கள்ள உபதேசத்தை பற்றி சபைகளில் போதியுங்கள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன தன் வருகைக்கு முன்பாக நடக்கும் காரியங்களில் ஒன்று கள்ள போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும்.
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7-15
இன்றைக்கு அநேக வஞ்சிக்கப்பட்ட உபதேசங்கள் இணையத்தளங்களில் தீவிரித்து வருகிறது. அது மட்டுமல்ல அநேக கள்ள போதகர்கள் இணையத்தளங்களில் தங்கள் உபதேசங்களை பதிவிடுகிறார்கள். அநேக Whatsapp குழுக்களிலும் இப்படிபட்டவர்கள் மறைந்திருக்கிறார்கள். இவர்கள் களைகளை விதைக்கிறார்கள். பிசாசு வைத்த வஞ்சிக்கபட்ட கள்ள உபதேசம் என்ற கண்ணியில் விழுந்து விட்ட இவர்கள் தாங்கள் கற்று கொண்ட வஞ்சிக்கப்பட்ட உபதேசத்தினால் பிறரையும் கவிழ்த்து போடுகிறார்கள்.
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 1 தீமோத்தேயு 4-1.
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ரோமர் 16-17 என்று பவுல் எச்சரிக்கிறார்.
இன்றைக்கு கள்ள உபதேசத்தை பற்றிய அறிவு விசுவாசிகளிடம் இல்லை! ஏன் ஊழியக்காரர்களிடம் கூட இல்லை! இந்த கள்ள போதகர்கள் சுவிசேஷம் என்ற களப்பணி செய்ய மாட்டார்கள் மேலும், இவர்கள் ஆத்தும பாரம் இல்லாதவர்கள். ஜனங்கள் இரட்சிக்கபடுவது இவர்கள் நோக்கமல்ல, இவர்களில் பலர் சபைக்கு போவதில்லை. பல கள்ள போதகர்கள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து தன் இரத்தத்தை சிந்தி நமக்காக பெற்று தந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை மறைமுகமாக மறுதலிப்பவர்கள். இவர்களில் பலர் பரிசுத்த ஆவியானவரையும் அவருடைய கிரியைகளையும் மறுதலிக்கிறார்கள். இவர்கள் தங்கள் கற்று கொண்ட உபதேசத்தை அழகாக சில வசனங்களை சொல்லி இரட்சிக்கப்பட்டவர்களை வஞ்சிக்கிறார்கள்.இதற்காக இணையதளங்களில் புல் மேய்ந்து கொண்டு நூதன உபதேசங்களை பதிவிடுகிறார்கள். இவர்கள் முதலாவது வேதாகமத்திலிருந்து பதில் சொல்ல முடியாத நூதனமான சில கேள்விகளை கேட்கிறார்கள்? இதற்கு பதில் சொல்ல முடியாமல் விசுவாசிகள் குழப்பமடைகிறார்கள்.
இதை பயன்படுத்தி கொள்ளும் இவர்கள் மெதுவாக தங்களுடைய வஞ்சக உபதேசத்தை திணிக்கிறார்கள். இவர்கள் கேட்கும் எளிதான கேள்விகளுக்கு ஊழியக்காரர்களால் கூட பதில் சொல்லமுடிவதில்லை. அப்படியென்றால் விசுவாசிகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்?
இயேசு கிறிஸ்து சொன்ன கள்ள போதகர்களை பற்றிய தீர்க்கதரிசனம் தீவிரமாக நிறைவேறி கொண்டிருக்கும் காலம் இது. என் ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. இன்றைக்கு கள்ள போதகத்தினால் ஜனங்கள் வஞ்சிக்கபடுவதற்கு முக்கிய காரணம் சபையின் மேய்ப்பர்களே. இவர்கள் தான் தங்கள் மந்தைக்கு உத்தரவாதம்.
