top of page

அரசியலா அல்லது கிறிஸ்துவின்  ஊழியமா?

இல்லையெனில் இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

 

ஒரு ஊழியக்காரனை தேவன், ஜனங்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் உன்னதமான பணிக்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல.

 

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.   அப்போஸ்தலர் 26:18

 

நீங்கள் பாஸ்டராக இருந்தாலும் சரி, பிஷப்பாக இருந்தாலும் சரி.,  சுவிசேஷகனாக இருந்தாலும் சரி.  இது தான் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரனின் உண்மையான அழைப்பு.

மறுபடியுமாக அதே வசனத்தை நன்றாக தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள். தேவன் அழைத்த இந்த காரியத்துக்கு எதிராக செயல்படுகிறவர்கள் அதாவது தங்கள் பாதையை விட்டு விலகி செல்கிறவர்கள் நிச்சயம்  தேவனுடைய சித்தத்தை உதாசினப்படுத்துகிறவர்கள் தானே.

 

தேவன் அழைத்த காரியத்துக்கு மாறாக நீங்கள் எதை செய்தாலும் அது நம் எஜமானனுடைய சித்தத்துக்கு எதிரானதே.

 

நீங்கள் Election ல் நில்லுங்கள் MLA ஆகுங்கள் MP ஆகுங்கள்.அது உங்களது சொந்த விருப்பம்.ஆனால் சந்திப்பின் நாளிலே என் சித்தத்தை செய்தாயா என்ற எஜமானின் அதிகாரமுள்ள கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.

 

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் Election ல் நிற்கிறார்கள். கிறிஸ்தவ தேசங்களில் மற்றும் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அவர்கள் election ல் வென்று பதவிகளை வகிக்கிறார்கள்.அதை நான் தவறாக சொல்லவில்லை.மேலும் எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவை உடையவர்கள் அல்ல.மேலும் எல்லா கிறிஸ்தவர்களும் ஊழியக்காரர்கள் அல்ல.

 

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1-12

 

ஊழியமும் ஊழியக்காரர்களும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் படி ஏற்படுத்தபட்டவர்களாக இருக்கிறார்கள்.

 தேவனுடைய ஊழியத்தை செய்ய அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களாகிய உங்களை சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனின் ராஜ்ஜியத்துக்கு ஜனங்களை திருப்பும் படிக்கு அவர்களின் மனக்கண்களை திறக்கும்படிக்கு தன் வேலைக்காரனாக அழைத்திருக்கும் போது,அவர் செய்ய சொன்ன காரியத்தை விட்டு தேர்தலில் நிற்க தேவனுடைய வேலைக்காரனாக அழைக்கப்பட்ட உங்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை. ஏனென்றால் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட அதாவது செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்யும்படிக்கு நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக இருக்கிறோம்.   அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17-10

 

ஒரு முறை தேவனுடைய ராஜ்ஜியத்தின் வேலைக்காக அழைக்கப்பட்ட ஒருவனிடம் இயேசு சொன்ன காரியத்தை பாருங்கள்.

 

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.  லூக்கா 9-60

 

பிரியமானவர்களே அன்றைக்கு இருந்த தேசத்தின் ஆளுகை வேறு.இன்றைக்கு இருக்கும் அரசியல் சாக்கடை வேறு. இதற்காக வேதாகம வசனம் மற்றும் சம்பவங்களை கொண்டு உங்கள் கொள்கைக்கும் உலகத்துக்கு ஒத்து பேச வேண்டாம்.இயேசு பிதாவிடம் தன் சீஷர்களை குறித்து பேசும் போது..

நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17:16 என்றார்.

 

மேலும் பவுல் எழுதும் போது நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.  பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.   ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3:1-3 என்றார்.

 

இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரிக்காமல் தேவனுடைய நன்மையும் பரிபூரணமான சித்தத்தை செய்யும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.அதற்கு மாறாக தேவனுடைய வேலையை செய்ய அழைக்கப்பட்ட நீங்கள் MLA ஆக போகிறேன்...MP ஆக போகிறேன் என்றால் அது நிச்சயமாக உலக ஆசைகளுக்கு ஒத்து போகும் உலக வேஷம் தான்.மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று சொல்லும் படி அழைக்கப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்கள் ஓட்டு போடுங்கள் என்று சொல்லும் படி எங்கு இடறி போனார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்றைக்கு இந்த புதிய உடன்படிக்கை காலத்தில்.. வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுடைய அழைப்பு தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் பணி அல்ல.

