top of page

தாழ்மை

சகோ. எட்வின் கார்ட்டர் (சோஹார் - ஓமான்)

 

வேதம் சொல்லுகிறது, தாழ்மையுள்ளவர்களுக்கோ [தேவன்] கிருபை அளிக்கிறார். நீதி 3:34, யாக்கோபு 4:6, 1பேதுரு 5:5.. 

ஒரு மனுஷன் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டுமானாலும் அல்லது ஒரு நல்ல விசுவாசியாக கர்த்தருக்காக இந்த உலகத்தில் ஜெயமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டுமானாலும் அவனுக்கு மிகவும் தேவையான ஆவிக்குரிய ஆயுதம் தாழ்மை ஆகும். இந்த தாழ்மை என்கிற குணநலன் இல்லாத எந்தவொரு மனுஷனையும் அதாவது அந்த மனுஷன் ஒருவேளை கர்த்தருடைய ஊழியக்காரராக கூட இருக்கலாம் அவர்களிடத்தில் இந்த தாழ்மை இல்லாத பட்சத்தில் கர்த்தர் அவர்களையும் சேர்த்து வெறுக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். யாக்கோபு 4:6 மற்றும் 1பேதுரு 5:5, அதுமட்டுமல்லாமல் யாரிடத்தில் எல்லாம் இந்த தாழ்மை இல்லையோ அவர்கள் பாவம் செய்கிறார்கள் என்றும் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழுந்து போகிறார்கள் என்றும் வேதம் நமக்கு அழகாக சொல்லுவதை நாம் நீதிமொழிகள் 21:4 மற்றும் நீதி 16:18 ல் பார்க்க முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து மிகவும் உயர்ந்தவராய் இருந்தும் இந்த உலகத்தில் வாழுகிற பாவியான தம்முடைய பிள்ளைகளை மீட்பதற்காக அவர் தம்மைத் தாமே தாழ்த்தி பூமிக்கு இறங்கி வந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தாழ்மை நம்முடைய தகப்பனிடத்தில் எவ்வளவு காலம் இருந்தது என்று பார்ப்பீர்களானால் அவர் இந்த பூமியில் மனுஷகுமாரனாக வந்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் வரை காணப்பட்டது என்று வேதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதம் நம்முடைய கர்த்தருடைய தாழ்மையைக் குறித்து எவ்வாறு சொல்லுகிறது என்பதை பின்வருமாறு வாசிக்கலாம். 

 

அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும் படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6.

இரண்டாவதாக, கர்த்தர் உயர்ந்தவராய் இருந்தும் தழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். சங்கீதம் 138:6.

மூன்றாவதாக, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளயாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2:6-8.

ஒருவேளை நாம் நினைக்கலாம் இதனால் என்ன நடந்தது, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பாடுகளும் துன்பங்களும் வேதனைகளுமே இந்த உலகத்தில் கிடைத்தது என்று நினைப்பீர்களானால், வேதம் சொல்லுவதை சிறிது கவனித்துப் பாருங்கள்.. இப்படியாக தம்முடைய மேன்மையை எல்லாம் பிதாவை திருப்திப்படுத்தும்படியாக இந்த உலகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தியாகம் செய்ததால் பிதா என்ன செய்தார் தெரியுமா?

ஆதலால் தேவன் எல்லாவற்றிர்கும் மேலாக அவரை உயர்த்தி இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு பிதாவகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.பிலிப்பியர் 2:9-11. இயேசுவின் பிள்ளைகளாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் முதலாவது அவர் நடந்தது போல அதாவது அவர் இந்த உலகத்தில் மனுஷகுமாரனாக வந்து எப்படி ஒரு ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாரோ அதே போல நாமும் வாழ வேண்டும்.

அப்படி நாம் வாழ வேண்டுமானால் கிறிஸ்துவின் சிந்தையாகிய இந்த தாழ்மையை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சரீரத்தில் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது மாத்திரமே கர்த்தருடைய கிருபை நமக்கு கொடுக்கப்படும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.

இந்த தாழ்மையை தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்த சில மனிதர்களைக் குறித்தும் இதனால் என்ன நன்மையை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதைக் குறித்தும் வேத விளக்கங்களுடன் பின்வருமாறு தியானிக்கலாம்...

