top of page

இந்த2021 ம் வருஷத்தில் நீங்கள்...

 

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.2020வது ஆண்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன கொள்ளைநோய் என்கிற தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியது.

அதாவது  உலக தேசங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.அநேகர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து போனார்கள். ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு போக முடியாத நிலைமை.

அநேகர் இந்த கொடிய நோய்க்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வரவில்லை.லட்சக்கணக்கானவர்கள் மரித்து போனார்கள்.அநேகர் Lock down என்கிற பெயரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்கள்.

 இந்த கொள்ளை நோயின்  தாக்கம் 2021 ஆவது ஆண்டு எதிரொலிக்கும். அதாவது ஒரு மிகப்பெரிய பஞ்சம் தேசங்களை அசைக்க போகிறது, மறுபக்கம் பிசாசின் வல்லமைகள் தீவிரித்து வரப்போகிறது. ஆகையால் தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்க்கவும் திராணியுள்ளவர்களாகும் படிக்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று பவுல் எழுதுகிறார். சர்வாயுதவர்க்கம் என்பது ஊழியம் செய்யும் தகுதிகளை குறிக்கிறது.அதாவது தகுதியில்லாமல் ஊழியம் செய்கிறவர்கள்  பிசாசின் தந்திரங்களால்  தங்கள் பரிசுத்தத்தை இழந்து தேவ சித்தத்தை விட்டு விலகி வீழ்ந்து போய் விடுவார்கள்.

 

இந்த 2021 ம் வருடம் கர்த்தர் நமக்கு தரும் வார்த்தை

 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.  சங்கீதம் 31:24

 

 

கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14

 

இந்த கடைசி நாட்களின் சூழ்நிலைகளைப் பார்த்து மனுஷருடைய இருதயம் சோர்ந்து போகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது இந்த கடைசி நாட்களில் அதாவது மனுஷகுமாரன் வரும் நாளில் விசுவாசத்தைக் காண்பாரோ என்று இயேசு சொன்னார். அதாவது அநேகர் எதிர்மறையான சூழ்நிலைகளை பார்த்து தேவன் மேல் உள்ள விசுவாசத்தை விட்டு விடுவார்கள். விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். இப்படிப்பட்ட உபத்திரவமான சூழ்நிலைகள் வரக்கூடிய இந்த நாள்களில் கர்த்தர்  எனக்கு காத்திருங்கள். திடமனதாக இருங்கள். உங்கள் இருதயத்தை நான் திடப்படுத்துவேன் என்று சொல்கிறார். இந்த சூழ்நிலைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றால் தேவ சமூகத்தில் காத்திருக்க வேண்டும் ஒரு புதிய பெலனை இந்த புதிய வருடத்தில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள்  ஓடினாலும் இளைப்படையார்கள்.நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

அல்லேலூயா.

 

அப்போஸ்தலர் 27வது அதிகாரத்தில் பவுல் கப்பல் பிரயாணம் போகும் போது  புயல் காற்றில் கப்பல் சிக்கிக் கொண்டது.அப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையிலும் பவுல் கப்பலில் உள்ளவர்களை  பார்த்து திடமனதாயிருங்கள் என்று உங்களுக்கு தைரியம் சொல்லுகிறேன் கப்பல் சேதமேயல்லாமல் உங்களில் எவனுக்கும் உயிர் சேதம் வராது என்று சொல்லி அவர்களை திடப்படுத்தினான்.

பவுல் சொன்னப்படி அப்படியே நடந்தது.ஏனென்றால் பவுல் மூலம் தேவ சித்தமும் தேவ திட்டமும் நிறைவேற வேண்டும்.எனவே பவுலோடு யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் பவுலுக்கு தயவு பண்ணினார். இன்றைக்கு நீங்கள் தேவ சித்தத்தையும் தேவ திட்டத்தையும் தொடர்ந்து செய்வீர்களென்றால் எந்த சூழ்நிலை வந்தாலும் எதுவும் உங்களை சேதப்படுத்தாது.

பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது.உங்களுக்காக உங்கள் குடும்பத்தாருக்கும் தேவன் தயவு செய்வார்.அப் 27 ம் அதிகாரம் 25 ம் வசனத்தில். ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று விசுவாசத்தினால் நிறைந்தவனாய் விசுவாச வார்த்தைகளை பேசுகிறான்.

 

நீங்கள் 2021 ம் ஆண்டு உங்களுக்கு எதிரான சூழ்நிலைகளை கண்டு அஞ்சாமல் விசுவாசத்தால் நிறைந்து விசுவாச வார்த்தைகளை பேசும் போது தேவ மகிமையை காண்பீர்கள். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு விசுவாசத்தின் வரத்தை தர முடியும்.பரிசுத்த ஆவியானவரே உங்களை பெலப்படுத்தி சகல சத்தியத்துக்குள் நடத்த முடியும்.அவரது பெலத்தினால் மாத்திரமே பாவத்தில் வல்லமையை மேற் கொண்டு சாட்சியாய் வாழ முடியும்.

 

இந்த 2021 ஆவது ஆண்டு நீங்கள் பெலன் கொள்ளும்படி கர்த்தருக்கு காத்திருங்கள். ஏனென்றால் கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் மாத்திரமே கர்த்தருடைய சத்துவத்தையும் வல்லமையையும் பெற்று கொண்டு தீங்கு நாள்களை மேற்கொள்ளுவார்கள். தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது. தேவ வல்லமையை பெற்றுக் கொண்டவர்கள் தான் எந்த எதிர்மறையான சூழ்நிலைகளையும் தாண்டி ஜெயத்தை பெறுவார்கள். அன்றைக்கு மேல் வீட்டறையிலே சிஷர்கள் தேவ பலனைப் பெற்றுக் கொள்ளும்படியாக கர்த்தருக்கு காத்திருந்து அதனைப் பெற்றுக்கொண்டு கொடிய உபத்திரவத்தின் நாள்களிலும் தேவனுக்காக வல்லமையாக ஊழியம் செய்தார்கள். எனவே திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று இயேசு சொன்னது போல தேவ சமூகத்தில் காத்திருந்து திடன் கொள்ளுங்கள். நீங்களும் உலகத்தை ஜெயிப்பீர்கள். ஆமென்,ஆமென்.

bottom of page