top of page

உன் வீட்டாரிடம், உன் இனத்தாரிடம் சொல் !?

 

இன்றைக்கு நம்மில் அநேகர் இரட்சிப்பின் சந்தோஷத்தை அதாவது பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்று நித்திய ஜீவனைப் பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இத்தகய விலைமதிக்க முடியாத இரட்சிப்பை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து கல்வாரி சிலுவையிலே தன்னுடைய பரிசுத்த ரத்தத்தை சிந்தி நமக்காக பெற்றுத் தந்திருக்கிறார் நம்முடைய பாவங்கள் சாபங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் நீக்கி நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார்.

 

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12

 

பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை நம்முடைய இனத்தாருக்கு சொல்லுகிறோம்?, நம்முடைய குடும்பத்தாருக்கு சொல்லுகிறோம்.??

 

இன்றைக்கு இந்த இரட்சிப்பின் அனுபவங்களை இரட்சிப்பின் சந்தோஷத்தை இன்றைக்கு உங்க குடும்பத்தாரிடம் நம்முடைய இனத்தாரிடம் நாம் சொல்லவில்லையென்றால் நாம் சுய நலம் உள்ளவர்களாக இருக்கிறோம்.!  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து உலகத்தின் பாவத்துக்காக மரித்தார் நம்முடைய கிறிஸ்தவர்களுடைய பாவத்துக்காக மாத்திரமல்ல இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அவர் சொன்னார் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஒரு சிலாக்கியத்தை நாம் பெற்ற பிறகு அதை ஏன் நம்முடைய குடும்பத்தாரிடம் நான் நாம் பகிர்ந்து கொள்வதில்லை??!

பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் அதன் மூலமாக வரும் இரட்சிப்பையும் பெற்று கொண்டு அதை காத்து கொள்கிறவர்களுக்கே பரலோக ராஜியம் என்று வேதாகமம் சொல்கிறதே.!!

 

லூக்கா 16 ம் அதிகாரத்தில் பாதாளத்தில் வேதனையை அனுபவித்த ஐசுவரியவான் எனக்கு ஐந்து சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வரக்கூடாது என்று பரிதவிப்பதை பார்க்கிறோம்.

அப்படியிருக்க இரட்சிப்பை பெற்று கொள்ளாத உங்கள் குடும்பத்தார் மற்றும் உங்கள் ஊரார் நரகத்துக்கு போகட்டும்.நான் பரலோகம் போய்விடுவேன் என்று விரும்புகிறீர்களா?

 

இன்றைக்கு அநேக புற ஜாதி ஜனங்கள் இரட்சிக்கபடுகிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் அவர்கள் தங்களை போல தங்கள் குடும்பத்தாரும் இரட்சிக்கபட வேண்டும் என்று கதறி அழுகிறார்கள். நான் இரட்சிக்கப்பட்டது போல என் வீட்டார்கள் என் ஊரை சார்ந்தவர்கள் இரட்சிக்கபட வேண்டும் என்று பாரத்தோடு ஜெபிக்கிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தாரிடம் போய் தைரியமாக   உண்மையை சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அன்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இல்லை!!.  ஆனால் பிற மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் சொல்ல கூடிய ஒரு காரியம் என்ன தெரியுமா? இரட்சிப்பை பற்றி எங்களுக்கு தான் நன்றாக தெரியும். ஏனெனில்  நாங்கள் இருளில் இருந்தோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஒளியினிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சாட்சி சொல்வதைப் பார்க்கலாம்.ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் இரட்சிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறோம். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று சொல்கிறவன், தான் அறிந்து கொள்ள வேண்டிய பிரகாரம் ஒன்றையும் அறிந்து கொள்ளவில்லை என்று வேதம் சொல்வது எவ்வளவு உண்மை.

 

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16-16 என்ற வசனத்தை சொன்னவர் யார்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அல்லவா?இந்த வசனத்தின் அர்த்தத்தையே…..!!

எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே….  சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று யோவான் 8-32 ல் இயேசு சொன்னாரே?!  தவறாமல் ஆலயத்துக்கு போகிற அநேகரின் மனக்கண்கள் சத்தியத்தை அறியாதபடிக்கு குருடாக இருக்கிறதே.!?

 

இன்றைக்கு பாவமன்னிப்பின் நிச்சயத்தை இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாத அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சபைக்கு போகிறார்கள் வருகிறார்கள் ஆனால் அதே பாவத்தில் தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு காலத்திலே நான் சத்தியத்தை அறியாதவனாய் இருந்தேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஒழுங்காக சபைக்கு போய் விடுவேன். நான் ஒரு கிறிஸ்தவன் தான், நான் வேதாகமத்தை படித்தவன் தான். ஆனால் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ளவில்லை, பாவத்தை பற்றிய அறிவே எனக்கு இல்லை. நான் ஒரு நகரத்தில் படித்துக் கொண்டிருந்த போது என் நண்பருக்கு தெரிந்த ஒருவர் வந்திருந்தார், அவர் என்னிடம் தம்பி நீங்க இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களா என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. கோபத்தோடு அவரை  பார்த்து உங்களுக்கு இதே தான் வேலை. யாரை பார்த்தாலும் இரட்சிக்கப்பட்டீர்களா என்று கேட்கிறீர்கள். நான் ஒரு கிறிஸ்தவன், சிறு வயதிலிருந்தே ஆலயத்துக்கு போகிறேன், எனக்கு எல்லாம் தெரியும். உங்க வேலைய பாத்துட்டு போங்க என்று கோபத்தோடு சொன்னேன். அவர் அமைதியோடு போய் விட்டார். ஆனால் அன்று  அதிகாலையில் நாங்க தங்கி இருந்த அறையில் ஒரு மூணு மணி இருக்கும் அவர் ஜெபித்துக் கொண்டிருந்தார் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஒரு வேளை எங்களுக்காக அவர் கண்ணீரோடு ஜெபித்திருக்க கூடும். நான் அன்றைக்கு ஆலயத்துக்கு சென்றது உண்மை தான். ஆனால் சத்தியத்தை பற்றி நான் சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இப்ப தான் புரிந்து கொண்டேன்.

