top of page

நான் இவர்களை விட பெரியவன்

 

னக்கு எல்லாம் தெரியும் ஆனால் எனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற இந்த இரண்டு வார்த்தைகளில் அதிக வித்தியாசம் உண்டு. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று சொல்லுகிறவர்கள் தங்கள் பெருமையை தங்களது கிரியைகளில் தங்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள். மேலும்,  ஊழியத்தில் எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று பெருமை  பேசி தங்களை உயர்த்தி கொள்கிறவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் அங்கீகாரம் தேடுகிறவர்களாக இருப்பார்கள். ஊழியத்தில் இவர்களை கனப்படுத்தி முதன்மையான இடங்களில் உட்கார வைத்தால் தான் இவர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் புறக்கணிக்கப்படும் போது இவர்களால் தாங்க முடியாது ஏனென்றால் தங்கள் சுயப் பெருமையை சிலுவையில் அறையாதவர்கள்.
 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய ராஜியத்தில் ஊழியம் செய்கிறவர்களை   அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல்ல சொன்னார்.ஏனென்றால் ஊழியத்தில் எவ்வளவு வேத அறிவு இருந்தாலும்,எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாலும் தேவன் கிரியை செய்தால் தான் பலன் கிடைக்கும்.
 

ஏனென்றால் விளையச் செய்கிறவர் தேவன் ஒருவரே. எனவே ஊழியத்தில் நாம் சுயமாக ஒன்றும் செய்யாமல் நம்மை அழைத்த எஜமானுக்கு அடிமையாய் இருப்பது தான் சரியானது. ஒரு வேளை நீங்கள் ஒரு ஊழியத்துக்கு போகலாம், அங்கு பல ஊழியக்காரர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம், ஆனால்அங்கு உங்களுக்கு எந்த பகுதியும் கொடுக்கப்படாமல் இருக்கலாம் அதற்காக உங்களை  புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லி விடக்கூடாது. அந்த இடத்தில் நாம் கேட்பதற்காக தேவன் நம்மை அனுமதித்திருக்கலாம்.அநேக ஊழியக்காரர்கள் கேட்பதில் தீவிரமாக இருப்பதில்லை.

 

ஒரு தேசத்தில் திறப்பின் வாசல் ஜெபம் நடந்தது ஒரு ஊழியக்காரர்  வெளியரங்கமாய் எனக்கு எந்த ஒரு பகுதியும் கொடுக்க வில்லை, இவர்கள் எல்லாம் ஆராதனையா நடத்துகிறார்கள்? இவர்கள் செய்வதெல்லாம் பிரசங்கமா? எனக்கு  கொடுத்து பாருங்கள் என்று தன்னை உயர்த்தி கொள்ள ஆரம்பித்தார்.

 

அதன் பிறகு அந்த கூடுகைக்கு வரவே மாட்டார். உங்களுக்கு ஜனங்களோடு ஜனங்களாக அமர்ந்து நம்மை அழைத்த தேவனுடைய ராஜியத்துக்காக     தேசத்தின் ஜனங்கள் இரட்சிப்புக்காக ஏன் ஜெபிக்க முடியவில்லை?

 

உங்களை எது தடை செய்கிறது? உங்களிடம் இருக்கும் நான் இவர்களை விட எல்லாம் தெரிந்தவன் மேலும் நான் இவர்களை விட பெரியவன் என்கிற சுயப் பெருமை தானே.உங்களை அழைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவி உங்களுக்கு மாதிரியை காண்பித்தாரே.

 

அவருடைய அடிச்சுவடை நீங்கள் பின்பற்றவில்லையே?

உங்களை தாழ்த்தாதபடி தடை செய்வது நான் வேதாகமத்தில் எல்லாம் கற்றவன்,நான் வேத அறிஞன்.நான் போதகர்,நான் ஆராதனை வீரன், நான்  Bishop என்கிற வீண் பெருமை தானே.தேவன் உங்களுக்கு கொடுத்த வேத ஞானமும் பதவிகளும் மற்றும் அந்தஸ்தும் உங்களை தேவ சமூகத்தின் கூடுகையில் உங்களை தாழ்த்தாதபடிக்கு தடுக்குமானால் நீங்கள் உங்கள் பெருமையினால் தேவனுக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்.

 

ஒருவன் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று சொல்வானாகில் அவன் அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் ஒன்றையும் அறிந்து கொள்ளவில்லை என்று வேதம் சொல்கிறது.

 

எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று தங்களை காண்பிக்கிற இவர்களிடம் இருப்பது வேத அறிவு தான்.ஆனால் தேவனை இன்னும் அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் அறிந்து கொள்ளவில்லை.

 

இன்றைக்கு பலர் வேத வசனங்களை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதாகமத்தில் பட்டங்களும் பெற்றிருக்கிறார்கள்.ஆனால் அதை அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் அறிய வில்லை.  வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்.

லூக் 24-45

 

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.  1 யோவான் 2:20

 

அன்றைக்கு இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு வேத ஞானத்தை கொடுத்தது வேதாகம பட்டங்களோ படிப்போ அல்ல, அவர்களுக்கு கற்று கொடுத்தது பரிசுத்த ஆவியானவரே.

இன்றைக்கு வேதாகமத்தில் பட்டம் பெற்றவர்கள் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற பெருமையினால் வேதாகம கல்லூரியில் படிக்காதவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். ஆனால் வேதாகம கல்லூரியில் படிக்காத அநேகர் தேவ வல்லமையால் அநேகரை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்துகிறார்கள்.

 

வேதாகம கல்லூரியில் படிப்பது நல்லது தான் ஆனால் வேதாகம கல்லூரியில் படித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் என்கிற நிலைப்பாடு தவறானது.

