குற்றம் சுமத்துகிறவன்
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2-9.
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5-8. நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, அதாவது மனிதர்களோடு அல்ல.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. 2 கொரிந்தியர் 10:4
ஒளியில் இருப்பவன் தான் ஒளியின் ஆயுதங்களை தரித்து கொள்ள முடியும்.ஒளியில் இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் இருளிலே இதுவரைக்கும் இருக்கிறான். மனிதர்களோடு யுத்தம் பண்ணுகிறவர்கள் இருளிலே இருக்கிறார்கள்.
சகோதரனிடத்தில் அன்பு கூறாதவன் மரணத்திலே நிலைக்கொண்டிருக்கிறான்.1 யோவான் 3-14
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3:1
ஒன்று உலக ராஜ்ஜியம் இல்லையென்றால் தேவனுடைய ராஜ்ஜியம். தேவனுடைய ராஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்புக்கும் குடிப்புக்கும் அடுத்ததல்ல அது நீதியும்,சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும். இப்படிபட்டதான தேவனுடைய ராஜ்ஜியத்தின் ஆளுகையில் இருக்கிறவன் யாரையும் தரக்குறைவாக விமர்சித்து கேவலப்படுத்துகிற தரங்கெட்டசெயலை செய்ய மாட்டான். உங்களுக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியால் தேவ அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றப்படுகிறது என்று பவுல் எழுதுகிறார். கோபமும், எரிச்சலும்,பகைமையும் கசப்பும்,பரியாசமும்,தூஷணமும் குற்றம் சாட்டுவதும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்ட மனிதனின் கிரியைகள் அல்ல.
ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்
எபேசியர் 4:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:17
உன்னதத்தில் இருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உடையவனாக இருந்து பூமிக்கு அடுத்தவைகளை பேசுகிறான் பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் யோவான் 3-31
பரலோகத்திலிருந்து அருளப்பட்ட பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்ட ஊழியக்காரர்கள் பரலோக தன்மை அதாவது மேலானவர்களாக இருக்க வேண்டும். 34 ம் வசனத்திலே தேவனால் அனுப்பபட்டவர் தேவனுடைய வார்த்தைகளை பேசுகிறார்.தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
இன்றைக்கு தேவனால் அழைக்கப்பட்டு அவரால் அனுப்பபட்டவர்கள்,தேவனுடைய சாயலாய் பேசுகிறார்களா என்பதை பகுத்தறியுங்கள்.இவர்களிடம் காணப்படுவது தெய்வத்துவமா அல்லது மனிதத்துவமா?ஊழியம் செய்தாலும் இவர்கள் இன்னும் இருளின் ஆளுகைக்குள் இருக்கிறார்கள் என்பதை ஓயாமல் தூசித்து குற்றம் சாட்டுகிற இவர்களுடைய செயல்களை வைத்து பகுத்தறியலாம்.
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். மல்கியா 2-7
இன்றைக்கு இணையதளங்களில் பல ஊழியக்காரர்கள் தவறு செய்யும் ஊழியக்காரர்களை இழிவாக பேசி பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் மறைமுகமாக சாத்தானுடைய செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.சாத்தானுக்கு குற்றஞ்சாட்டுகிறவன் என்கிறபெயர் உண்டு.
நாம் இயேசுவின் அடிசுவடுகளையும் அவருடைய மாதிரியையும் காண்பிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். என்று பவுல் எழுதுகிறார். ரோமர் 8-14
பவுல்,பூமியில் உள்ளவைகளை அல்ல,மேலானவைகளை நாடுங்கள் என்றார். ஆனால் இன்றைக்கு பரிசுத்த ஆவியினாலே நடத்தபடுகிறோம் என்று சொல்கிற பல ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் பூமியின் தன்மை உடையவர்களாய் மாம்சத்துக்குறியவர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் மனசும் மாம்சமும் விரும்பினவைகளை செய்கிறார்கள். மாம்சத்துக்குறியவர்கள் மாம்சத்துக்குறிய ரீதியில் தானே பேசுவார்கள்.