 

அடுத்ததாக நீங்கள் தேர்தலில் நிற்பதற்காக அதாவது உங்கள் கொள்கைகளுக்காக தாவீதையும் சவுலையும் நியாயாதிபதிகளையும் கொண்டு அரசியல் லாபங்களுக்காக தயவு செய்து வேதாகமத்தை புரட்டாதீர்கள்.

இந்த உலகத்தில் எதை செய்தாலும் இயேசுவின் நாமத்தில் செய்து பிதாவை மகிமைபடுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் பணத்துக்காக அரசியல்வாதிகளிடம் விலை போய் விட்டார்கள். இவர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கி கொண்டு சபை ஜனங்களை விற்று போட்டார்கள். இவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் இல்லை. ஏனென்றால் லஞ்சம் வாங்கி ஊழலில் ஊறி போயிருக்கும் அரசியல்வாதிகளுக்காக இழிவான ஆதாயத்துக்காக தேவனுடைய உக்கிராண உத்தியோகத்தை அலட்சியம் செய்து ஜனங்களிடம் இவர் நல்லவர் இவருக்கு எங்கள் ஆதரவு...இவருக்கு என்று பச்சை பொய் பேசும் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் யாராயிருந்தாலும் சந்திப்பின் நாளிலே  நிச்சயம் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். மேலும், இவர்கள் வாங்கிய எல்லா தீங்கிற்கும் காரணமாக...வேறாக இருக்கும் பணம் ஒரு நாள் இவர்களுக்கு எதிராக தீங்கின் அம்பாக இவர்களையே உருவ குத்தும்.

 

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக் கொள்ளக்கடவன்.    1 கொரிந்தியர் 4-1

 

மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.   1 கொரிந்தியர் 4-2

 

இன்றைக்கு தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தங்கள் மாம்சமும் மனசும் விரும்பின காரியங்களை பெயருக்காகவும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் செய்யும் ஊழியக்காரர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

 தேவ நீதியை நிறைவேற்ற அழைக்கப்பட்ட அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் இழிவான ஆதாயத்துக்காக தாங்கள் சுயமாய் சிந்தித்த காரியங்களை துணிகரமாக செய்கிறார்கள்,  எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோமர் 10-3

 

பவுல் சொன்னது போல  மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.  1 கொரிந்தியர் 9-27

 

 என்ற வசனத்தின் படி உலக ஆசை இச்சைகளுக்கு விலகி இடது பக்கமும் வலது பக்கமும் சாயாமல் நமக்கு நியமிக்கபட்ட ஓட்டத்தில் பொறுமையாக ஓடக்கடவோம்.

 

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.  2 பேதுரு 1-10

 

தேவன் நம்மை உலக ராஜ்ஜியங்களுக்காக ஊழியம் செய்ய அழைக்கவிலை. அன்றைக்கு சாத்தான் இயேசுவுக்கு உலக ராஜ்ஜியங்களின் மகிமையை காண்பித்து என்னை பணிந்து கொள் இவையெல்லாம் உமக்கு தருகிறேன் என்று சொன்ன போது

 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:10

 

பிரியமான ஊழியக்காரர்களே தேவனுடைய கனமான ஊழியத்தின் அழைப்பை ஏசாவை போல அலட்சியப்படுத்தாதீர்கள். தேவனை ஒருகாலும் துக்கப்படுத்தாதீர்கள்.

இந்த கடைசி நாள்களில் நம்முடைய பார்வை சிந்தை மற்றும்  நம்முடைய இலக்கு எல்லாமே பரலோகத்தை நோக்கி இருக்கட்டும்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பெற்று தந்த தேவனுடைய விலையேறப் பெற்ற நித்திய ஜீவனை எந்த சூழ்நிலையிலும் இழந்து போகாதீர்கள்.

 

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.  பிலிப்பியர் 3-14

மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.   கொலோசெயர் 2-19

 

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி. மத்தேயு 25-21 என்ற வசனத்தின் படி இந்த உலகத்தில் வானத்தையும் பூமியையும் படைத்த உங்கள் எஜமான் கோடிக்கணக்கான ஜனங்களின் மத்தியில் உங்களை தெரிந்து கொண்டு உங்களை அழைத்து உங்களுக்கு கொடுத்த  கொஞ்ச காரியத்தில் உண்மையாயிருங்கள்.  ஆமென்.

bottom of page