பணப்பிரியர்கள்
நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரேயர் 13-5.
இன்றைக்கு அநேகர் தேவனை விட்டு விலகுவதற்க்கு பிசாசு வைத்திருக்கும் ஆயுதம் பண ஆசை.தவறாக சம்பாதிக்கும் பணம் நம் வீட்டுக்கு வரும் போது அது சாபத்தையும் கொண்டு வந்து விடும். அந்த சாபம் படிபடியாக மெதுவாக அந்த குடும்பத்தையே முழுமையாக ஆளுகை செய்துவிடும். கள்ள தராசு தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் சொல்கிறது. நாம் எந்த தொழில் செய்தாலும் நியாயமாகவும் நீதியாகவும் செய்ய வேண்டும். தரம் குறைந்த பொருள்களை பயன்படுத்திவிட்டு அதிக பணத்தை பெற்று கொண்டு தங்களை நம்பினவர்களை ஏமாற்றுகிறார்கள். தேவனுடைய பார்வையில் இது மிகவும் அருவருப்பானது. தேவனை நம்பாமல் பணத்தை நம்புகிறதினால் தானே அநேகரை ஏமாற்றி துணிகரமாக பாவம் செய்து அநியாயமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள்,ஒரு முறை ஒரு பிரபலமான ஊழியக்காரரை மரணப்படுக்கையில் கிடந்த ஒரு தொழிலதிபருக்கு ஜெபிப்பதற்காக அழைத்திருந்தார்கள். அவர் அந்த வீட்டுக்கு சென்றவுடன் அந்த குடும்பத்தினர் ஒரு சூட்கேஸ் நிறைய பணத்தை அவருக்கு கொடுக்க முயன்றார்கள். தேவன் அவரது கண்ணை திறந்தார். அந்த சூட்கேசில் இருந்த பணத்தின் மேல் இரத்தகறை படித்திருந்ததை காண்பித்தார். தேவன் அவரிடம் இவன் பலரை ஏமாற்றி அநியாயமாக பணத்தை சம்பாதித்ததினால் இவன் மேல் என் நியாயதீர்ப்பு இருக்கிறது. இவனுக்காக ஜெபிக்காதே என்று சொன்னாராம்.சகேயு வீட்டிற்கு இயேசு வந்தவுடன் அவன் மனம் திரும்பி தான் அநியாயமாக சம்பாதித்த பணத்தை திருப்பி கொடுத்தான். இன்றைக்கு அநேகர் தங்கள் வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கூட ஒழுங்காக கொடுப்பதில்லை,மேலும் இவர்கள் ஊழியம் செய்வதால் தேவநாமம் தூசிக்கப்படுகிறது. பண விஷயத்தில் உண்மையில்லாதவர்களை தேவன் எப்பொழுதும் அங்கிகரிப்பதில்லை. இவர்கள் தங்களிடம் உள்ள வரங்களினால் மனிதர்கள் முன்பாக பெரியகாரியங்களை செய்யலாம். ஆனால் இவர்களின் கனியற்ற தன்மையினால் இவர்கள் தேவனால் நியாயம் தீர்க்கப்படுவார்கள். ஊழியம் செய்கிற அநேகர் ஆதியில் தேவனை அதிகமாக நேசித்தவர்கள் போக போக உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து இறுதியில் பணத்தை அதிகமாக நேசித்து தேவசித்தத்தை விட்டு விலகி பணத்தை சம்பாதிக்கும் படி தங்கள் ஊழியங்களை அமைத்து கொள்கிறார்கள். மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கி கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5.
இன்றைக்கு சபைகளில் கூட ஊழியக்காரர்கள் பணக்காரர்களையே அதிகமாக விசாரிக்கிறார்கள். சபைகளில் ஏழைகள் கனப்படுத்தபடுவதில்லை அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், பணக்காரர்களிடம் இருந்து சபைக்கு வருமானம் வருவதால் சபைகளில் பணக்காரர்கள் மேன்மைபடுத்தபட்டு தேவ சித்தத்துக்கு மாறாக அவர்களுக்கு பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. கந்தையான வஸ்திரம் தரித்தவனை புறக்கணித்து மினுக்குள்ள வஸ்திரம் தரித்தவர்களை கனம் பண்ணி தங்களுக்குள்ளே பேதகம் பண்ணி தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிற ஊழியக்காரர்களால் சபை தன் ஒரு மனதை இழந்து போகிறது. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் பணப்பிரியர்களாக மாறிவிட்டதினால் தேவன் மேல் உள்ள விசுவாசத்தை இழந்து பரலோகம் என்ற இலக்கை மறந்து கண் சொருகி போன குருடர்களாக மாறிவிட்டார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோத்தேயு 6:10
நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு 6:11
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 6:12. ஆமென்