top of page

பிசாசை துரத்தாவிட்டால் பட்டயத்தால் விழுவீர்கள்

 

உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத்துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். லேவி -26-7,8

இன்றைக்கு தேவனால் அழைக்கபட்ட நாம் பிசாசுகளை துரத்துவதற்கு பதிலாக மனிதர்களோடே போராடி கொண்டிருக்கிறோம்.

மனிதர்களோடு நமக்கு போராட்டம் இல்லை அதற்கு மாறாக பொல்லாத சேனைகளின் ஆவிகளோடு நமக்கு போராட்டம் உண்டு.பலவானை முந்தி கட்டுங்கள் என்று இயேசு எச்சரித்தார்.ஆனால் இன்றைக்கு அநேக விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் பிசாசை துரத்த திராணியற்றவர்களாய் இருப்பது தான் பரிதாபம்.நீங்கள் உங்களை சுற்றியுள்ள சத்துருக்களை துரத்தாவிட்டால் நீங்கள் மேற்கொள்ளப்படுவீர்கள்.

 

 பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.  1 யோவான் 3-8

 

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10-38

 

இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பிசாசை துரத்தினார்கள். தேவன் இன்றைக்கும் ஊழியம் செய்கிறவர்களுக்கு பொல்லாத ஆவிகளை துரத்த அதிகாரங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அநேகர் இதை அறியாமல் மேலும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். மாற்கு 16-17

 

இன்றைக்கு விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்த திராணியற்றவர்களாக இருக்கும் போது இருளின் வல்லமைகளால் அவர்கள் மேற் கொள்ளப்படுகிறார்கள். இன்றைக்கு உங்கள் பகுதியில் சாத்தானின் அதிகாரங்கள் தீவிரித்து வருவதற்கு காரணம் நீங்கள் பலவானை முந்தி கட்டாதது தான். இன்றைக்கு, சபைகள் கூட விசுவாசிகளுக்கு ஊழியம் செய்ய பயிற்சியளிக்காமல் இருப்பதால் இன்றைக்கு அநேக விசுவாசிகள் சபைகளில் கட்டபட்ட நிலையில் அதாவது அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உலர்ந்து போன எலும்புகளாக சபைகளில் இருக்கிறார்கள்.

 

கர்த்தருடைய சேனையில் பிசாசின் வல்லமைகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் படியாக அழைக்கப்பட்ட பல வாலிபர்கள் சபையில் பல வருடங்களாக சமையல் பண்ணி கொண்டும் எடுப்பிடி வேலைகளை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஒரு முறை ஒரு சபைக்கு அவசரமாக புறப்பட்டு போன வாலிபனிடம் என்ன அவசரம் என்று கேட்ட போது, சபையில் சாம்பார் வைக்க வேண்டும் அது தான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை என்றார். நல்லது தான் ஆனால் பல வருடமாக சாம்பார் வைத்து கொண்டிருக்கும் அவர் தன் வீட்டில் பலவீனமான அம்மாவுக்கு சமையலில் ஒரு நாள் கூட உதவி செய்தது கிடையாது. தேவனுக்கு கீழ்படிவதை விட பாஸ்டருக்கு தான் கீழ்படிகிறார்கள். தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் ஓடிப் போவான் என்று வேதம் சொல்கிறது.

 

இன்றைக்கு பல சபைகளில் விசுவாசிகளுக்கு பயிற்சி கொடுத்து ஊழியம் செய்யாதபடி அடிமைத்தனத்தில் வைத்திருப்பவர்கள் ஊழியக்காரர்களும் அவர்களது பாரம்பரிய சட்டதிட்டங்களும் தான். இவர்கள் ஒரு நாள் தேவனுக்கு கணக்கு கொடுக்கும் காலம் வரும்.உனக்குத்  இவ்வளவு ஜனங்களை தந்தேனே...எத்தனை பேர்களை எனக்காக உருவாக்கினாய் என்று தேவன் கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

பல சபைகளில் விசுவாசிகள் அந்த சபை கட்டடத்தோடும்,சபை அமைப்புகளோடும் ஊழியக்காரரோடும் தான் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தேவனோடு இணைக்கப்படவில்லை.

 

பல ஊழியக்காரர்கள்  பாஸ்டர்,பிஷப்,டாக்டர்,கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்கள்.ஆனால் பிசாசை துரத்த திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஊழியக்காரன் தேவ வல்லமையால் பிசாசை துரத்துகிறார். சாத்தான் அவனை பார்த்து நடுங்குகிறான்.

 

ஒரு முறை சாத்தான் சபையில் ஊழியம் செய்து இரட்சிக்கப்பட்ட  ஒருவர் சொன்னது, ஒரு தேவ மனுஷனை உபத்திரவப்படுத்த பொல்லாத ஆவிகளை ஏவி விட்ட போது சாத்தான் சொன்னானாம் அவனிடம் மாத்திரம் போகாதீர்கள். அவன் தேவனுக்கு பயப்படுகிறவன்.சத்தியத்தில் நடக்கிறவன்.தேவ வல்லமையை பெற்றவன். அவன் எல்லைக்குள்ளாக போனால் நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்றானாம்.

 

இன்றைக்கு அநேக விசுவாசிகள் கூட தேவன் தனக்கு தந்த வல்லமைகளால் பிசாசை துரத்துகிறார்கள்.

