குற்றம் சாட்டுகிறவன்!
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். ரோமர் 14:18,19
இன்றைக்கு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்கள் தேவனுக்குப் பிரியமான வைகளை பேசவும் தேவனுக்கு பிரியமானவைகளை செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களின் பேச்சும் கிரியைகளும் தேவனுக்கு பிரியமானதா என்பதை பகுத்தறியுங்கள். நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் எண்ணங்களும் தேவனுடைய சமூகத்தில் பிரீதியாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது, மனிதர்களுக்கு முன்பாக யோக்கியமானதை பேசி காலத்தை பிரயோஜனபடுத்தி கொள்ளுங்கள் என்று வேதம் சொல்கிறது.
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம். 2 கொரிந்தியர் 8
ஆனால் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களுடைய வாயின் வார்த்தைகள் துர்நாற்றமுள்ள வார்த்தைகளாய் பிறரை குற்றம் சாட்டி நியாயம் தீர்த்து தூசிக்கும் வார்த்தைகளாய் இருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் சாத்தானை குற்றம்சாட்டுகிறவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தின விசேஷம் 12-2
இன்றைக்கு பலர் இந்த குற்றம் சாட்டுகிற ஆவியினாலே ஆளுகை செய்யபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் மேய்ச்சலில் இல்லை. என்பது நிச்சயம்.
ஆசாரியனுடைய உதடுகள் அறிவை காக்க வேண்டும் வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே. அவன் சேனைகளுடைய கர்த்தருடைய தூதன் மல்கியா 2-7
சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது. அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை. அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அனேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். மல்கியா 2-6
இன்றைக்கு பிறரை பற்றி குறை சொல்லி குற்றம் சாட்டி இணையதளங்களில் கேவலப்படுத்தும் வேலையை மனிதர்கள் மூலமாக சாத்தான் துரிதமாக செய்து வருகிறான்.இன்றைக்கு ஊழியக்காரர்களும் இந்த வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் தங்கள் குறைகளை நிதானித்து அறியாமல் தங்களை சுயபரிசோதனை செய்யாமல் தங்கள் கண்களில் உள்ள உத்தரத்தை எடுத்து போடாமல் குற்றம் கண்டு பிடிக்கும் கண்களோடு பிற ஊழியக்காரர்களை இணையதளங்களில் துணிகரமாக குற்றம் சாட்டி கேவலப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள்.கர்த்தருக்கு பயப்படுகிற பயம் அவர்களிடம் இல்லை, பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான். நீதி 16-21 என்று வேதம் சொல்கிறது.
பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்.1 யோவான் 3-8
மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்: புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். நீதிமொழிகள் 11:12,13
இன்றைக்கு அநேகர் இணையதளங்களில் ஏதோ தாங்கள் தான் உண்மை உத்தமமான ஊழியக்காரர்கள் என்ற பெருமையான மற்றும் தவறான என்ற சுய நீதியினாலும் பெருமையினாலும் பிறரை அற்பமாய் எண்ணி தூஷித்து தங்கள் நாவினால் பாவம் செய்கிறார்கள்.
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது, அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. சங்கீதம் 59-12
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். நீதிமொழிகள் 6-2
உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். சங்கீதம் 34-13
இவர்கள் தேவ வசனத்தை எடுத்து கொண்டு நியாதிபதி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு பிறரை நியாயம் தீர்க்கும் பயங்கரமான காரியத்தை துணிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். யாக்கோபு 4 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல சகோதரனுக்கு விரோதமாக பேசி சகோதரனை குற்றப்படுத்திய இவர்கள் நியாயப்பிரமாணத்தின் படி செய்கிறவர்களாயிராமல் அதற்கு நியாயாதிபதியாயிருக்கிறார்கள். இது எவ்வளவு கொடியது என்பதை உணராமல் இருக்கிறார்கள்.
வசனத்தை பயன்படுத்தி பிறரை நியாயம் தீர்த்த அதாவது நாம் பேசிய வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று இயேசு எச்சரித்தாரே? இயேசு சொன்ன எந்த காரியத்தையும் உதாசினப்படுத்தாதீர்கள்.