தாழ்மையுள்ள ஆறுபாத்திரங்களை உங்களுக்கு காண்பித்து இந்த செய்தியை முடிக்க ஆசைப்படுகிறேன்.

1. முதல் பாத்திரம்: ஆயக்காரன் [லூக்கா 18]

2. இரண்டாவது பாத்திரம்: நூற்றுக்கு அதிபதி [லூக்கா 7]

3. மூன்றாவது பாத்திரம்: பாவியாகிய ஸ்திரீ [லூக்கா 7]

4. நான்காவது பாத்திரம்: லாசரு என்னும் பேர் கொண்ட தரித்திரன் [லூக்கா 16]

5. ஐந்தாவது பாத்திரம்: மனந்திரும்பிய இளைய குமாரன் [லூக்கா 15]

6. ஆறாவது பாத்திரம்: சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் [லூக்கா 23]

1. முதல் பாத்திரம்: ஆயக்காரன்

இரண்டு மனுஷர்கள் ஆலயத்திற்கு ஜெபிக்க சென்றார்கள் அதில் ஒரு மனுஷன் பரிசேயன், இன்னொருவன் ஆயக்காரன், முதல் மனுஷனாகிய பரிசேயன் எப்படிப்பட்டவன் என்றால், அவன் கர்த்தரை நன்றாக அறிந்தவன் வேதப் பிரமாணம் நன்றாக அவனுக்குத் தெரிந்திருந்தது.

ஆகவே வேதத்தில் சொல்லப்பட்ட அனேக காரியங்களை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றி நடக்கிறவனாகக் காணப்பட்டான். இதனால் தேவனை நன்றாக அறியாத மனுஷர்களைப் பார்த்த போது இவனுக்கு பரிகாசமாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களைக் காட்டிலும் தான் மிகவும் உயர்ந்தவன் என்கிற எண்ணமும் இவனுடைய இருதயத்தில் காணப்பட்டது.

ஆகவே இவனுடைய ஜெபமும், இவனுடைய இருதயம் என்ன நிலைமையில் காணப்பட்டதோ அதே போலவே அமைந்திருந்தது. இத்தகைய காரியத்தை வேதம் அழகாக வெளிப்படுத்துவதை நாம் பின்வருமாறு வாசிக்கலாம்.

பரிசேயன் நின்று, தேவனே நான் பறிகாரர் அநியாயக்காரர் விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும் இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன் என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று தனக்குள்ளே ஜெபம் பண்ணினான் என்று லூக்கா 18:12 நமக்கு காட்டுகிறது.

வேதம் சொல்லுகிறது, இப்படியாக ஜெபித்த இந்த மனுஷனுடைய ஜெபம் தேவனுடைய சமுகத்தை சென்று எட்டவில்லை என்பதாக இதற்குக் காரணம் இவனிடத்திற்கும் தேவனிடத்திற்கும் இடையே காணப்பட்ட அதாவது இந்த மனுஷனால் உருவாக்கப்பட்ட பெருமை என்கிற சுவரே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இன்னொரு மனுஷன் ஜெபிப்பதைப் பார்க்கலாம், வேதம் சொல்லுகிறது, ஆயக்காரன் தூரத்திலே நின்று தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டு தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். லூக்கா 18:13. அதாவது இந்த ஆயக்காரனுக்கு கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பது நன்றாக தெரிந்திருந்தது அதாவது அவருக்கு முன்பாக தான் ஒன்றுமில்லை என்பதையும் அதுமட்டுமல்லாமல் ஆலயத்தில் முன்பாக சென்று ஜெபித்துக் கொண்டிருந்தவன் தன்னை விடவும் உயர்ந்தவன் அதாவது கர்த்தருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாது செய்து வருகிறவன் என்றும் மேலும் கர்த்தருடைய சமுகத்தில் எப்பொழுதும் இருக்கிறவன் என்பதையும் அறிந்து அவனுக்கு மிகுந்த மரியாதைக் கொடுத்தவன் இந்த ஆயக்காரன்.

