top of page

விபச்சாரம் என்ற சுயசரீரத்துக்கு விரோதமாக செய்யப்படும் கொடிய பாவம்

 

(ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும் 1 கொரிந்தியர் 7-2)

 

இன்றைக்கு அநேகர் தேவனுக்கு முன்பாக தேவசமூகத்தில் உடன்படிக்கை பண்ணின தன் மனைவிக்கு  துரோகம் பண்ணி மற்றொரு பெண்ணிடம் கள்ள தொடர்பு வைத்திருக்கின்றனர்.இத்தகய பாவத்தை செய்கிறவர்களின் மீது வரக்கூடிய சாபம் அவர்கள் குடும்பத்தின் மேல் நிழலிடுகிறது. (வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1 கொரிந்தியர் 6:18)  ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3-17).

 


எனக்கு ஒரு சகோதரனை தெரியும். அவர் சபைக்கு போகிறவர் தான், அவருக்கு இரண்டு மகன்கள். அவர் இன்னெருவனுடைய மனைவியிடம் கள்ள தொடர்பு வைத்திருந்தார். அவரது நண்பர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். அவர் கேட்கவில்லை. அவருக்கும் அவர் மனைவிக்கும் இதனிமித்தம் பிரச்சனை ஏற்ப்பட்டது. இவர் மனம் திரும்பும்படி அநேக தருணங்கள் கொடுக்கப்பட்டது. இவர் செவிக்கொடுக்கவில்லை, திடீரென்று தேவகோபாக்கினை அவர் குடும்பத்தின் மீது வந்தது. அவரது மூத்த மகன் ஒரு சாலை விபத்தில் அகோரமாக பலியானான். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் பாவத்தை விடவில்லை.இவ்வளவு நாள் பொறுமையோடு இருந்த மனைவி தன் மகனோடு தன் தகப்பன் வீட்டிற்கு பொய்விட்டார்கள். இவருக்கு திடீரென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதினால் அவரது வாழ்வாதாரம் முடங்கி போனது. இதனால்இவரது உடல்நலம்  பாதிக்கப்பட்டு இடது கையும் காலும் பாதிப்படைந்து சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவரது இயலாமையை கண்ட இவரோடு கள்ள தொடார்பு வைத்திருந்த பெண்ணும் இவரை விட்டு விலகி போனாள்.இவரது மனைவி உட்பட எல்லாரும் இவரை கைவிட்டு விட்டார்கள். இன்றைக்கு இவர் எல்லா ஆசீர்வாதங்களையும் உறவுகளையும் இழந்து ஒரு பிச்சைகாரனை போல அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் வாழ்ந்து வருகிறார்..மனைவிக்கும் புருஷனுக்கும்  துரோகம் பண்ணுகிறவர்கள் வீடுகளில் சாபம் என்கிற இருள் ஆளுகை செய்கிறது. இவர்களது பாவங்கள் நியாயதீர்ப்புக்கு முந்தி கொள்கிறது, ( அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 


தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் நீங்கள் துரோகம் பண்ணாமல் உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.  மல்கியா 2:15,16).

 

வேதாகமத்தில் யோசேப்பு என்பவன் போத்திபார் வீட்டில் சகல அதிகாரங்களை பெற்றவனாக இருந்தான். போத்திபாரின் மனைவி அவனை பாவம் செய்ய தூண்டிய போது அவன் என் எஜமானனுக்கும் என் தேவனுக்கும் விரோதமாக பாவம் செய்வது எப்படி என்று பாவத்துக்கு விலகி ஓடினான். ஒரு வேளை அவன் அந்த இடத்தில் பாவம் செய்து கொண்டிருப்பானானால் அவனது வாழ்க்கை போத்திபாரின் வீட்டிலே முடிந்திருக்கும். பாவத்தை விட்டு விலகினதினாலே பொய் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு போனாலும் தேவன் அவனை  எகிப்து தேசத்தின் பிரதம மந்திரியாக  உயர்த்தினார். இன்றைக்கு அநேக வாலிபர்கள் வேசித்தனம் என்ற பாவத்தில் விழுந்து போய் தேவன் அவர்களுக்கு  வைத்திருக்கும் ஆசீர்வாதமான எதிர்காலத்தை இழந்து போய் கொண்டிருக்கிறார்கள். வாலிப காலத்தில் உன் சிருஷ்டிகரை நினை என்று வேதம் சொல்கிறது. வாலிபர்களே வாலிப காலத்தில் நீங்கள் யாரை நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.விபச்சாரமோ அல்லது கணவனோ மனைவியோ மரித்தால் மாத்திரமே விவாகரத்து மற்றும் மறுமணம் செய்யலாம் என்று வேதம் தெளிவாக சொன்னாலும் இந்த சத்தியத்துக்கு அநேகர் கீழ்படிவதில்லை. விவாகரத்து என்ற காரியத்தில் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கின்றனர். உலக சினேகம் மற்றும் உலக வேஷம் தேவனுக்கு விரோதமான பகை.இன்றைக்கு இந்த பிரிவினையை ஊழியக்காரர்களே மறைமுகமாக செய்கிறார்கள்.தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன் என்று வேதம் சொல்கிறது. என்னை தள்ளி என் வசனத்தை ஏற்று கொள்ளாதவனை நான் சொன்ன வசனமே ௧டைசி நாளில் நியாயம் தீர்க்கும் (யோவா 12-48) என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார்.

