top of page

உலகத்தாருக்காக இடுக்கமான வாசலை விசாலமாக்கும்

ஊழியக்காரர்கள் !!

 

ரலோகத்துக்கு பிரவேசிப்பதற்கு இயேசு காட்டிய வாசல் இடுக்கமான வாசல். ஆவியின் கனி என்ற சாவியினால் தான் அதற்குள் பிரவேசிக்க முடியும், தேவனுக்கு பயந்து தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானதை செய்பவன் தான் ஆவியின் கனியால் நிறைந்த ஜீவியத்தை பெற்றிட முடியும். இன்றைக்கு சபைகளில் சிலர் தான் இயேசு காட்டிய இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்க வகை தேடுகிறார்கள். இவர்கள் தான் சத்தியத்தையும் தேவனையும் அறிந்தவர்கள். இவர்களுக்கு தேவன் திறந்த வாசலையே வைத்திருக்கிறார்.

 

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.   வெளிப்படுத்தின விசேஷம் 3-8

 

இதற்கு மாறாக அநேக ஊழியக்காரர்கள் உலகத்தார் உட் பிரவேசிக்கும்படி வாசலை விசாலமாக காண்பிக்கின்றனர்.

 

இன்றைக்கு சூழ்நிலைக்கேற்றவாறு உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து ஜனங்களை சந்தோஷப்படுத்தி அவர்களை தங்கள் மார்க்கத்தானாக்கி நரகத்தின் பிள்ளைகளாக்குகிறவர்கள் அநேகர். இவர்கள் கூட்டம் சேர்ப்பதற்காகவும் வந்த ஜனங்களை தக்க வைத்து கொள்வதற்காகவும் இசைகருவிகளையும் வண்ண ஒளி விளக்குகளையும் வைத்து சுய திருப்தியான ஆராதனைகளினாலும் மனித ஞானத்துக்குறிய நயவசனிப்பான பிரசங்கங்களினாலும்  ஜனங்களை கவர்ந்து கொள்கிறார்கள்.அநேக ஜனங்கள் தேவன் மேலிருந்த ஆதி அன்பை இழந்து தாங்கள் பல ஆண்டுகளாக போய் கொண்டிருந்த சபைகளை விட்டு விலகி போய் இத்தகய சபைகளில் சேர்ந்து வீணராக போனார்கள்.

 

சமீபத்தில் பெங்களூருவில் ஒரு சபையில் ஆராதனையின் மத்தியில் ஒரு பெண் வந்து சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் பற்றி 15 நிமிடம் வகுப்பு நடத்துகிறார். அடுத்த வாரம் மற்றொருவர் சமையல் பற்றி பேசுகிறார். இப்படியாக ஜனங்களை குஷிப்படுத்த அநேக உலக காரியங்களை சபைக்குள்ளே கொண்டு வந்து விட்டார்கள்.

 

மேலும், தமிழ் நாட்டில் உள்ள சில சபைகளில் இந்த தேர்தல் நாள்களில்  சபையின் மூப்பர்கள் அரசியல்வாதிகளை சந்தித்து நாங்கள் எங்கள் சபையினரை உங்களுக்கு வாக்களிக்க சொல்கிறோம். எங்களிடம் 500 முதல் 1000  பேர்கள் வரை இருக்கிறார்கள் என்று சொல்லி சபை ஜனங்களை அரசியல்வாதிகளிடம் விற்று விடுகின்றனர். தாங்கள் ஓட்டுக்காக விற்கப்பட்டது அந்த சபை ஜனங்களுக்கு கூட தெரிவதில்லை???  இவார்கள் தேவனுடைய சபையை கள்ளர் குகையாக்கி விட்டார்கள். கள்ளர்களும், விபச்சாரர்களும் மனம் திரும்பி தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள். ஆனால் ராஜ்ஜியத்தின் புத்திரர்கள்  என்று தங்களை சொல்லி கொள்கிற சபையின் மூப்பர்கள் கள்ளர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் மாறி விட்டார்கள்.