இவர்கள் முதலாவதாக கள்ள உபதேசங்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். வஞ்சிக்கபட்ட உபதேசத்தின் பிறப்பிடம் என்ன? இதை ஸ்தாபித்தவர் யார்?இவரது முடிவு என்ன?ஏனென்றால் கள்ள உபதேசத்தை பரப்பி அநேகரை இடறப் பண்ணுகிறவர்களின் முடிவு பரிதாபமாக இருக்கும்.இவர்கள் தங்கள் சாட்சியை இழந்து வீழ்ச்சியடைந்திருப்பார்கள். இந்த கள்ள உபதேசத்தை பரப்பும் ஸ்தாபன தலைவரின் வீழ்ச்சியை தெரிந்து கொண்டாலே உங்களுக்கு ஒரளவு தெரிந்து விடும்.
இந்த கடைசி நாள்களில் சபையை நடத்தும் ஊழியக்காரர்கள் இத்தகய கள்ள உபதேசத்தை பரப்புகிறவர்கள் என்ன கேள்விகளை முன் வைக்கிறார்கள்? இதற்கான பதில் என்ன? என்பதை தாங்களும் அறிந்து கொண்டு ஜனங்களுக்கும் போதிக்க வேண்டும். பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு இவைகளை குறித்து திட்டமாக போதிக்க வேண்டும். அநேக வாலிப பிள்ளைகள் தாங்கள் படிக்கும் இடத்திலும் இணையதளங்களிலும்இத்தகய கள்ள உபதேசத்தில் சிக்கி கொள்கிறார்கள். பெற்றோர்களே ஊழியக்காரர்களே இயேசு கிறிஸ்து எச்சரித்த கள்ள போதனைகள் பற்றி உதாசினமாக இருக்காதீர்கள். அவர் சொன்ன கொள்ளை நோய் பூமியதிர்ச்சிகள் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறுகிறதோ அப்படியே இதுவும் நிறைவேறும்.
இன்றைக்கு இந்த கள்ள போதனையால் வஞ்சிக்கப்பட்டவர்கள் உங்கள் சபைகளிலும் ஏன் உங்கள் குடும்பத்திலும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு Whatsapp குழுவில் இயேசுவின் கர்த்தத்துவத்தை புறக்கணிக்கும் யகோவா சாட்சிகளை சேர்ந்த ஒருவரும் பிதாவை புறக்கணிக்கும் இயேசு நாமக்காரர்கள் என்ற குழுவை சேர்ந்தவர்களும் பாவம் பரலோகத்துக்கு தடையில்லை என்ற கிருபையின் பிரசங்கிகளும் தங்கள் கொள்கையின் வசனங்களை பதிவிடுவதை பார்க்க முடிந்தது. மேலும், இவர்களிடம் நாம் வேதாகமத்திலிருந்து இப்படியும் எழுதப்பட்டிருக்கிறதே என்று சில வசனங்களை முன் வைக்கும் போது ஓடி விடுவார்கள் அல்லது இவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் பதில் சொல்லும் போது கோபத்தில் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22
இந்த வசனத்தின் படி வேதாகமத்தின் அடிப்படை சத்தியமான தெய்வத்துவத்தின் முப்பரிமாணமான பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரிரை பற்றி சரியாக தெரிந்து கொள்ளுங்கள். (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை(கர்த்தராகிய இயேசு) பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7
பெரும்பாலான கள்ள போதகங்கள் திரித்துவத்தை மையமாக வைத்தே வருகிறது. இது மாத்திரமல்ல கைதட்ட கூடாது, இசை கருவிகளை பயன்படுத்த கூடாது, மாம்ச விருத்த சேதனம் பண்ணி கொள்ளுதல் இப்படிபட்ட நூதன உபதேசங்கள் தீவிரித்து வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து ஓரினசேர்க்கையை அங்கிகரிக்கும் ஒரு ஸ்தாபனம் இந்தியாவில் பல ஊழியர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். பலர் பதவி ஆசைக்காக பிஷப் ஆகி தங்கள் அழைப்பையே விற்று விட்டார்கள். இந்த ஸ்தாபனம் அமெரிக்காவில் ஓரின சேர்க்கையை அங்கிகரிக்கிறது. ஓரின சேர்க்கை குழுவை சேர்ந்த ஒருவர் பிஷப் ஆக இருக்கிறார். பாழாக்கும் அருவருப்பு தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டது நமது ஊழியக்காரர்கள் விழித்திருக்க வேண்டும்.