 

அன்றைக்கு ஊழியம் செய்து விட்டு சந்தோஷத்தோடே வந்து உமது நாமத்தினாலே பிசாசு ஓடுகிறது...நோய்கள் குணமாகிறது என்று சொன்னவர்களை பார்த்து இயேசு கிறிஸ்து, இதற்காக சந்தோஷப்படாமல் பரலோகத்தில் உங்கள் பெயர் எழுதியிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள் என்றார்.

இன்றைக்கு ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட நாம் பரலோகத்தின் மகிமையை மறந்து உலக மகிமையை தேடி முதன்மையான இடங்களை வாஞ்சிக்கிறோம்.

 

முதன்மையான இடம் என்பதற்கான பரலோகத்தின் தேவனுடைய அளவு கோல் என்ன தெரியுமா?

 

 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  மத்தேயு 20-27

 

இதை இன்னும் விளக்கமாக இயேசு சொன்னார்.

 

அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்.  மாற்கு 9-35

 

இன்றைக்கு உங்களை ஒரு வீட்டிற்கோ அல்லது சபைக்கோ ஊழியத்துக்காக அழைக்கும் போது உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்  பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள், என்று தேவன் அடையாளப்படுத்தினார்.

 

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.  சங்கீதம் 138-6

 

இருதயத்தில் பெருமை என்கிற தேவனுக்கு எதிரான காரியமாகிய அசுத்தம் இருக்குமானால் நாம் இயேசு கிறிஸ்து சொன்ன மனத்தாழ்மையின் நுகத்தை இன்னும் அணிந்து கொள்ளவில்லை.நம்மை ஆளுகை செய்கிற பெருமையின் நுகம் யாருடையது என்பதை நிதானித்து அறிய வேண்டும்.

 

ஒரு முறை ஒரு  தேசத்திலே ஒரு சபையினர் ஒரு அருமையான ஊழியக்காரரை அழைத்திருந்தார்கள்.அவர் இந்திய தேசத்திலிருந்து வந்திருந்தார், கடைசி நாள் கூட்டத்துக்கு அந்த சபையினர் அங்குள்ள எல்லா சபை ஊழியக்காரர்களையும் அழைத்தார்கள்.

எல்லா சபை ஊழியக்காரர்களும் கலந்து கொண்டார்கள்.ஆனால் சில பெரிய சபை போதகர்கள் இதில் கலந்து கொள்ளாமல் அவர்களது அழைப்பை உதாசினப்படுத்தினார்கள். இவர்களால் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை தெரியுமா?நாங்கள் பெரியவர்கள்.

அங்கெல்லாம் வந்து அமர மாட்டோம் என்கிற மேட்டிமை தான்.வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தன் கனத்தையும் மகிமையையும் விட்டு விட்டு பிலாத்துவின் அரண்மனையில் தன்னை  அவமானப்படுத்துகிறவர்கள் மத்தியில் நம்முடைய இரட்சிப்புக்காக பொறுமையோடு நின்று கொண்டிருந்தார்.ஆனால் இவர் அழைத்த ஊழியக்காரர்களோ பிரசங்க மேடையில் தாழ்மையை பற்றி வாய் கிழிய பிரசங்கிக்கிறார்கள், கிரியைகளிலோ நான் பெரியவன் என்கிற மேட்டிமையை காண்பிக்கிறார்கள்.இன்றைக்கு இயேசு கிறிஸ்து நமக்கு காண்பித்த அடிமையின் சாயலாகிய  அடிசுவடை பின்பற்றும் ஊழியக்காரர்கள் எங்கே?நான் வானத்துக்கு ஏறுவேன். நான் அங்கெல்லாம் வர மாட்டேன்  என்று சொல்கிற ஊழியக்காரர்கள் தான் அநேகர்.

 

  • இவர்களுடைய அடிச்சுவடு யாருடையது என்பதை விளங்கி கொள்ளுங்கள்.

 

  • இவர்கள் தங்கள் ஸ்தானத்தை விட்டு இறங்காமல் மனித புகழ்சியை விரும்பி முதன்மையான இடங்களை நாடுகிறவர்கள்.

 

  • இவர்கள் இருதயத்தில் இருக்கும் பெருமையை நிதானித்து அறிந்தார்களென்றால் மனம் திரும்பியிருப்பார்கள்.

 

நான் பெரியவன் என்கிற இந்த பெருமையின் ஆவியினாலே வீழ்ச்சியடைந்த ஊழியக்காரர்கள் அநேகர்.தாங்கள் செய்த ஊழியங்களை குறித்து உலகத்திலும் இணையதளத்திலும் தாரை ஊதின இவர்கள் தான் சந்திப்பின் நாளிலே கர்த்தரை நோக்கி உமது நாமத்தினாலே பெரிய காரியங்களை செய்தோம் என்று சொல்வார்கள்.

 

தேவன் தன்னை அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் அறிந்து கொள்ளாத இவர்களை பார்த்து அக்கிரம சிந்தை காரர்களே உங்களை அறியேன் என்பார்.

 

ஆனால் இன்னொரு பக்கம்  மறைந்திருந்து ஊழியம் செய்கிற அநேக உண்மையாக ஊழியக்காரர்கள் மூலம் தேவன் பெரிய காரியங்களை இன்றைக்கும் செய்கிறார்.அவர்கள் தங்களை தாழ்த்தி தங்களை மறைத்து தேவனே எல்லாவற்றையும் நீர் தானே செய்தீர் என்று அவரை மகிமை படுத்துகிறார்கள். இவர்களது பலன் பரலோகத்தில் மிகுதியாக இருக்கும்.

 

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.  1 கொரிந்தியர் 11

 

ஆமென்.

bottom of page