ஆகவேதான் கிட்டத்தட்ட ஆலயத்திற்கு வெளியே நின்று ஜெபிக்கிறவனைப் போலவும் தான் கர்த்தருடைய சமுகத்தில் நிற்க முற்றிலும் தகுதியற்றவன் என்பதையும் அறிந்து தன்னை முற்றிலுமாக வெறுத்தவனாக கர்த்தருக்கு முன்பாக ஒரு வெறுமையான பாத்திரமாக தன்னை வெளிப்படுத்தினான். இதனால் என்ன நடந்தது இவனுடைய பாத்திரம் முழுவதும் கர்த்தருடைய கிருபையால் நிரப்பப்பட்டதை நம்மால் காண முடிகிறது.

எனக்குப் பிரியமான ஜனங்களே நாம் எவ்வளவு நீதிமானாக காணப்பட்டாலும் இவையெல்லாம் கர்த்தருக்கு முன்பாக ஒன்றும் இல்லாததாக அதாவது அழுக்கான கந்தையாய் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். இன்று அனேகர் தங்களிடம் அதிக திறமை இருக்கிறது. ஆகவே கர்த்தர் தங்களைத்தான் அவருடைய ஊழியத்திற்கு பயன்படுத்துவார் என்று தப்பான எண்ணம் கொள்வதை அனேகருடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கழுதையைக் கொண்டும் அவர் தம்முடைய ஊழியத்தை செய்ய முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

ஆகவே முதலாவது இந்த உலகத்தில் நீங்கள் எவைகளை மேன்மையாக எண்ணுகிறீர்களோ அவைகள் எல்லாவற்றையும் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு கர்த்தருக்கு முன்பாக முதலில் உங்களைத் தாழ்த்துங்கள் அப்பொழுது மாத்திரமே கர்த்தர் உங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஏனென்றால்?  பெருமையோடு வாழுகிறவர்களை கர்த்தரால் ஒருபோதும் தம்முடைய பிள்ளையாக எண்ணுவதில்லை என்பதை மறந்து விடாதீர்கள் பெருமையோடு யாரெல்லாம் வாழுகிறார்களோ அவர்களை எல்லாம் தேவன் அருவருக்கிறார் என்று வேதம் தெளிவாக நமக்கு சொல்லுகிறது.

வேதம் சொல்லுகிறது, தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 18:14.

2. இரண்டாவது பாத்திரம்: நூற்றுக்கு அதிபதி

கப்பர் நகூமில் நூற்றுக்கு அதிபதி என்கிற ஒரு மனுஷன் காணப்பட்டான். அவனுக்கு பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.[லூக்கா 7:2].

இந்த மனுஷன் அந்த ஊரிலே மிகவும் ஒரு முக்கியமான அந்தஸ்தில் உள்ள மனுஷர்களில் ஒருவனாகக் காணப்பட்டான்.  அதுமட்டுமல்லாமல் அவன் மிகவும் செல்வந்தனாகவும் இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் வேதம் அவனையும் அவனுடைய அதிகாரத்தையும் இந்த லூக்கா அதிகாரத்தில் வெளிப்படித்திருப்பதை நாம் பின்வருமாறு வாசிக்கலாம். நாம் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவனாயிருந்தும் எனக்கும் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு நான் ஒருவனைப் போவென்றால் போகிறான் மற்றொருவனை வாவென்றால் வருகிறான் என் வேலைக்காரனை இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். லூக்கா 7:8. இவ்வளவு அதிகாரம் படைத்தவன் அதாவது மிகவும் செல்வந்தனான இந்த மனுஷன் தன்னுடைய வேலைக்காரனை குணப்படுத்துவதற்காக தன்னுடைய செல்வத்தை அல்லது தன்னுடைய அதிகாரத்தையோ அவன் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் அவன் பெரிய மருத்துவர்களை தேடி தன்னுடைய ஆட்களை அனுப்பவும் இல்லை, இந்த மனுஷன் எப்பொழுதோ இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறான். ஆகவே அவரிடம் செல்ல முடிவு செய்தான். அதுமட்டுமல்லாமல் அவர் தன்னிடம் வரவும் நான் அவரிடம் செல்லவும் நான் தகுதியற்றவன் என்பதை வெளிப்படுத்துகிறான்.