 

அடுத்ததாக தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக விவாகரத்துக்கள் கள்ள தொடர்புகள் இன்னும் அநேக காரியங்கள் சபைக்குள் நுழைந்து விட்டன.விபச்சாரம் செய்கிறவர்களும் கள்ளர்களும் மதுப்பானம் குடிப்பவர்களும் முரட்டாட்டம் உள்ளவர்களும் சபையின் அதிகாரத்தில் வந்து விட்டார்கள்.பண பலமுள்ள இவர்களை யாரும் எதிர்த்து நிற்க முடிவதில்லை.ஊழியக்காரர்  கூட இவர்கள் செய்கிற பாவங்களை சொல்லி ஜனங்களை கண்டித்துணர்த்தாத நிலைமை. ஜனங்களுக்கும் வாலிபர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்கள் மூப்பர் ஸ்தானத்தில் உட்கார்ந்து சபைகளின் காரியத்தை செய்யும் போது சபையில் எங்கு தேவ பிரசன்னம் மற்றும் பக்தி விருத்தி இருக்கும்.இந்த காரியங்களுக்காக தயவு செய்து ஜெபியுங்கள்.

 

ஆவிக்குறிய சபைகள் என்று சொல்கிறவர்கள் கூட ஜனங்களை வசீகரிக்க தங்கள் ஆராதனையை மாற்றி விட்டார்கள்.சமீபத்தில் ஒருவரை சந்தித்த போது.அவர் ஒரு குறிப்பிட்ட சபையை காட்டி இந்த சபையின் ஆராதனை என்ன?வண்ண விளக்குகளின் அலங்காரம் என்ன?அருமையான இசையோடு கூடிய  சூப்பரான ஆராதனை என்றார்.பழைய சபைக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு எப்பவாவது போய் தலையை காட்டி விட்டு வந்து விடுவேன் என்றார். தனக்காக இவ்வளவு காலம் ஜெபித்த தன் ஊழியக்காரனையும் சபையினரையும்  மறந்து ஆசீர்வாதமும் அந்தஸ்தும் வந்தவுடன் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கும் ஆடம்பரமான சபைளுக்கு ஓடி போய் விட்டார். இத்தகய சபைக்கு போகும் ஜனங்களும் ஏதோ கல்யாண வீட்டு Reception  க்கு போவது போல ஜாலியாக செல்கின்றனர்.இதை விட கொடுமை என்னவென்றால் ஜனங்களுக்கு முன்பாக தங்களை உயர்த்தி காட்டி கொள்ளும்படியாக  விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் அஸ்தஸ்தை காட்டும்படியாக மாறி போனவர்கள் அநேகர். சபை ஆராதனைக்காக Beauty Parlor களுக்கு சென்று அலங்காரம் செய்து கொண்டு புதிய ஆடைகளை வாங்கி அணிபவர்கள் பலர் இருக்கிறார்கள். நல்ல உடை அணிவதில் தவறில்லை! ஆனால் எதற்காக அணிகிறோம் என்கிற நோக்கம் முக்கியம். ஆலயத்துக்கு செல்லும் நாம் நம் நடையை காத்து கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

ஜனங்களை கவரும் நோக்கத்தில் நாம்  நம்மை ஒரு போதும் உயர்த்தி கொள்ள கூடாது.ஏனென்றால் பெருமையினால் தானே நான் பெரியவன்... நான் அழகுள்ளவள் நான் பணக்காரன் நான் ஆவிக்குறிய வரங்களை உடையவன் என்று நம்மை வெளிப்படுத்துகிறோம்.

இருதயத்தில் பெருமையை வைத்து கொண்டு மனிதர்கள் முன்பாக ஆவிக்குறியவன் என்று காட்டுவது மாய்மாலமானது தானே.

 

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார், மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.   லூக்கா 16-15

 

இத்தகய சபைகளில் மெய்யான மனம் திரும்புதல் இல்லை.பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தப்படுவது இல்லை.இந்த ஊழியக்காரர்கள் இயேசு சொன்ன இடுக்கமான வாசலை விசாலமாக்கி அநேகர் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கலாம் என்று சொல்லி ஜனங்களை உலகத்தாராக்கி விட்டார்கள்.இவர்களுக்கு முன்பாக தேவன் அடைக்கப்பட்ட வாசலை வைத்திருக்கிறார்.