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12:48
அவருடைய வார்த்தையை ஏற்று கொள்ளாத...கீழ்படியாத யாராயிருந்தாலும் அவருடைய வசனம் கடைசி நாள்களில் அவர்களை நியாயம் தீர்க்கும்.
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
பாவம் செய்கிறவர்கள் மனம் திரும்ப திறப்பில் நின்று ஜெபிக்கும் நீங்கள் தவறு செய்யும் ஊழியக்காரர்களுக்காக ஜெபிக்காமல் அவர்கள் பேரை சொல்லி கேவலப்படுத்தி குற்றம் சாட்ட தேவன் உன்னை அனுமதித்தாரா??
ஏன் தவறு செய்யும் ஊழியக்காரர்களை உடனே தண்டிக்காமல் அவர்களை அழைத்த உண்மையுள்ள எஜமான் நீடிய பொறுமையோடு இருக்கிறார் என்று யோசித்து பாருங்கள்.
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14:4
அவரால் அழைக்கப்பட்ட ஊழியக்காரனுக்கு உத்தரவாதி யார்??வானத்தையும் பூமியையும் படைத்த தேவன்.நீ அவருடைய அப்பிரயோஜனமான ஊழியக்காரன். கர்த்தருக்கு முன்பாக தாழ்மை படு. சுவிசேஷத்தை குறித்து மேன்மை பாராட்டாதே.அது உன் மேல் விழுந்த கடமை, அவருக்கு எல்லாமே தெரியும். நான் பரிசுத்தவான் நான் உண்மையுள்ளவன் என்று மனிதர்களுக்கு முன்பாக பிறரின் குற்றங்களை சொல்லி உன்னை உயர்த்தி கொள்ளாதே. தன்னை நோக்கி வந்த நாத்தான் வேலை பார்த்து இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று இயேசு சொன்னபடி உன்னை பார்த்து இயேசு சொல்வாரா??? மனிதர்களுக்கு முன்பாக யோக்கியமானதை செய்ய நாடு.ஒரு வேளை நீ ஒரு சாதாரண விசுவாசியாக இருக்கலாம். நீ உன் வாழ்க்கையில் எல்லா காரியங்களையும் உண்மையாகவும் நீதியாகவும் செய்து கறையற்றவனாகவும் குறையற்றவனாகவும் இருக்கிறாயா?நீயே குறையுள்ளவனாய் இருந்து கொண்டு பாவம் செய்து கொண்டு பிற ஊழியக்காரர்களை பற்றி குற்றம் சுமத்துகிறாயே?இணையதளங்களில் அவர்களை பற்றி பதிவிடுகிறாயே?வேதாகம சத்தியத் நன்கு ஆராய்ந்து பார்...நீயே உன்னை குற்றவாளியாக தீர்க்கிறாய் என்பதை குறித்து ஜாக்கிரதையாய் இரு. தேவன் உனக்கு முன்பாக சாபத்தையும் ஆசீர்வாதத்தையும் வைத்திருக்கிறார்.
சாபத்தை சுதந்தரித்து கொண்டு வீணாக போகாதே!!!
தன் வாயையும் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதிமொழிகள் 21-23
நீ உன் வாயின் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்று இயேசு சொன்னதை நிதானித்து பார்.உன் ஆத்துமாவை காத்து கொள்.
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. யோவான் 2:25
தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? ரோமர் 9:23
நீ அப்பிரயோஜனமான வேலைக்காரன் எனவே தேவன் உனக்கு கொடுத்த வேலையை மாத்திரம் உண்மையாக செய். தேவ சித்தத்தை செய்யாத ஊழியக்காரர்களை பார்த்து சந்திப்பின் நாளிலே அக்கிரம சிந்தை காரர்களே என்னை விட்டு விலகி போங்கள் என்று இயேசு சொன்னது புரியவில்லையா? அவரே நியாயம் தீர்க்கும் போது நீ எந்த அதிகாரத்தில் அவர்கள் மேல் குற்றம் சுமத்தி நியாயம் தீர்க்கிறாய்.உனக்கு நியாயாதிபதி என்கிற ஸ்தானத்தையாவது அதிகாரத்தையாவது தேவன் கொடுத்தாரா?ஒரு வேளை தேவன் உன்னிடம் எந்த அதிகாரத்தில் இவைகளை செய்கிறாய் என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்லுவாய்???