ஆகவே தன்னுடைய ஆட்களை அனுப்பி இயேசு கிறிஸ்துவிடம் தாழ்மையுடன் வேண்டிக் கொள்ளுங்கள் என்று அவன் சொல்லுவதை நாம் வேதத்தில் பின்வருமாறு வாசிக்க முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்ட போது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.

அதுமாத்திரமல்ல, நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல

நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரவானாக  எண்ணவில்லை ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். லூக்கா 7:3,6,7. இந்த மனுஷனுடைய தாழ்மைக் குணம் வேலைக்காரனுடைய வியாதி நீங்குவதற்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பாருங்கள் அவனுடைய விசுவாசத்தையும் தாழ்மையும் குறித்து ஆண்டவரே ஆச்சரியப்பட்டு போனார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

இன்று நாம் நோயிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் நம்மிடத்தில் இந்த தாழ்மை இல்லாததே ஆகும். எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நம்மை எவ்வளவுக்களவு எளிமைப்படுத்துகிறோமோ அந்த அளவு தேவனுடைய அன்பு நம்மை நிரப்புகிறது என்பதை மறந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிறது, ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். மத்தேயு 5:3.

3. மூன்றாவது பாத்திரம்: பாவியாகிய ஸ்திரீ

பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான் அவர் அந்த பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார் என்று லூக்கா 7 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்தக் கூட்டத்தில் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரால் விடுதலைப் பெற்றவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே அமர்ந்திருக்க கூடும். ஆனால் அவர்கள் யாருமே கர்த்தரை அந்த இடத்திலே மகிமைப்படுத்தவில்லை என்று அந்த அதிகாரத்தை வாசிக்கும் போது நாம் அறிந்து கொள்ள் முடிகிறது. ஆனால் அன்றைய நாட்கள் ஸ்திரீகள் ஆண்களின் மத்தியில் அதிகமாக அனுமதிக்கப்படாத ஒரே காலமாய் காணப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த இடத்தில் பாவியான ஸ்திரீ ஒருவள் வந்து தன்னுடைய மானத்தையும் தான் ஒரு பெண் என்கிறதையும் மறந்து அந்த நாட்களின் சட்டத்திட்டத்தையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன்னை எல்லாருக்கு முன்பாக ஒரு கேவலமான பாத்திரமாக அந்த இடத்திலே வெளிப்படுத்துகிறாள். அதாவது மனுஷர் முன்பாக அற்பமாக எண்ணப்படுகிற ஒரு ஸ்திரீயாக அந்த இடத்தில் தன்னை வெளிப்படுத்துவதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது. எப்படியென்றால் பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுது கொண்டு அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ் செய்து பரிமளதைலத்தைப் பூசினாள். லூக்கா 7:37,38. இதோ கர்த்தர் இத்தகைய காரியத்தைப் பார்த்து விட்டு சீமோனை நோக்கி இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே நான் உன் வீட்டில் பிரவேசித்தேன் நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை. இவளோ கண்ணீரினால் என் கால்களை நனைத்து தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தஞ் செய்யவில்லை இவளோ நான் உட்பிரவேசித்தது முதல் என் பாதங்களை ஓயாமல் முத்தஞ் செய்தாள் நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை இவளோ என் பாதங்களில் பரிம ளதைலம் பூசினாள்.

ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே [ லூக்கா 7:44-47 ]. இந்த ஸ்திரீ தன்னை முழுவதுமாக தாழ்த்தினாள் அதாவது தன்னுடைய பாவ சரீரம் முழுவதையும் தேவனுடைய பாதம் படும்படியாக ஒப்புக் கொடுத்தாள். அதுமாத்திரமல்ல தான் பாவத்தினால் சம்பாதித்த விலையுயர்ந்த பொருளை அவருடைய பாதத்தில் உடைத்து போட்டாள் இந்த செயல் எதைக் குறிக்கிறது என்றால் தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக தாழ்மையோடு அவருக்கு சொந்தமாக ஒப்புக் கொடுத்ததையே வெளிப்படுத்துகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நம்முடைய பொருட்களைக் கொண்டு அல்லது நாம் அவருக்கு அதிகமான பணத்தையோ அல்லது இடத்தையோ அல்லது ஊழியக்காரருக்கு கார் வாங்கி கொடுப்பதினாலேயோ அவரிடத்தில் கிருபையை பெற முடியாது. எப்பொழுது இந்த ஸ்திரீயைப் போல நம்முடைய இந்த உலக வாழ்க்கையை அவருடைய பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறோமோ அன்றைக்குத்தான் நாம் முழுமையான கர்த்தருடைய அன்பை பெற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிறது,[கர்த்தர்] எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 1சாமுவேல் 2:8

4.  நான்காவது பாத்திரம்: லாசரு என்னும் பேர் கொண்ட தரித்திரன்

லூக்கா 16 ஆம் அதிகாரத்தில் இரண்டு விதமான மனுஷர்களைக் குறித்துவாசிக்கிறோம். ஒருவனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. அவன் ஐசுவரியவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு மனுஷன் லாசரு என்கிறவன் இவன் மிகவும் தரித்திரனாக காணப்பட்டான்.

கடைசியில் நாம் இந்த அதிகாரத்தை வாசித்து முடிக்கும் போது ஐசுவரியவான் நரகத்திற்கும் இந்த தரித்திரவானாகிய லாசரு ஆபிரகாமுடைய மடியிலே கொண்டு போகப்பட்டான் என்றும் வாசிக்கிறோம். ஏன் ஐசுவரியவான் நரகத்திற்கு செல்ல வேண்டும். அவன் அப்படி என்ன தவறை செய்தான்.

இந்த இரண்டு மனுஷர்களிடத்தில் சிலகாரியங்களை நான் உங்களுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த ஐசுவரியவான் தன்னுடைய வாசல் அருகே கிடக்கிற லாசருவை அவன் எத்தனையோ தடவை பார்த்திருக்க முடியும் ஏன் என்றால் அவனைக் கடந்துதான் இந்த ஐசுவரியவான் செல்ல வேண்டிய இடத்திற்கு எல்லாம் சென்று வந்தான். ஆனால் ஒரு தடவை கூட இந்த லாசருவின் நிலைமையைக் குறித்து இவன் கவலைப்படவேயில்லை.

அதுமட்டுமல்லாமல் தான் பயன்படுத்திய பிறகு துரப் போடுகிற அதாவது எஞ்சிய உணவைக் கூட இந்த மனுஷருக்கு அவன் கொடுக்க முன்வரவில்லை. இதற்குக் காரணம் இவனிடத்தில் காணப்பட்ட மேட்டிமை. இந்த மேட்டிமையான குணம் இவனை தாழ்ந்து போக ஒருபோதும் அனுமதிக்க வில்லை. தாம் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவன் என்கிற ஒரு பெருமையை இவனுக்கு கொடுத்திருந்தது. இதனால் இவன் கர்த்தருக்கு முன்பாக பாவியான மனுஷனாக காணப்பட்டான்.

ஆனால் இந்த லாசருவோ ஒருபோதும் இந்த ஐசுவரியவானைப் பற்றி தரக் குறைவாக அவன் பேசவில்லை. அவனை சபிக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் தான் கர்த்தர் இந்த ஐசுவரியவானுக்கு கொடுத்த உணவை திண்பதற்கு தகுதியற்றவனாக எண்ணினான். ஆகவேதான் அவன் அந்த மனுஷன் தூரப் போடுகிற உணவு தனக்கு போதும் என்கிற ஒரு தாழ்மையான மனப்பான்மை உடையவனாக இந்த இடத்தில் காண்பித்தான்.

இதனால் இந்த லாசரு கர்த்தருடைய பார்வையில் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான் என்று உணர முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இந்த அழிந்து போகிற உலகத்தில் எந்த ஒரு பொருட்களின் மேலே அன்பு வைக்காதிருங்கள் ஏனென்றால் இவைகள் நம்மை தேவனுடைய குணநலன்களை விட்டு விலகிப் போகச் செய்யும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிறது, மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல் தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்.ரோமர் 12:16.