 

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;  சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16:18

 

இன்றைக்கு பல தேசங்களிலும் பல இடங்களிலும் இருக்கிற விசுவாசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் ஏன் போராட்டம் தெரியுமா?அவர்கள் சத்துருக்களை துரத்தவில்லை.அவர்கள்  பிசாசுக்கு எதிர்த்து நிற்க்கவில்லை. ஒரு இடத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட போலீஸ் அதிகாரி அந்த இடத்தில் குற்றங்கள் நடப்பதை கண்டும் காணாமல் இருந்தால் அதாவது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாமல் இருந்தால் அவர் தண்டிக்கப்படுவார். மேலும், அவர் அந்த பகுதியில் உள்ள ரவுடிகளை துரத்தாமல் இருந்தால் அவர் மேற்கொள்ளப்படுவார்.

இன்றைக்கு இத்தகய போலீஸ் அதிகாரியை போல தான் விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் இருக்கின்றனர்.

 

துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்கு முன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.  லேவியராகமம் 26-37

 

இன்றைக்கு அநேக கிறிஸ்தவ குடும்பங்களிலும் சபைகளிலும் நடக்கும் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் துரத்துகிறவர்கள் இல்லை.இவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதால் சத்துருக்களுக்கு முன் நிற்க பெலனற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

 

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,  அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,  தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன். சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.  நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.  அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.   எண்ணாகமம் 33:51-56

 

ஒரு முறை கூட இந்த வசனத்தை கவனமாக படியுங்கள்.இதில் சொல்லப்பட்ட தேசத்து குடிகள் என்பது ஆவிக்குறிய சத்துருக்கள்.தேவன் உங்களுக்கு கொடுத்த இடத்தில் உள்ள பொல்லாத விக்கிரக ஆவிகளையும் இருளின் வல்லமைகளையும் துரத்தாவிட்டால் நீங்கள் குடியிருக்கும் இடங்களில் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். பிரியமானவர்களே உங்களை எதற்காக தேவன் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டீர்களா? நீங்கள் உணர்வடைந்து தேவ சித்தத்தை செய்யவில்லையென்றால் கடைசி வசனத்தில் தேவன் எச்சரிப்பது போல அதாவது நான் உங்கள் சத்துருக்களுக்கு செய்ய நினைத்ததை உங்களுக்கும் செய்வேன் என்ற நியாயதீர்ப்பை புரிந்து கொள்ளுங்கள்.

 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4:4

 

இன்றைக்கு அநேக ஜனங்கள் சத்தியத்தை அறியாதபடி சாத்தானின் வல்லமைகளால் அநேகருடைய மனக்கண்களை குருடாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.அந்த பகுதியில் இருக்கும் விசுவாசிகள் ஊழியக்காரர்கள் அந்தகார வல்லமைகள் மற்றும் பிசாசின் கிரியைகளை துரத்த திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஏனென்றால் சர்வாயுதவர்க்கம் என்கிற தகுதி அவர்களிடம் இல்லை.மேலும் ஜனங்கள் இரட்சிக்கபடாதபடிக்கு கிரியை செய்ய கூடிய பிசாசின் கிரியைகளுக்கு எதிராக யுத்தம் பண்ணாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

 

மேலும் இத்தகய சாத்தானின் அரண்களை அழிக்காமல் சும்மா பேருக்கு சபையை நடத்தி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.ஒரு இடத்தில் இருக்கும் சபை அதிகாரம் நிறைந்த சபையாக இருக்க வேண்டும்.சபையில் இருக்கும் ஊழியக்காரர்களும் விசுவாசிகள் பிசாசை துரத்த அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.சபை கூடுதலை பார்த்து பிசாசு நடுங்க வேண்டும்.அவர்கள் அந்த பகுதியில் கிரியை செய்யும் பொல்லாத ஆவிகளை துரத்தியே ஆக வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் மேற் கொள்ளப்படுவார்கள்.

இன்றைக்கு அநேகர் நன்றாக பிரசங்கிப்பார்கள் ஆனால் வீட்டில் யாராவது பிசாசின் வல்லமையால் ஆளுகை செய்யப்பட்டிருப்பார்கள்.அவர்களுக்கு அதை துரத்த தைரியமும் வல்லமையும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

 

எதற்காக தேவன் தனது ஜனங்களை ஒரு தேசத்துக்கு அல்லது ஒரு இடத்துக்கு அனுப்புகிறார் என்பதை தயவு செய்துதெரிந்து கொள்ளுங்கள்.

 

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.  அப்போஸ்தலர் 26:18

 

மேல் சொல்லப்பட்ட வசனத்தை மீண்டும் கவனமாக படியுங்கள். இதுதான் தேவனால் அழைக்கப்பட்ட ஒருவனுக்கு கொடுக்கப்பட்ட பணி.இது தான் உண்மையான தேவனுடைய ஊழியம்.எதற்காக அவர் நம்மை அழைத்திருக்கிறார்?

எதற்காக நம்மை ஒரு இடத்திற்கு அனுப்புகிறார்? அதை செய்யாமல் நாம் மாம்சமும் மனசும் விரும்பின காரியத்தை செய்து கொண்டிருந்தீர்களானால் நீங்கள் மேற் கொள்ளப்படுவீர்கள் அல்லது நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

 

கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.  எசேக்கியேல் 9-4

 

இன்றைக்கு தேசத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் கண்ணீர் விட்டு ஜெபிக்கிற ஜனங்களின் நெற்றியில் முத்திரை போடப்படுகிறது. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தேவனால் பாதுகாக்கப்படுவார்கள்.

 

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.   சங்கீதம் 18-29.  இப்படி தாவீது சொன்னது போல யார் சொல்ல முடியும்.

 

உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்.  லூக்கா 1:71

ஆமென் ஆமென்.

bottom of page