top of page

உங்கள் செவிகள் கேட்கும் காரியங்கள் தேவனுக்கு பிரியமாயிருக்கட்டும்

நம் செவிகள் சுத்திகரிக்கப்பட வேண்டும்.அப் 7-51ல் (வணங்கா  கழுத்துள்ளவர்களே இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே) என்று வேதம் சொல்கிறது,விருத்தசேதனம் என்பது சுத்திகரிப்பை குறிக்கிறது. நீதி 17-4 ல் (துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்று கேட்கிறான். பொய்யன் கேடுள்ள நாவுக்கு செவி கொடுக்கிறான்). நீங்கள் கேட்கும் காரியங்களே உங்களை பொய்யனாகவும் துஷ்டனாகவும் மாற்றிவிடும்.நாம் எதை கேட்கிறோம் யாரிடம் கேட்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பிசாசானவன் மனிதர்கள் மூலமாய் நம்மை இடறலுண்டாக்கும் படி பேசுகிறான். ஏவாள் பிசாசின் சத்ததிற்கு செவி கொடுத்ததினால் தேவ கட்டளையை மீறி ஆசீர்வாதத்தை இழந்து போனாள்.

 

இன்றைக்கு நாம் நம்மிடம் பேசுகிறவர்கள் யாரால் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பகுத்தறிய வேண்டும். இன்றைக்கு நாம் பிறருடைய பலவீனங்களையும் அந்தரங்க விஷயங்களையும் கேட்பதில் அதிக வாஞ்சையொடு செயல்படுகிறோம். இது மிகவும் அபாயகரமானது. ஏனென்றால் பிறரை பற்றிய தவறான தகவல்களை நாம் சேகரித்து இறுதியில் அந்த நபரை நாம் தூசித்து பேசிவிடுகிறோம். ஆகாத சம்பாஷனைகள் நம் ஒழுக்கத்தையே கெடுத்துவிடும். நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தில் கெட்ட தண்ணீர் கலக்கும் போது அந்த நல்ல தண்ணீரும் கெட்டு போய்விடும்,அது போல தவறான மற்றும் பரிசுத்ததிற்க்கு மாறான காரியங்கள் நம் செவிகள் வழியாக இருதயத்திற்குள் போகும் போது அது இருதயத்தின் எண்ணங்களையும் உள்ளந்திரியங்களையும்  அசுசிப்படுத்திவிடும். பிறரை பற்றி புறங்கூறி திரிபவர்களையும் பிறரை குறை கூறி நியாயம் தீர்ப்பவர்களையும் விட்டு உடனே விலகுங்கள்,ஏனென்றால் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருப்பீர்களென்றால் சிறிது நேரத்தில் நீங்களும் அந்த பாவத்தை செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

 

நாம் பெலவீனமாயிருக்கும் நேரத்தில் அவர்களிடத்தில் இருக்கும் அந்த குற்றப்படுத்தும் ஆவி நம்மை படிபடியாக ஆளுகை செய்ய ஆரம்பிக்கும். எனவே இந்த கடைசி நாள்களில்  நம் செவிகள் தேவன் பேசுவதை கேட்கும் படி நம் செவிகளை விருத்தசேதனம் பண்ணி கொள்வோம். நம் தேவன் தங்கும் நம்முடைய ஆலயத்தின் வாசலில் ஒன்றாகிய செவி அசுசியான காரியங்களை உள்ளே அனுமதிக்கபடாதபடிக்கு அடைக்கப்படட்டும். உங்கள் செவிகளை நீதியின் ஆயுதமாக ஒப்பு கொடுங்கள். ஆமென்.

bottom of page