இன்றைக்கு பிற மதத்தினர் தங்கள் ஜனங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கர்த்ததுவத்துக்கும் வேதாகமத்துக்கும் எதிரான காரியங்களை தங்கள் ஜனங்களுக்கு தீவிரமாக கற்று கொடுக்கிறார்கள். அவர்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை, இவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் வேதாகமத்தில் தெளிவான பதில் இருக்கிறது. ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் தான் ஜீவனுள்ள தேவன் கொடுத்த வார்த்தைகள் என்பது நிருபிக்கபட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வேதத்திலிருந்து அவர்களிடமே உண்மைக்கு முரணான பல கேள்விகளை நம்மால் கேட்க முடியும், அப்படி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியாமல் ஓடிவிடுவார்கள். ஆனால் நமக்கு தெரியவில்லை.
இதை இன்றைய சபைகள் ஜனங்களுக்கு கற்று கொடுத்து தெளிவு படுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8,9
இந்த வசனத்தின் படி ஒருவன் புதிதாக ஒரு உபதேசத்தை கொண்டு வருகிறான் என்றால் அவனிடம் கவனமாக இருங்கள். இப்படிபட்ட கள்ள உபதேசத்தை போதிக்கிறவர்கள் சபிக்கபட்டவர்கள் என்று வேதம் சொல்கிறது. இப்படிபட்டசாபத்தீட்டானவர்களை உங்கள் சபையினரிடமும் குடும்பத்தினரிடமும் வேதாகமத்தை பற்றி பேச அனுமதிக்காதீர்கள்.
வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
தீத்து 3-10 பிரியமான ஊழியக்காரர்களே இந்த கடைசி காலத்தில் இத்தகய கள்ள போதகர்கள் உங்கள் சபை ஜனங்களிடம் நூதன உபதேசங்களை போதித்து அவர்களை வஞ்சிக்கிறார்கள்.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.மத்தேயு 23-15 என்று இயேசு சொன்னது போல பரலோகத்துக்கு போகாதபடி இந்த கள்ள உபதேசிகள் ஜனங்களுக்கு இடறலுண்டாக்குகிறார்கள்.
எனவே பிரியமான மேய்பர்களே, இத்தகய மாறுபாடான வேதத்துக்கு புறம்பான வஞ்சிக்கப்பட்ட உபதேசத்திலிருந்து உங்கள் சபை ஜனங்களை பாதுகாப்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. எனவே இவைகளை குறித்து ஒரு தெளிவான தீர்மானம் எடுங்கள். முதலாவது இத்தகய உபதேசங்களை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு அதை பற்றிய விழிப்புணர்வை ஜனங்களுக்கு சொல்லி கொடுங்கள். அவர்கள் கேட்கும் குழப்பமான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும். மேலும் இத்தகய கள்ள போதகங்களை விட்டு எப்படி விலக வேண்டும் என்பதையும் சொல்லி கொடுங்கள். இவர்கள் உங்கள் குழுக்களில் இருந்தால் உடனடியாக குழுவிலிருந்து நீக்கி விடுங்கள். சபைகளில் ஒருக்காலும் இவர்களை பயன்படுத்தாதீர்கள்.
ஏனென்றால் இயேசு சொன்ன கட்டளைகளுக்கு விரோதமாக கேட்டுக்கேதுவான கள்ள உபதேசம் பரப்பபடுவதற்கு நீங்கள் காரணமாக இருந்து இவர்களுடைய துர்கிரியைகளில் பங்குள்ளவர்களாகி சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்.
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; ஒருவன் உங்களிடத்தில் வந்து கிறிஸ்துவின் உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 2 யோவான் 1:9-11.
கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2-1
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிப்படுத்தின விசேஷம் 22:18,19
எச்சரிக்கை!! எச்சரிக்கை!!