இன்றைக்கு கிறிஸ்தவ ஊழியக்காரர்களுக்கு எதிராக தரம் தாழ்த்தி பேசுகிற மற்றும் இணையதளத்தில் பதிவிடுகிற இவர்கள் யாரால் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்?நிச்சயம் பரிசுத்த ஆவியால் அல்ல.
தேவனுடைய ராஜியத்துக்கு அடுத்த காரியங்களை மிகவும். கவனமாக கையாளுங்கள். தேவனுடைய கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், அவரது ராஜியத்துக்கடுத்த ஊழியங்கள் பற்றிய காரியங்களை அவர் பார்த்து கொள்வார்.
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
1 கொரிந்தியர் 3-3
மேற் சொல்லப்பட்ட இந்த வசனத்தை வைத்தே நாம் ஆவிக்குறியவர்களா என்பதை விளங்கி கொள்ளலாம்.
பரலோகத்திலிருந்து ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அநேகர் பூமியின் தன்மை உடையவர்களாக பூமிக்குறியவைகளை தேடுகிறார்கள். சில ஊழியக்காரர்கள் உண்மையும் உத்தமுமாக தேவனுடைய ராஜியத்திற்காக வேலை செய்தவர்கள், பூமிக்குறிய காரியங்களுக்காக தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள பிசாசின் பண ஆசையினால் வஞ்சிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது உண்மை தான்.
அன்று இயேசுவோடு நடந்த யூதாசுக்கும் அது தான் நடந்தது.இயேசுவை 30 வெள்ளி காசுக்கு யூதாஸ் சமமாக்கினான்.இன்றைக்கும் பல ஊழியக்காரர்கள் பணத்துக்காக தேவனுடைய ராஜ்ஜியத்தை விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதாவது தேவன் மேல் உள்ள விசுவாசத்திலிருந்து விலகி போய் பண ஆசையினால் தங்களை உருவ குத்தி கொள்கிறார்கள்.
அன்றைக்கு யூதாஸ் சாத்தானுக்கு இடம் கொடுத்தது உண்மை தான் ஆனால் யூதாசை இயேசு கடிந்து கொள்ளவில்லை. சினேகிதனே என்று தானே அழைத்தார்! ஆனால் இறுதியில் பண ஆசையினால் தன்னை உருவ குத்தி கொண்டான்.
அடுத்ததாக, தன்னை மறுதலித்த பேதுருவை தேடி வந்த இயேசு அவனை மறுபடியும் நிலைநிறுத்தினார், அவர் அவனை புறம்பே தள்ளவில்லை. தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
இன்றைக்கு தேவனை விட்டு விலகி போய் வீழ்ச்சியடைந்த ஊழியக்காரர்களை மனம் திரும்ப சொல்கிறார் அவர்களுக்கு தருணம் கொடுக்கிறார். ஆனால் இதை அறியாத அநேகர் இப்படி பட்டவர்களை இணையத்தளத்தில் கேவலப்படுத்தி பரியாசம் பண்ணி பதிவிடுகிறார்கள். காலத்துக்கு முன்பாக எதையும் தீர்க்காதீர்கள் என்று வேதம் சொல்கிறது.
சகரியா 3 ம் அதிகாரத்தில் பிரதான ஆசாரியன் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நிற்கையில் சாத்தான் அவனை குற்றப்படுத்தி அவனுக்கு விரோதம் செய்ய அவனுக்கு வலது பக்கம் நிற்கையில் தேவன் அவனது அழுக்கு வஸ்திரங்களை நீக்கினார், மற்றொருவனுடைய(தேவனுடைய) வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14-4
சந்திப்பின் நாளிலே தவறு செய்த ஊழியக்காரர்களை பார்த்து அக்கிரம சிந்தை காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று இயேசு சொன்னதை கவனியுங்கள். தான் அழைத்த ஊழியக்காரர்களுக்கு தங்களை அழைத்த எஜமானனே உத்தரவாதி.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? ரோமர் 2:2,3
ஊழியக்காரனுடைய கிரியைகளின் படி அவனுக்கு பதிலளிப்பேன் என்று தேவன் சொல்லியிருக்க தவறு செய்த ஊழியக்காரர்களை குற்றப்படுத்தி நியாயம் தீர்த்து பரியாசம் பண்ணி இணையதளத்தில் பதிவிடுவது தேவனுக்குறிய செயலா?
