொன்னதை கவனித்தீர்களா?ஏசாயா தீர்க்கதரிசி தேவ தரிசனங்களை கண்டவுடன் ஐயோ அதமானேன்...நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் என்கிறான். யோவான் இயேசுவை பார்த்தவுடன்  செத்தவனை போல அவர் பாதத்தில் விழுந்தான்.வேதத்தை போதித்து கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் நான் யார் சொல்வதையும் கேட்கமாட்டேன் என்று உங்களை உயர்த்தி கொள்ளாதீர்கள்.இயேசு கிறிஸ்து ஊழியத்தை செய்த பிறகு அப்பிரயோஜனமான ஊழியக்காரன் கடமையை மாத்திரம் செய்தேன் என்று சொல்ல சொன்னது நினைவிருக்கட்டும்.

 

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17-10.

ஆமென்

bottom of page