5.ஐந்தாவது பாத்திரம்: மனந்திரும்பிய இளைய குமாரன்

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் ஒருவன் மூத்தவன், இன்னொருவன் இளையவன் பாருங்கள் மூத்தவன் தன் தகப்பனோடு வாழ்வதே தனக்கு பெரிய பெருமை என்று எண்ணி வாழ்நாள் முழுவதும் தகப்பனுக்கு கீழ்ப்படிந்து நடக்க முடிவு செய்தான்.

ஆனால் இளையவனோ அவனுடைய சகோதரனுக்கு முற்றிலும் மாறுபட்டவனாக வாழ்ந்து வந்தான் எப்படியென்றால் இந்த இளையவனுக்கு தான் பணக்காரன் எங்கிற ஒரு மேட்டிமையான குண நலன் அவனிடம் காண்ப்பட்டது. அதுமாத்திரமல்ல பணம்தான் தனக்கு பெருமையைத் தேடித்தரும் என்றும் எண்ணினான்.

ஆகவே இவன் தன்னுடைய வீட்டை நேசிப்பதற்குப் பதிலாக அதிகமாக பணத்தையே நேசித்து வாழ்கிறவனாய் காணப்பட்டான். ஆகவே அவன் தன்னுடைய பங்கையெல்லாம் எடுத்து தனியே சென்று ஒரு பெரிய பணக்காரனாகவும் உலக வாழ்க்கையை அநுபவிக்கவும் விரும்பினான். இதனால் என்ன நடந்தது.

வேதம் சொல்லுகிறது, அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தர வேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்கு தன் ஆஸ்தியை பங்கிட்டுக் கொடுத்தான். லூக்கா 15:12. இதோ தன்னுடைய ஆஸ்தியையெல்லாம் எடுத்துக் கொண்டு துன்மார்க்கமான நண்பர்களுடன் ஒரு துன்மார்க்கமான மேட்டிமையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். பணம் அவனிடம் இருக்கும் வரைக்கும் அவனுடைய துன்மார்க்கமான நண்பர்களும் அவனையே சுற்றி வந்தனர்.

இதனால் என்ன நடந்தது, நாளடைவில் அவனிட்த்தில் காணப்பட்ட பணம் எல்லாம் செலவழிந்து போனது இதைப் பார்த்த அவனுடைய நண்பர்களும் இனிமேல் இவன் மூலமாய் நமக்கு பயன் ஒன்றும் இல்லையென்று சொல்லி அவனைத் தனியாக விட்டு விட்டு ஓடிப் போய்விட்டனர். அவனது மேட்டிமையெல்லாம் அவனை விட்டு போனது. அதுமாத்திரமல்ல அவன் இருந்த இடத்தில் பெரிய பஞ்சம் வந்ததால் அந்த இளைய குமாரன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பன்றி தின்கிற ஆகாரமாகிய தவிடாவது தனக்கு கிடைக்காதா? என்று ஏங்கி நின்றான் ஒன்றுமே அவனுக்கு கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது உலக் மேட்டிமை தன்னை ஒரு பெரிய பாவியாக மாற்றிவிட்டதே என்று கலங்கி நின்றான். வேதம் சொல்லுகிறது, இதன் பிறகு அவனுடைய புத்தி தெளிந்தது இதோ அவன் மிகவும் தாழ்மையுள்ள மனுஷனாக மாறிப் போனான் எப்படியென்றால்? நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போய் தகப்பனே பரத்துக்கும் விரோதமாகவும் உமக்கு விரோதமாகவும் பாவஞ் செய்தேன் இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல உம்முடைய கூலிக் காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் என்று சொல்லி [லூக்கா 15:18,19] எழுந்து புறப்பட்டு தன்னுடைய தந்தையை நோக்கி சென்றான் இதோ அவன் தாழ்மையுள்ள மனுஷனாக மாறினதை உணர்ந்த அவனுடைய தந்தை மறுபடியும் அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டான். இதோ அவன் இழந்து போன ராஜா வஸ்திரத்தை மறுபடியும் தன்னுடைய மகனுக்கு கொடுத்தான். அதுமட்டுமல்லாமல் எந்த ஆளுகையை தன்னுடைய மகன் இழந்து போனானோ அதே ஆளுகையை மறுபடியும் கொடுத்து அவனை கவுரவித்து தன்னுடைய அரமனையிலே வைத்துக் கொண்டான் என்று வேதம் நமக்கு லூக்கா 15 ஆம் அதிகாரத்தில் அழகாக விளக்கியிருப்பதை நாம் வாசிக்க முடிகிறது.

