top of page

ஊழல் அரசியல்வாதிகளுக்கும்,

தவறு செய்யும் ஊழியக்காரர்களுக்கும்,

ஆதரவு தெரிவித்த ஊழியக்காரர்கள்…..

 

 

கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஒரு அரசியல் கட்சி தலைவரை ஆதரித்து ஓட்டு போடும் படி இணையத்தளத்தில் பதிவிட்ட சில ஊழியக்காரர்கள் உண்டு. இவர்கள் தங்கள் சபைகளிலும் மறைமுகமாக ஆதரவளித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் அந்த அரசியல் கட்சி தலைவர் கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம்,கிறிஸ்தவர்கள் தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று  RSS காரர்களை போல பேசி தன் உன்மை நிலையை வெளிக்காட்டி விட்டார்.

 

அந்த அரசியல் கட்சி தலைவரின்  நிலைப்பாடு என்ன என்பதை இந்த ஊழியக்காரர்கள் உணர்ந்தார்களா?

 

ஏன் இத்தகய ஊழியக்காரர்கள் ஞானமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.?

 

கடந்த வருடம் கோயம்பத்தூரில் சில ஊழியக்காரர்கள் அமைச்சர்களை அழைத்து ஒரு பெரிய கூட்டம் நடத்தினார்கள்.

அதில் அநேக ஊழியக்காரர்கள்  கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டம் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக நடத்தப்பட்டது.

 

இதன் பின்புலத்தில் இருந்த ஊழியக்காரர்கள் யார்?

இவர்கள் ஏன் அரசியல்வாதிகளிடம் விலைப் போனார்கள்??

 

அன்றைக்கு அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழியக்காரர்கள் பிரசங்க மேடையை பரிசுத்த குலைச்சலாக்கி விட்டார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள்.

 

நம் தேவன் ராஜாக்களுக்கெல்லாம் அதிபதி என்ற வசனத்தை என்றைக்கு விசுவாசிப்பார்களோ அன்றைக்கு தான் இத்தகய ஊழியக்காரர்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும்  எழுப்புதல் வரும். உலகத்தின் ஆவியால் ஆளுகை செய்யப்பட்ட இத்தகய ஊழியக்காரர்கள் விடுதலை பெற ஜெபியுங்கள்.

பணத்தை வாங்கி கொண்டு அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட சொல்லும் மாயமாலமான வஞ்சிக்கிற ஊழியக்காரர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

அடுத்ததாக, காணிக்கை பணத்தை தங்கள்  ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் சினிமாகாரர்களைப் போல  உயர்த்தி கொள்ளும்  ஊழியக்காரர்களை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் தானே.!!!?

 

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். யோவான் 12:43

 

இயேசு சொன்ன இந்த வசனத்தின் படி தங்களை தாங்களே உயர்த்தி கொள்பவர்களை பகுத்தறியுங்கள். பெரும்பாலான இன்றைய ஊழியக்காரர்கள் விளம்பர பிரியர்களாக மாறிவிட்டார்கள்.

 

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஒரு முன்னனி ஊழியக்காரர் அலுவலகங்களில் IT raid நடந்தது. கணக்கில் காட்டப்படாடாத 120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஊழியர் கூட்டமைப்பு இவரை பெரிய விளம்பரத்தோடு பயன்படுத்தினார்கள். பல ஊழியக்காரர்கள் அந்த Online ல் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஒரு அரசியல்வாதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும்  போது அவரை ஊழல்வாதி மற்றும் திருடன் என்கிறோம்.

ஆனால் அதே மாதிரி குற்றம் சாட்டப்பட்ட ஊழியக்காரன் தான் நிரபராதி என் மேல் தப்பு இல்லை என்று மறுப்பு தெரிவிக்கவே இல்லை. ஒரு ஊழியக்காரருக்கு எதற்கு அவ்வளவு சொத்துக்கள் என்று யோசித்து பாருங்கள்.

மேலும் அவர் இவ்வளவு சொத்து சேர்த்த பின்னும் ஏன் ஜனங்களிடம் இன்னும் காணிக்கை கேட்கிறார்.? அவரது செய்கையால் இயேசுவின் நாமம் தூசிக்கப்படுகிறது.

 

இணையத்தளங்களில் அவரை பற்றிய செய்திகள் இயேசுவின் நாமத்துக்கும் ஊழியத்துக்கும் அபகீர்த்தியை உண்டாக்கியது.

நீங்கள் அவரை பயன்படுத்துவதால் அவர்  குற்றமற்றவர் என்று சொல்லி நியாயப்படுத்துகிறீர்களா? அவர் தன்னை குற்றமற்றவன் என்று நிருபிக்கட்டும், அதன் பிறகு பயன்படுத்தலாமே!  உங்கள் சபையில் ஊழியத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு விசுவாசியோ அல்லது சக ஊழியக்காரரோ தவறு செய்யும் போது அதை கண்டிக்கிறீர்கள், அவரை ஊழியம் செய்ய தடை செய்கிறீர்கள்.