இயேசுவோ பிதாவிடம் தன் சீஷர்களுக்காக ஜெபிக்கும் போது நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தார்கள் அல்ல என்று சாட்சி கொடுத்தார்.இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்க வேண்டும்.பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவ சமூகத்தில் காணப்பட வேண்டும் என்று வேதம் சொல்லும் எச்சரிக்கைகளை உதாசீனம் பண்ணி விட்டார்கள்.

 

ஒரு முறை என் நண்பர் ஒரு சபையில் வருடாந்திர கன்வென்ஷனுக்காக துதி ஆராதனை நடத்த அழைக்கப்பட்டிருந்தார்.அவர் ஜெபத்தோடு அங்கு போன போது அந்த சபையின் போதகர் அவரிடம் ஜனங்களை இசையினாலும் பாடல்களினாலும் மேடை கச்சேரி போல நன்கு Entertain பண்ணுங்கள் என்று சொன்னாராம். இவர் சொன்னாராம் நான் தேவனுடைய ஊழியத்தை செய்ய வந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் எப்படி நடத்துகிறாரோ அப்படி தான் நான் நடத்தமுடியும் என்று சொல்லி விட்டாராம்.இன்றைக்கு கன்வென்ஷன் கூட்டங்கள் கூட பொழுது போக்கும் திருவிழாக்கள் மாதிரி மாறி விட்டது. எத்தனை கன்வென்ஷன் நடத்தினாலும் ஜனங்களிடம் மாற்றம் இல்லை. ஏனென்றால், பல ஊழியக்காரர்கள் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்ள  தேவ சித்தத்துக்கு விரோதமாக பல காரியங்களை செய்கிறார்கள். சந்திப்பின் நாளிலே தேவ சித்தத்தை  செய்யாத ஊழியக்காரரை பார்த்து அக்கிரம சிந்தை காரர்களே என்று இயேசு சொல்வதை பற்றி இவர்களுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. இறுதியில் சத்தியத்தை விட்டு இடது புறமும் வலது புறமும் சாய ஆரம்பித்து விட்டார்கள்.

 

தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,  எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.  அப்போஸ்தலர் 20:26,27

 

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்ககனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான், ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.   எசேக்கியேல் 33-8

 

மேல் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் எல்லா ஊழியக்காரர்களுக்கும் ஒரு எச்சரிக்கை.நாளை தேவன் உங்களை பார்த்து உங்கள் கைகள் இரத்தக்கறை படிந்திருக்கிறது என்று சொல்லாதபடிக்கு ஜனங்களை சத்தியத்துக்கு நேராக நடத்துங்கள்.

 

  • தேவனுடைய வழிகள் ஆராயபடாதவைகள்.

  • அவருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

 

என்று வேதம் சொல்கிறது. மனிதனுடைய வழிகளையே ஒரு மனிதனால் ஆராய்ந்து அறிய முடியாது.அப்படியிருக்க தேவனுடைய வழிகள் தேவையில்லை.என்று சொல்பவன் யார்? மனிதனுக்கு செம்மையாக தோன்றுகிற வழிகள் மரண வழிகள் என்று வேதம் எச்சரிக்கிறது.

 

அறிவில்லாத வார்த்தையினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?   யோபு 38-2

 

 அப்படியிருக்க  மனிதன் உருவாக்கிய சட்ட திட்டங்களை வைத்து கொண்டு இயேசுவின் கட்டளைகளை புறக்கணிக்கும் உங்கள் ஸ்தாபன சபைகளை பகுத்தறியுங்கள். வேதாகமத்தில் சொல்லப்பட்ட சத்தியங்களுக்கு செவி கொடாவிட்டால் பரலோகத்துக்கு போகமாட்டீர்கள் என்ற தேவனுடைய கட்டளைகளை சில வசனங்களை கொண்டு புரட்டி அது தேவையில்லை என்று சொல்லுகிறவர்கள் கள்ள போதகர்கள் தானே. இவர்கள் சத்தியத்தை அதாவது தேவனுடைய ஆலோசனையை ஜனங்களுக்கு போதிக்காமல் ஜனங்களை வஞ்சிக்கிறார்களே.

