top of page

தூய்மையான பரிசுத்த கண்கள்

 

உங்கள் கண்களுக்கு நேராய் யாராவது கல்லெறிவார்கள் என்றால் உங்களை அறியாமலே கண்களை பாதுகாக்கும் படி உங்களுடைய கை தீவிரமாய் இயங்கி கண்களுக்கு சேதம் வராதபடி காட்டுகிறது சுருங்கச் சொல்லப்போனால் கண்ணை பாதுகாப்பதற்காக மற்ற அனைத்து அவயங்களும் கருத்தாய் இயங்குகின்றன.

 

முதல் பாவம் ஏவாளின் கண்களின் இச்சையிலே தான் ஆரம்பித்தது. கர்த்தரால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் இச்சித்து அதை பறித்து புசித்து  கண்களின் இச்சையினால்  பாவம் வந்ததும் நமக்கு தெரிந்தது தான். பார்வைக்கு இன்பமும் இச்சிக்கப்படதக்க விருச்சத்துக்கு முன்பாக ஏவாளின் கண்கள் மயங்கி தோற்று போனது. இன்றைக்கு அநேக பரிசுத்தவான்களின் வீழ்ச்சிக்கு காரணம் அவர்களுடைய கண்கள் தான்.அநேக ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் பார்வைக்கு இன்பமான காரியங்களை பார்த்து மதி மயங்கி வீழ்ந்து போனார்கள்.

 

அநேக வாலிபர்கள் ஐயோ எங்களுக்கு கண்களின் இசையிலிருந்து விடுதலையே இல்லை என்று புலம்புகிறார்கள். வாலிபர்கள் மாத்திரமல்ல நிற்க்கிறேன் என்று சொல்கிற மகா பெரிய விசுவாசிகளும் மூப்பர்களும் பரிசுத்தத்தை பற்றி பேசுகிற ஊழியக்காரர்களும் கண்களின் இச்சையினால் பாவத்துக்கு அடிமையாகி போகிறார்கள்.

 

ஒரு வாலிபன் சொன்னான்:  நான் அறைக்குள் பூட்டி கொண்டிருக்கும்போது பரிசுத்தமாய் இருக்கிறேன், வெளியே வந்துவிட்டால் என் கண் ஆபாசங்களை நோக்குகிறது. என் இருதயம் என் கண்களை பின் தொடர்ந்து அருவருப்பானதை சிந்திக்கிறது. பிரயாணம் செய்யும்போது என் கவனமெல்லாம் பெண்கள் பக்கம் போகிறது.

 

மேலும் ஒரு சகோதரன் :  கம்ப்யூட்டரில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் உள்ள இடம் எங்கே இருக்கிறது என்று தான் நான் தேட போனேன் ஆனால் என் கண்களை பின் தொடர்ந்த என் இருதயம் கம்ப்யூட்டரில் வந்த பல விளம்பரங்கள் மற்றும் ஆபாச பகுதிகளுக்குள் என்னை அழைத்து சென்றது. எல்லாரும் தூங்கின பிறகு ரகசியமாய் நிர்வாணக் காட்சிகளை பார்த்து ரசித்து இன்றைக்கு பாவத்துக்கு அடிமையாய் போய்விட்டேன், என்னால் விடுதலை பெற முடியவில்லை!!  இன்றைய காலகட்டத்தில் அநேகர் பிசாசின் கண்ணியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

யோபு 31,7-9 ல் என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,

 என் மனம் யாதொரு ஸ்திரியின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,என்று தன் மீதே சாபம் வரட்டும் என்று யோபு சொல்வதை பார்க்கலாம்.

 