அப்படியிருக்க அரசாங்கத்துக்கு கணக்கு காட்டாமல் அதிக சொத்து சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஊழியக்காரரை பயன்படுத்துவது மாயமாலம் தானே? ஊழியக்காரன் என்கிற ஸ்தானத்தில்  நீங்கள் செய்யும் மாயமாலத்தை தேவன் பார்த்து கொண்டிருக்கிறார். அவருடைய ராஜியத்துக்காக கண்ணீரோடு ஜெபிப்பதற்கு ஒரு கூட்டம் ஜனங்கள் உண்டு. அவர்கள் மறைந்திருந்து தேசங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கிறார்கள். பல உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள் உண்டு. இந்தியாவில் பாடுகள் மத்தியில் ஊழியம் செய்து அநேகரை கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்கிறவர்கள் உண்டு.அவர்கள் போடுவதற்கு கூட சரியான உடை கிடையாது. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

 

 

எனவே கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் தவறான ஊழியக்காரரை அழைத்து ஏராளமான பணத்தை செலவழித்து கூட்டம் நடத்தாதீர்கள்.

 

தவறான ஊழியக்காரரை சரியான இடத்தில் பயன்படுத்தும் போது சரியான இடமும் தவறாக மாறிவிடும். சரியான இடத்தில் தவறான காரியங்களை பேசும் போது சரியான இடமும் தவறாக மாறிவிடும்.

நீங்கள் தேவ சித்தத்தின் படி செய்யாத எல்லா காரியத்திலும் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். சந்திப்பின் நாளிலே நீங்கள் எந்த நோக்கத்துக்காக எதற்காக ஊழியம் செய்தீர்கள் என்று தேவன் உங்களை பார்த்து நிச்சயம் கேட்பார்.

 

நாம் யாரால் ஆளுகை செய்யப்பட வேண்டும்.நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோம் என்பதை மறந்து போனோம்.

 

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 பேதுரு 3:22

 

உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. வெளிப்படுத்தினத விசேஷம் 1:5

 

உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயம் தீர்க்க போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வேதம் சொல்கிறது.

 

இப்படிபட்ட அதரிசனமான தேவனுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட பல ஊழியக்காரர்கள் பணம் மற்றும் மனித புகழ்ச்சி என்கிற அடிமைதனத்துக்குள் வீழ்ந்து போனதை பகுத்தறியுங்கள். பல ஊழியக்காரர்கள் அரசியல்வாதிகளுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஜனங்கள் இவர்களை பகுத்தறிய வேண்டும்.

 

தயவு செய்து அரசியல்வாதிகளை சந்தித்து அவர்களுடன் Photo க்கு Pose கொடுத்து அதை இணையத்தளங்களின் வெளியிட்டு காலத்தை வீணாக்கும் ஊழியக்காரர்களை எந்த நோக்கத்தில் இதை செய்கிறார் என்பதை நிதானித்து அறியுங்கள். பேர் புகழ்சிக்காக தங்களை பிஷப் என்றும் டாக்டர் என்றும் இணையத்தளங்களில் தங்களை தாங்களே புகழ்ந்து கொள்ளும் ஊழியக்காரர்ளுக்கு ஜால்ரா போடாதீர்கள்.!!!

மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள்.  தவறு செய்து குற்றம் சுமத்தப்பட்ட ஊழியக்காரர்களை உங்களை உயர்த்தி கொள்ளவோ கூட்டம் சேர்க்கவோ பயன்படுத்தாதீர்கள்.

 

நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்பாதேயுங்கள் என்று வேதம் சொல்கிறது.

 

இயேசு,ஊழியம் செய்த பிறகு அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் கடமையை மாத்திரம் செய்ததாக சொல்ல சொன்னார். ஒரு வேலைக்காரனின் கண்கள் தன் எஜமானின் கைகளை நோக்கி இருக்க வேண்டும்.தன் சிலுவையை எடுத்து கொண்டு அவருக்கு பின் செல்லாதவன் அவருக்கு பாத்திரன் அல்ல.

 

உங்கள் ஊழியப்பதையில் அவர் காட்டிய அடிசுவட்டையும் மாதிரியையும் பின்பற்றுங்கள். பரலோகத்தில் உங்கள் பெயர் எழுதபட்டதற்காக சந்தோஷப்படுங்கள். ஊழியம் செய்கிறவர்களுக்கே அதிக ஆக்கினை என்பதை அறியுங்கள்.

தயவு செய்து ஊழியத்தில் இயேசு காட்டிய பாதையை விட்டு தவறாக பயணிக்கும் ஊழியக்காரர்களை அழைத்து கொண்டு வந்து உங்களை சார்ந்துள்ள விசுவாசிகளை வஞ்சிக்காதிருங்கள்.

 

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் வெளி 1-7

 

அவர் வரும் போது ஒரு பெரிய புலம்பல் ஊழியக்காரர்கள் மத்தியில் தான் எழும்பும்.சத்தியத்தை பிரசங்கம் பண்ணியும் நித்திய வழிகளை மறந்து உலகவழிகளில் பயணித்த அநேக ஊழியக்காரர்களால் தாங்கள் கைவிடப்பட்டதை தாங்க முடியாது.

bottom of page