top of page

பரத்திலிருந்து கொடுக்கப்பட்டஅந்நிய பாஷை என்கிற பரிசுத்த ஆவியின் வரத்தை உங்கள் குறைந்த அறிவினால் விமர்ச்சிக்க வேண்டாம்.

 

பெந்தேகோஸ்தே எந்த நாள் வந்த போது மேல் வீட்டு அறையில் அவர்கள் கூடி  வந்த போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். அக்கினிமயமான நாவுகளைப் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் மேல் வந்து அமர்ந்தது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படி வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். ஆவியானவர் கொடுத்த வரத்தின் படி பேசப்பட்டது தான் அந்நியபாஷை. அன்றைக்கு  அங்கு பல பாஷைகளை பேசும்  ஜனங்கள் இருந்தார்கள், அங்கு இருந்த எல்லாரும் இவர்கள் தம்முடைய ஜென்ம பாஷையில் பேசுகிறார்களே?  இவர்கள் நம்முடைய பாஷைகளிலே தேவனுடைய மகத்துவங்களை பேச கேட்கிறோமே? என்று பிரமித்தார்கள், சந்தேகப்பட்டார்கள். இது எப்படி முடியுமோ என்று ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டார்கள். ஆனால் ஒரு கூட்டம் ஜனங்கள் இவர்கள் மதுபானத்தினால் நிறைந்து இருக்கிறார்கள் என்று பரிகாசம் பண்ணினார்கள். ஏன் பரிகாசம் பண்ணினார்கள் தெரியுமா? இவர்களுக்கு அந்த பாஷை புரியவில்லை! அவர்கள் புரியாத பாஷையிலும் பேசினார்கள்! அன்றைக்கு கேட்ட சிலரால் அதன் அர்த்தத்தை விளங்கி கொள்ள முடியவில்லை.

எனவே அவர்கள் குடித்திருக்கிறார்கள் என்றார்கள். அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் 13 ம் வசனத்திலே இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

எல்லாமே பரிசுத்த ஆவியினாலே நிகழ்த்தப்பட்டது. மேலும், அவர்கள் பரிசுத்த ஆவியினாலே  நிறைந்து பேசினார்கள். அடுத்தவர்களுடைய மொழியிலும் மேலும், புரியாத மொழியிலும் பேசினார்கள். வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 12:10

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தில் ஒருவனுக்கு பற்பல பாஷைகளை பேசும் வரம் பரிசுத்த ஆவியானவராலே கொடுக்கப்படுகிறது.இந்த நிகழ்வுகள் மேல் வீட்டறை அனுபவத்துக்கு பிறகு பல இடங்களில் ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்ட போது நடந்தது.

 

மேலும், மனிதர்கள் அறியாத அதாவது விளங்காத பாஷைகளை பேசினார்கள். 1 கொரி 14 ம் அதிகாரம் 2 ம் வசனத்தில் பவுல் இதை உறுதிப்படுத்துகிறார்.

 

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.  1 கொரிந்தியர் 14:2.மேலும், 8 வது வசனத்திலே எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுவான்? என்று விளங்காத பாஷைகள் சபையில் பேசப்பட்டதை பவுல் உறுதிப்படுத்துகிறார்.

 

அந் நாள்களில் அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத அந்நிய பாஷைகள் சபைகளில் பேசப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

 

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?  1 கொரிந்தியர் 14:23

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தில் படி வேத ஞானம் இல்லாதவர்கள் மற்றும்  அவ்விசுவாசிகளாவது சபையில் நுழையும் போது நீங்கள் விளங்காத பாஷையை பேசிக்கொண்டிருந்தால்  அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்று சொல்வார்கள் அல்லவா என்ற அர்த்தத்தில் பவுல் சொல்லியிருக்க கூடும்.

 

இதிலிருந்து ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்!, அந்நிய பாஷை என்பது பிறருடைய பாஷைகளில் பேசுவது மாத்திரமல்ல, விளங்காத பாஷைகளிலும் பேசுவது என்பது வசனத்தாலே உறுதிப்படுத்தப்பட்டது. ஒருவனுக்கு வியாக்கியானம் பண்ணும் வரம் இருக்குமானால் அதன் அர்த்தத்தையும் சொல்ல முடியும். இதை தான் 13 ம் வசனத்திலே அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதன் அர்த்தத்தையும் சொல்லும் வரத்தை பெற்று கொள்ள விண்ணப்பம் பண்ண வேண்டும் என்று பவுல் ஆலோசனை சொல்கிறார். பிறருடைய மொழியில் பேசும் போது அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

மேலும் 26, 27 வசனங்களில் நீங்கள் கூடி வந்திருக்கும் போது  ஒருவன் சங்கீதம் பாடுகிறான் ஒருவன் போதகம் பண்ணுகிறான் ஒருவன் அந்நியபாஷை பேசுகிறான் ஒருவன் ரகசியத்தை வெளிப்படுத்துகிறான். இது என்ன சகலமும் பக்தி விருத்திக்காக செய்யப்படுவது யாராவது அன்னியபாஷை பேசுவது உண்டானால் அது இரண்டு பேர் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் அடங்கவும் அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும் அதன் அர்த்தத்தையும் சொல்லவும் வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்.