 

இன்றைக்கு சபைகளில் இத்தகய வேசித்தனம் என்கிற பாவத்தை துணிகரமாக செய்கிறவர்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம். சபைகளில் ஊழியம் செய்கிறவர்கள் சபை பொறுப்பில் இருப்பவர்கள் ஒரே மனைவியை உடைய புருஷர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இது பெண்களுக்கும் பொருந்தும்.அவர்களும் ஒரே புருஷனையுடையவர்களாகவும் கற்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே உங்கள் சபைகளில் இருக்கும் இப்படி பட்ட வேசித்தன பாவத்தை செய்கிறவர்களை உடானடியாக பதவி விலக சொல்லுங்கள். ஏனென்றால்? இவர்கள் தேவசமூகத்தை அசுசிபடுத்துகிறார்கள். பாழாக்கும் அருவருப்பு சபைகளில் காணப்படும் கொடியகாலம் வந்து விட்டது. இன்றைக்கு சபை சுத்திகரிக்கப்பட வேண்டும். இவர்கள் இத்தகய பாவத்தை செய்து கொண்டு ஊழியம் செய்வார்கள் என்றால் பாழாக்கும் கோபாக்கினை அவர்கள் மேல் வரும். எனக்கு தெரிந்த ஒருவர் தன் வாலிப காலத்தில் தன் மனைவி நோயுற்று படுத்த படுக்கையாகி விட்டதினால் இவர் வேறு திருமணம் பண்ணாமல் தன் மனைவிக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். தங்களுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார். இன்றைக்கு முதிர் வயதான நிலையிலும் கூட தன் நடக்க முடியாத மனைவியை அன்போடு கவனித்து கொள்கிறார்.ஆனால் இன்றைக்கு தேவ சமூகத்தில் திருமண உடன்படிக்கை செய்து கொண்டு தங்கள் துணைக்கு விரோதமாக ரகசிய விபச்சார பாவங்களை செய்து கொண்டிருப்பவர்கள் தேவனுடைய பார்வையில் அருவருப்பனவர்கள். இவர்கள் தங்கள் துணையை ஏமாற்றினாலும் தேவனை ஒருகாலும் ஏமாற்ற  முடியாது. இயேசு கிறிஸ்து விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட பெண்ணை மன்னித்தார், இனி பாவம் செய்யாதே என்றார்.

 

இன்றைக்கு துணிகரமாக இத்தகய ரகசிய பாவத்தை சத்தியத்தை அறிந்த நீங்கள் செய்து கொண்டிருப்பீர்களென்றால் உடனடியாக மனம் திரும்புங்கள். இல்லையென்றால் அக்கினியும் கந்தகமும் எரிகிற நரகத்தில் தள்ளப்படுவீர்கள். ஒரு வேளை நீங்கள் செய்த பாவத்தின் விளைவுகளை இந்த உலகத்தில் சந்திக்க நேர்ந்தால் உங்களால் தாங்கி கொள்ளவே முடியாது. ஏனென்றால் இத்தகய பாவத்தின் பலன் பயங்கரமாக இருக்கும்.இன்றைக்கு சத்தியத்தை அறிந்து கொண்டு வேசித்தனம் செய்யும் இப்படி பட்டவர்களின் குடும்பங்களை கூர்ந்து கவனிக்கும் போது சாபங்கள் அவர்களை ஆளுகை செய்வதை பார்க்கலாம். ஒரு வேளை இந்த செய்தி உங்களுக்கு கொடுக்கப்படும் கடைசி எச்சரிக்கையாக இருக்கலாம்.எனவே பாவ வழிகளை விட்டு விலகி உடனடியாக மனம் திரும்பி பாவமன்னிப்பாகிய விலையேறப் பெற்ற இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்.

 

இந்த கடைசி காலத்தில் உங்கள் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்த கிறிஸ்தவனாய் வாழ உங்களை ஒப்பு கொடுங்கள். ஆமென்.

bottom of page