 

நான் அன்றைக்கு யோசித்தேன்... இவருக்கு வேற வேலை இல்ல எதுக்கு காலைல மூணு மணிக்கு அழுது கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். அவர் ஒரு வேளை எனக்காக ஜெபித்திருக்க கூடும். ஒரு நாள் வந்தது. பாவமன்னிப்பின் நிச்சயத்தை நான் பெற்றேன். என் பாவங்களுக்காக கதறி அழுதேன். இயேசுவே என்னை மன்னியும் என்று கதறினேன். இயேசு என்னை மன்னித்தார். என் மனசாட்சியில் உள்ள குற்ற உணர்வு நீங்கியது. விலை மதிக்க முடியாத இரட்சிப்பை பெற்ற பிறகு தான் நான் யோசித்தேன்... அன்றைக்கு அந்த மனிதர் அதிகாலையில் எனக்காக ஜெபித்திருக்க வேண்டும்.அதனால் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னை மன்னித்து அவர் பிள்ளையாக மாற்றினார்.

 

இன்னைக்கு நம்மில் எத்தனை பேர் நம்முடைய உடன்பிறந்தவர்கள் நம்முடைய குடும்பத்தார்கள் மேலும் நம்முடைய ஊரில் உள்ளவர்களுக்காக   பாரத்தோடு ஜெபிக்கிறோம்??  இன்றைக்கு யோசிச்சு பாருங்கள் நாம் மாத்திரம் பரலோகத்துக்கு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.ஆனால் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

 

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாக தன் வீட்டாரையும் விசாரிக்காமல் போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும் அவ்விசுவாசியிலும் கெட்டவனாக இருப்பான் என்று 1 தீமோத்தேயு 5-8

 

இன்றைக்கு இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றவர்கள் தங்களுடைய சொந்த ஜனங்களை தங்களுடைய ஊராரை தங்களுடைய வீட்டாரை கண்டுகொள்வதில்லை அவர்களை விசாரிப்பது இல்லை அவர்கள் நம்மை போல இரட்சிக்கப்பட வேண்டுமே அவர்கள் சகல சத்தியத்தின் படி நடத்தப்பட வேண்டுமே!, அவர்கள் நித்திய ஜீவனை பெற்று கொள்ள வேண்டுமே!   என்ற ஒரு பாரம் இல்லை. இன்றைக்கு இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றவர்கள் இரட்சிக்கபடாதவர்களை தீண்டதகாதவர்களாக நினைப்பது போல அவர்களை விட்டு விலகியே செல்கிறார்கள்.

 

பிரியமானவர்களே, நமக்கு ஒரு கடமை இருக்கிறது. நம் சொந்த ஜனங்கள் நம் வீட்டார்கள் நம் ஊர் ஜனங்கள் இரட்சிப்பை பெற்று கொள்ள வேண்டும் என்பதே!,  நீங்கள் ஒரு வேளை அவர்களை விட்டு வெகு தூரத்தில் இருக்கலாம் ஆனால் அவர்களுக்காக கண்ணீரோடு பாரத்தோடு ஜெபிக்க ஆரம்பியுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற வசனத்தின்படி நீங்கள் விசுவாசத்தோடு பாரத்தோடு உங்கள் ஊருக்காக ஜெபிக்கும் போது உங்க ஊர் சந்திக்கப்படும்.உங்கள் ஊர் ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள்.. தேவன் அவர்களை சந்திப்பார்.இந்த காரியத்திற்காக பாரத்தோடு இன்றைக்கே ஜெபிக்க ஆரம்பியுங்கள்.இது உங்கள் மேல் விழுந்த ஒரு கடமையாக இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். எஸ்தர் தன் ஜனங்களுக்காக உபவாசித்து ஜெபித்ததை போல நேகேமியா எருசலேமின் அலங்கம் கட்டபடுவதற்காக ஜெபித்தது போல நீங்கள் ஜெபிக்க ஆரம்பியுங்கள்.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசு பிடித்த வாலிபனிடம் இருந்து அந்த பிசாசை விரட்டினார்.அந்த வாலிபன் தான் அவரோடு வரும் படி வேண்டிக் கொண்டான் ஆனால் இயேசு கிறிஸ்து அவனுக்கு உத்தரவு கொடுக்காமல் நீ உன் இனத்தாரிடத்தில்  உன் வீட்டிற்கு போய் கர்த்தர் உனக்கு இறங்கி உனக்கு செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி என்று சொன்னார்.(மாற்கு 5-19) .

இந்த வசனத்தை கவனித்துபாருங்கள். கர்த்தர் அவனை அவனுடைய இனத்தாரிடம் வீட்டாரிடம் போய் ஆண்டவர் செய்த நன்மைகளை அற்புதங்களை அவர்களுக்கு சொல்லும்படியாக கட்டளையிட்டார்.

எனவே நம் குடும்பத்தார் சொந்தங்கள் மேலும் நம்முடைய ஊர் இரட்சிக்கப்படும் படி நாம் உத்தரவாதம் எடுத்து ஜெபிக்க ஆரம்பிப்போம்.

கர்த்தர் நமக்கு செய்த இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை  அவர்களுக்கு சொல்லி அவர்களை இரட்சிப்பின் பாதையில் நடத்துவோம்.

ஆமென்.

 

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. 1 கொரிந்தியர் 9-16.   ஆமென்.

bottom of page