தேவன் உன்னை அழைத்து மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடாதே. துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் போராட்டமுண்டு எனவே கர்த்தரிலும் அவருடைய சத்துவத்திலும் பெலப்படு. பிசாசின் வல்லமைகளை எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடிக்க சர்வாயுதவர்கத்தை தரித்து கொள் என்று சொல்லியிருக்க நீ இணையதளத்தில் மனிதர்களை குறை சொல்லி அவர்களோடு வாக்குவாதம் பண்ணி நேரத்தை வீணடித்து கொண்டு ஊழியத்தில் தேவ சித்தத்தை செய்யாமல் அரசியல்வாதிகளை போல ஒருவருக்கொருவர் பட்சித்து தேவனுடைய அழைப்பை இழந்து போய் விட்டாய். தேவ ராஜ்ஜியத்துக்கு எதிராக பிசாசு செய்ய வேண்டிய வேலையை நீயே செய்து கொண்டிருக்கிறாய்.
அதாவது தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு எதிராக உன்னையே பிசாசு திருப்பி விட்டிருக்கிறான். ஒரு ராஜ்ஜியம் தனக்கு தானே பிரிந்திருந்தால் பாழாய் போகும் என்று இயேசு சொன்னதை நிதானித்து பார்.நீ ஊழியம் செய்து நரகத்துக்கு போவதை பார்க்கிலும் ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நலமாயிருக்கும். ஏனென்றால் ஊழியக்காரனுக்கே அதிக ஆக்கினை என்று வேதம் எச்சரிப்பது கூட உனக்கு புரியவில்லை.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:1,2
என்று இயேசு சொன்னதின் படி நீங்கள் நாளைக்கு எப்படி அளக்கப்படுவீர்கள் என்ற கருத்தை நீங்கள் இன்னும் அறியவில்லையே.
உங்கள் கனிகளினாலே நீங்கள் அறியப்படுவீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். ஊழியம் செய்கிற நீ ஆகாதவனாய் போகாதபடிக்கு உன் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்து. கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்து பார். கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு உடன்படாமல் அவைகளை கடிந்து கொள்.
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே... ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ரோமர் 14:10,12,13.
பிசாசின் ராஜ்ஜியத்துக்கு எதிராக யுத்தம் செய்ய அழைத்தால்,மனிதர்களை குற்றம் சுமத்தி நியாயம் தீர்த்து அவர்களோடு போராடி கொண்டிருக்கும் அப்பிரயோஜனமான ஊழியக்காரனே.நீ மதியற்றவனாக இராமல் தேவனுடைய அழைப்பை அறிந்து கொள்.
இணையத் தளங்களிலும் பொது இடங்களிலும் ஊழியக்காரர்களை குற்றம் சுமத்தி அவர்களை கேவலப்படுத்தி அதை கேட்ட அநேகரை இடறப் பண்ணியிருக்கிறோம். மேலும் இயேசுவின் நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்கியிருக்கிறோம்.
பிரியமானவர்களே, நாம் செய்த தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்போம்.வம்பு வார்த்தைகள் தூஷண வார்த்தைகளை பேசி பிறரை குற்றப்படுத்தும் காரியங்களிலிருந்து உடனடியாக மனம் திரும்புவோம். ஒரு வேளை நீங்கள் சொல்லலாம்...ஊழியக்காரர்களும் துணிகரமாக தவறு செய்கிறார்களே என்று..
ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே, அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
ஓசியா 4-9 என்று தேவன் சொல்கிறார்.எனவே அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. பிரசங்கி 5-2
ஆமென்