 

அன்றைக்கும் இன்றைக்கும் கூட  சபைகள் கூடிவரும் போது பரிசுத்த ஆவியானவரின் நிறைவு வரும்போது அநேகர் பலவிதமான பாஷைகளைப் பேசுகிறார்கள். பலர் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.இந்தமாதிரி சம்பவங்கள் அநேக சபைகளில் இன்றைக்கும் நடக்கிறது.

 

அன்றைக்கும் அர்த்தம் சொல்லாமல் அந்நிய பாஷை பேசினார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று சொல்கிற   பிரசங்கிகள் அந்நிய பாஷை என்பது பிறருடைய பாஷைகளை பேசுவது.அது அன்றைகே முடிந்து விட்டது என்று தங்கள் குறைந்த அறிவினால் தவறாக போதிக்கிறார்கள். அடுத்ததாக, அநேகர் தங்கள் ஸ்தாபன கொள்கைகளுக்காக ஆவியானவரின் வரங்களை புறம்பே தள்ளி விடுகிறார்கள்.

 

பலர் அந்நிய பாஷை வரத்தை பெற்று கொள்ளாததினாலே இவர்கள் பேசுவது சரியான அந்நிய பாஷை இல்லை என்கிறார்கள்.மேலும் அந்நிய பாஷை வரம் தேவையில்லாத ஒன்று என்று தேவனால் கொடுக்கப்பட்ட வரத்தையே உதாசினப்படுத்துகிறார்கள்.

 

பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். ஏசாயா 28-11.

 

இது பழைய ஏற்பாட்டிலே முன் குறிக்கப்பட்ட காரியம். 1 கொரி 13-1 ல் மனுஷர் பாஷை மற்றும் தூதர் பாஷைகளை பேசுவது பற்றி பவுல் எழுதுகிறார்.

 

இதன் ஆழங்களை நம்மால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எனவே  உங்களுடைய குறைந்த அறிவினாலே பரிசுத்த ஆவியானவருடைய கிரியைகளை தவறாக விமர்சிக்காதீர்கள்.அந்நிய பாஷை ஒழிந்து போகும் என்று ஒருவர் சொல்கிறார்.  தேவனுடைய வார்த்தை ஒரு நாளும் ஒழிந்து போகாது. அந்நிய பாஷை ஒழிந்து போகும் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய நிறைவு குறையும் போது அந்நிய பாஷை ஓய்ந்து போகும்.!(பார்க்க அப் 13-8.)

 

உங்களுக்கு அந்நிய பாஷை வரம் இல்லையென்றால் பரவாயில்லை!!  அந்நிய பாஷை வரமும் குணமாக்கும் வரத்தை போன்ற ஒரு வரம் தான்.எனவே தாழ்வு மனப்பான்மை வேண்டாம். மேலும், பவுல் சொல்லும் ஆலோசனையை கட்டளையாக சட்டமாக சொல்லி தடை உண்டாக்க வேண்டாம்.

பரிசுத்த ஆவியானவரை பவுலை விட குறைத்து மதிப்பிட்டு பேச வேண்டாம். பவுல் அந்நிய பாஷை பற்றி பல காரியங்களை ஆலோசனையாக  கொடுத்து விட்டு கடைசியில் அன்னியபாஷை பேசுவதை தடை பண்ணாதீர்கள் என்று சொல்வதைப் பார்க்கலாம்.அதே மாதிரி உங்களுக்கு அந்நிய பாஷை வாரம் இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.அந்த வரத்தை பற்றி தவறாக ஜனங்களிடம் போதிக்காதீர்கள். அப்படி தேவன் தரும் ஈவுக்கு எதிராக போதிப்பது கர்த்தருடைய பார்வையில் தவறானது. பரத்திலிருந்து அவர் கொடுக்கக்கூடிய எந்த வரமும் விலை மதிக்க முடியாதது தான்.

 

அடுத்ததாக அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். 1 கொரிந்தியர் 14:28.