இயேசு கிறிஸ்து கண்களில் உள்ள பரிசுத்தத்தை குறித்து அதிகமாய் கண்டித்தும் எச்சரித்தும் பிரசங்கித்தார். கண் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது என்றார் உன் கண் தெளிவாய் இருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாய் இருக்கும் என்றார். இன்றைக்கு அநேகருடைய கண்களினால் உலகத்தின் ஆசை, இச்சைகளை பார்ப்பதினால் அவர்களின் வெளிச்சம் இருளாய் மாறிப்போனது.  மேலும், கண்ணின் இச்சையினாலே  ஊழியக்காரர்கள் மற்றும் அனேக விசுவாசிகள் தங்கள் தரிசனங்களை இழந்து போயிருக்கிறார்கள். மேலும் சொல்லவேண்டும் என்றால், அநேக விசுவாசிகள் ஊழியக்காரர்கள் தேவனுக்கு நேரம் கொடுக்காதபடிக்கு தேவசமூகத்தில் காத்திருக்காதபடிக்கு தங்கள் கண்களின் அடிமைத்தனத்தினால் இணையத்தளங்களில்  தங்கள் நேரத்தை அடகு வைத்து விட்டார்கள்.!?  உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும் என்றார். ஆனால், அநேக ஊழியக்காரர்கள் மேட்டிமையான கண்களினால் தங்களுக்கு வரும் கூட்டங்களை பார்த்து மயங்கி மனித புகழ்ச்சியை தேடி பெருமையினால் வீழ்ந்து போனார்கள். அநேகருடைய கண்கள் பிறரின் செயல்பாடுகளை குறை கூறும் கண்களாக மாறி போனது. ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம், தேவனோ இருதயத்தை பார்க்கிறார், இவர்கள் கண்களோ பிற ஊழியக்காரர்களின் வெளிப்புறத்தை பார்த்து குறை கண்டு பிடிக்கும் பரிசேய கண்களாக மாறிப்போனது.

 

ஒரு மனிதன் தன் கண்களை இச்சைக்கு அடிமையாக்கும் போது அவனை அறியாமலேயே சாத்தான் அவனுடைய மனக் கண்களை குருடாக்கி போடுகிறான். உங்களுடைய கண்கள் வேதத்தை வாசித்து வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும் படி என் கண்களைத் திறந்தருளும் என்று ஜெபியுங்கள். ஆத்தும பாரம் உள்ள மனதுருக்கம் உள்ள கண்கள் இருந்தால் அழிந்து போகிற ஜனங்களை எண்ணி இரவும் பகலும் உங்கள் கண்கள் கண்ணீர் சொரியும்.எரேமியா தீர்க்கதரிசியை பாருங்கள் அவர் கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார்.  ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும், அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன், என்று சொல்வதைப் பார்க்கலாம்.

 

எசேக்கியல் தீர்க்கதரிசியின் கண்கள் தரிசனங்களை காண்கிறதாக இருந்தது. தானியேலின் கண்கள் பின்வருவதை முன்பு கூறிய தீர்க்கதரிசனங்களை உடையதாயிருந்தது. யோசேப்பின் கண்கள் பரிசுத்தமுள்ள கண்களாயிருந்தது. யோவான் பத்மு தீவில் இருந்த போது அவருடைய கண்கள் எத்தனை பரலோக காட்சிகளை கண்டன. நமக்கு முன் மாதிரியை காண்பித்த இயேசு கிறிஸ்துவின் கண்களைப் பாருங்கள். அவருடைய கண்கள் பிரச்சனையினால் வாடுகின்ற மக்களைக் கண்டு பரிதவித்த கண்கள்.மனதுருக்கம் நிறைந்த கண்கள்.அவர் ஜனங்களைப் பார்த்து மனதுருகினார். அவருடைய கண்களும் பிதாவின் சித்தம் செய்ய வேண்டுமே என்று ஏங்குகிற கண்களாய் இருந்தது.

 

தாவீது அவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும் இஸ்ரவேல் தேசத்தின் ஜனங்களை அடக்கி ஆண்ட போதும் தன்னுடைய கண்களையோ அடக்கவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் மேல் உலாவி மாமிச கண்களோடு  பார்த்ததினால் விபச்சாரம் கொலைகள் சாபங்கள் என்று எத்தனை பாவங்கள். சிலருடைய கண்களில் மண்ணாசை பொன்னாசை பொருளாசை குடிகொண்டிருக்கின்றன. உங்களுடைய கண்களில் இச்சையோ பாவமோ பொருளாசையோ நிறைந்திருந்தால் சிலுவையண்டை ஓடி வந்து விடுங்கள்.இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்று உங்கள் கண்களை கழுவி சுத்திகரிக்கும் படி உங்களுடைய கண்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யுங்கள். அர்ப்பணித்து விடுங்கள் உங்களுடைய கண்கள் தெய்வீகமான பரிசுத்தமான கண்களாய் விளங்கட்டும் கர்த்தருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் விசுவாச கண்களாக மாறட்டும்.பரிசுத்தமான கண்கள் மாத்திரமே தேவனை தரிசிக்கும்.

 

 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119-37.  ஆமென்

bottom of page