 

என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.   நீதிமொழிகள் 1-25

 

பிரியமானவர்களே ஒரு வேளை நீங்கள் உலகத்துக்கும் தங்கள் ஸ்தாபனங்களுக்கும் ஒத்த வேஷம் தரிக்கும் சபைகளுக்கு போய் கொண்டிருக்கலாம். உங்கள் சபை உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நித்திய ஜீவனுக்கு நேராக நடத்துகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை.இயேசு சொன்ன கடைசி கால தீர்க்கதரிசனம் கொள்ளை நோய் வரையில் நிறைவேறி விட்ட நிலையில் இன்னும் உணர்வில்லாமல் இருக்கிறீர்களா?

 

 (ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.  மத்தேயு 24-39)

 

உங்கள் ஆவிக்குறிய வாழ்க்கையில் ஒரு மாற்றம் இருக்கிறதா?உங்கள் பிள்ளைகள் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுகிறார்களா?அல்லது உலகத்தின் ஆவியால் நிரப்பபட்டு உலகத்தில் உள்ளவனுக்கு அடிமையாக இருக்கிறார்களா?உங்களுக்கு தேவனுக்கு பயப்படும் பயம் இல்லையென்றால் உங்கள் சபை தன் பிராதான பணியை சரியாக செய்யவிலையென்று தானே அர்த்தம்.நேற்று விட இன்றைக்கு அதிகமாக பரிசுத்தமாயிருக்கிறீர்களா? போன வாரத்தை விட இந்த வாரம் மேலும் போன மாதத்தை விட இந்த மாதம் அதிக பரிசுத்தமாயிருக்கிறீர்களா?பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். நீதி செய்கிறவன் இன்னும் நீதி செய்யட்டும் என்று இயேசு எச்சரித்தாரே !

 

ஆவியின் கனி இல்லாமல் ஆவிக்குறிய சபைக்கு போகிறேன் என்று சொல்லி உங்களை ஏமாற்றி கொள்ளாதீர்கள்.  கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்ற எச்சரிப்பை மறந்து போகாதீர்கள். உங்களிடம் இருக்கும் ஆவிக்குறிய வரங்களை பற்றி பெருமை பாராட்டாதீர்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயேசுவின் அடிச்சுவடை அதாவது அவர் வைத்து விட்டு சென்ற மாதிரியை பின்பற்றும் படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்காதீர்கள்.உங்கள் சுபாவங்களில் மாற்றம் இருக்கிறதா?  நான் மாறி இருக்கிறேனா? என்று எப்பவாவது உங்களை சுய பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய குடும்பத்தார் உங்களை பார்த்து நீங்கள் உண்மையிலே தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்கிறார்களா?

 

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார். அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.   1 யோவான் 3-24

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.   1 யோவான் 2-6

 

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.  எபேசியர் 2-10.

 

பிரியமானவர்களே உங்களுக்கு நோய் வந்தால் நல்ல மருத்துவரை நல்ல மருத்துவமனைகளை தேடி ஓடுகிற நீங்கள் வசனத்தின் படி சரியாக வழி நடத்துகிற சபையை ஏன் தேர்ந்தெடுப்பதில்லை.

சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு சொன்னார்.நீங்கள் சத்தியத்தை அறியாதபடிக்கும் சத்தியத்தின் படி வழி நடத்தபடாதபடிக்கும் உங்களை குருடராக்கி வைத்திருக்கும் குருடருக்கு வழி காட்டும் சபைகளையும் அதை நடத்தும் குருடர்களையும் பகுத்தறியுங்கள்.

 

 அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள், குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்று இயேசு சொன்னார்.   மத்தேயு 15-14.

bottom of page