 

மேற் சொல்லப்பட்ட வசனத்திலே புரியாத பாஷையை பேசுவதால் தானே அர்த்தம் சொல்கிறவன் இல்லாவிட்டால் என்கிற வார்த்தையை பவுல் பயன்படுத்துகிறார்.

 

அந்த நாள்களில் வேதாகமம் அநேகரிடம் இல்லை.வேத அறிவு கூட அனைவருக்கும் கிடையாது.அது மாதிரி சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட காரியங்களை பவுல் சொல்லியிருக்கலாம். ஆனால் இன்றைக்கு ஒரு சபையிலே விசுவாசிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், வேதம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் அந்நியபாஷை பேசுவதில் தடை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

 

இன்றைக்கு பெரும்பாலான சபைகளில் அந்நிய பாஷைகளினால் தேவனை துதிக்கிறார்கள். ஆனால்  தீர்க்கதரிசனம் அந்நியபாஷையில் சொல்லும் போது அது நிச்சயமாக வியாக்கியானம் பண்ணப் படவேண்டும். அதாவது அர்த்தம்  சொல்லப்பட வேண்டும்.

 

 ஒருவர் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு இருதயத்தின் நிறைவினால் வாய் பேச வேண்டும். ஆனால் சிலர் அன்னிய பாஷை பேசி பேசி அது  அவர்களுடைய மூளையில் பதிவாகிவிடும். இப்பொழுது அவர் எந்த சூழ்நிலையிலும் அந்நிய பாஷை பேச ஆரம்பித்து விடுவார், அவர் ஒரு வேளை ஏதாவது பாவத்தில் விழுந்து விடலாம்.  குடிக்கலாம் அல்லது அல்லது துன்மார்க்கமான காரியங்களை செய்யலாம். ஆனால் அவர் சபைக்கு வரும் போது மூளையில்  இருக்கக்கூடிய ஞாபக சக்தியினாலே அன்னிய பாஷை பேசுவார். அதாவது,  ஒரு புது மொழியை பேசி பேசி கற்று கொண்டவரை போல அந்நிய பாஷையை பேசுவார். எனவே இப்படி பட்ட அந்நிய பாஷை ஆவியின் நிறைவிலிருந்து வரவில்லை என்பதை பகுத்தறிய வேண்டும்.

 

அடுத்ததாக பிசாசுகள் கூட அந்நிய பாஷை பேசக் கூடும்.எனவே கர்த்தராகிய இயேசு சொன்னது போல வாரங்களினால் ஒருவரை நிதானித்து அறிவதை விட கனிகளினால் நிதானித்து அறியுங்கள்.

 

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 1 கொரிந்தியர் 13:1

 

பவுல்,நான் ஆவியிலும் விண்ணப்பம் பண்ணுவேன் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன் என்று சொல்வதைப் பார்க்கலாம். அதாவது பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷையிலே தான் பேசுவதை அவர் ஆவியிலே விண்ணப்பம் பண்ணுவதாக குறிப்பிடுகிறார். அன்னிய பாஷையில் தேவனோடு பேசுவது என்பது இது தான். கருத்தோடு என்றால் தெளிவான வார்த்தையினாலே அதன் அர்த்தத்தை எல்லாரும் விளங்கி கொள்ளும் படிக்கு அவர் விண்ணப்பம் பண்ணுவதை குறிப்பிடுகிறார்.

 

 உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும் நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.  1 கொரிந்தியர் 14:18,19.

 

பவுல் தன் விருப்பத்தையே ஆலோசனையாக குறிப்பிடுவதை புரிந்து கொண்டீர்களா?எனவே சில வசனங்களை வைத்து கொண்டு ஒட்டு மொத்தமாக அந்நிய பாஷை என்கிற வரத்தை தடை பண்ண வேண்டாம், அதற்கு எதிராகவும் பேச வேண்டாம். மேலும், அந்நிய பாஷை பேசுகிறவர்கள் வீண் புகழ்சிக்காக தங்களை உயர்த்தி கொள்ளவும் வேண்டாம்.

 

எங்களுக்கு தான் அந்நிய பாஷை வரம் இருக்கிறது என்கிற மேட்டிமை வேண்டாம்.தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.

 

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.  நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன் ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 14:5.

 

அந்நிய பாஷை பேசுகிறவன் பக்தி விருத்தியடைகிறான். மேலும், தேவனோடு பேசுகிறான் என்று பவுல் மேன்மையாக சொல்கிறாரே.

 

எனவே அந்நிய பாஷை வரத்தை பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அதன் அர்த்தத்தை சொல்லும் வரத்தையும் பெற்று கொள்ள வாஞ்சியுங்கள்.

 

ஆமென் ஆமென்.

bottom of page