எனக்கு பிரியமான தேவ ஜனங்களே நம்மிடமும் இப்படிப்பட்ட மேட்டிமையான பாவகாரியங்கள் காணப்படுமானால் உடனே அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு கர்த்தரை தேடி வாருங்கள். அப்பொழுதுதான் நாம் அவரோடு சேர்ந்து இந்த உலகத்தை ஆளுகை செய்ய முடியும். வேதம் சொல்லுகிறது, ஆகையால் ஏற்றக் காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1பேதுரு 5:6.

6. கடைசி பாத்திரம்: சிலுவையில் அறையப்பட்ட கள்ளன்

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவரோடு கூட அவருடைய இரண்டு பக்கத்தில் இரண்டு கள்ளர்களை அறைந்திருப்பதை நாம் வேதத்தின் மூலம் அறிகிறோம்.

அவர்களில் ஒரு கள்ளன் அந்த சூழ் நிலையிலும் அதாவது மரணம் தன்னை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையிலும் தன்னை இரட்சிப்பதற்காகவும், தனக்காகவும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவின் சரீர பெலவீனத்தைப் பார்த்து இவரால் ஒன்றும் ஆகாது என்கிறதான ஒர் எண்ணத்தோடு அவரை ஏளனம் செய்வதை பார்க்க முடிகிறது.

எப்படியென்றால் வேதம் சொல்லுகிறது, அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த  குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்துவானால் உம்மையும் என்னையும் இரட்சித்துக் கொள் என்று அவரை இகந்தான். லூக்கா 23:39. இதற்குக் காரணம் இயற்கையாகவே அவனிடத்தில் காணப்பட்ட மனந்திரும்பாத அகந்தையான மனமே ஆகும். இதனால் கடைசி வரை அவன் தன்னை தாழ்த்த முடியாத பாவியான ஒரு மனுஷனாக அந்த் சிலுவையில் பரிதாபமாக மரித்துப் போனான் என்று பார்க்கிறோம். ஆனால் மற்ற கள்ளனோ தன்னை கர்த்தருக்கு முன்பாக மிகவும் தாழ்த்தினான் என்று வேதம் சொல்லுகிறது. எப்படியென்றால்? மற்றவன் அவனை நோக்கி நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம் இவரோ ஆகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டான். லூக்கா 23:41. இத்தகைய மனத்தாழ்மையான மனந்திரும்புதலைப் பார்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனை மன்னித்து அவனுக்கு பரதீசிலிருக்கும் படியாக ஒரு வாய்ப்பை வழங்கினார் என்று பார்க்கிறோம்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நாமும் இந்த செய்தியில் மேலே சொல்லப்பட்ட மனுஷர்களைப் போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்கள் விசேஷமான இடத்தைப் பெற்றது போல, நாமும் இத்தகைய கிருபையை பெற வேண்டுமானால் முதலாவது நம்மை முற்றிலுமாக பெறுமையாக்க வேண்டும். அதாவது கர்த்தருக்கு முன்பாக தாழ்மையுள்ள பாத்திரமாக மாற வேண்டும். அப்பொழுது மாத்திரமே கர்த்தர் நம்மை புழுதியிலிருந்தும் இந்த உலக குப்பையிலிருந்தும் பிரித்து எடுத்து தம்முடைய ஜனங்களோடும் பிரபுக்களோடும் அதிகாரிகளோடும் சிங்காசனத்தில் உட்காரப் பண்ணுவார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை. இதற்கு நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், வேதம் சொல்லுகிறது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணி என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன். 2நாளாகமம் 7:14. 

 

கர்த்தர் தாமே நம்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

bottom of page