நீதிமொழிகள் 14-21 ல் பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறதே! இன்றைக்கு ஒளிப்பீடத்திலே ஊழியக்காரர்களுக்கும் தேவனுடைய ராஜியத்துக்கும் எதிரான அநேக Video க்கள் தயாரிக்கப்படுகிறது இதை செய்கிறவர்கள் யார்? என்ன நோக்கத்துக்காக செய்கிறார்கள்? இதை இணையத்தளத்தில் வெளியிட்டு தேவனுடைய ராஜியத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்கி தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு வரும் பலரை இடறலடைய செய்கிற நீங்கள் யார்?நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ தேவனுடைய ராஜியத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்கி அநேகரை பரலோகத்துக்கு பிரவேசிக்க முடியாதபடிக்கு தடை பண்ணுகிறீர்கள்.
ஒரு இந்து சகோதரர் இப்படியாக சொன்னார். எனக்கு இயேசுவை ரொம்ப பிடிக்கும்.ஆனால் இயேசுவை ஏற்று கொள்ள நினைத்த போது கிறிஸ்தவத்தை பற்றி கிறிஸ்தவர்களே வெளியிட்ட பதிவுகளை பார்த்து நான் என் நிலையை மாற்றி கொண்டேன். அதாவது ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி சண்டை போட்டு கொண்டிருக்கிற இவர்களது செயல் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது என்றார்.
ஒரு வேளை நீங்கள் கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தில்பதிவிடலாம்.
ஆனால் இது தேவனுடைய மாதிரியா?தேவன் உங்களை எப்படி பார்ப்பார்?நான் உனக்கு இரங்கினது போல அவனுக்கு இரங்க வேண்டாமா? என்று கேட்கும் போது என்ன சொல்ல போகிறோம்.
எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். நீதிமொழிகள் 30-10 அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். எரேமியா 33-8
அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். லூக்கா 17-4
தேவனுடைய நீதியையும் இரக்கத்தையும் விளங்கி கொண்டீர்களா? பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மத்தேயு 12-7
இன்றைக்கு இஸ்லாமியர்கள் இணையதளத்தை தங்களுடைய மதத்தைப் பரப்புவதற்காக அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்குள் பல பிரிவுகள் மற்றும் பல எதிர்மறையானகாரியங்கள் இருந்தும் கூட அவர்கள் ஒரு பொழுதும் தங்களை தாங்களே தூற்றி கொள்வதில்லை.ஆனால் கிறிஸ்தவர்கள் பலர் கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் ஊழியங்கள் குறித்து அவர்களுடைய எதிர்மறையான காரியங்களை குறித்து இணையத்தளத்தில் பரப்பி தங்களுக்கு தாங்களே அபகீர்த்தியை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த காரியம் குறித்து கர்த்தர் எவ்வளவு மன வேதனைப் படுவார்.
ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் அறிவிக்கப்படும் காலத்தில் ஒருவருக்கொருவர் கடித்து பட்சித்து கொள்கிறோம்.
கடைசி காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். கள்ளப் போதகர்கள் உங்களுக்குள்ளேஇருப்பார்கள் என்பது இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்கள் தான்.இது நிச்சயம் நடக்கும். இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.ஆனால் சபைகளில் இதைகுறித்து போதிக்க வேண்டும். ஏனென்றால், ஜனங்கள் எல்லாவற்றையும் பகுத்தறிய கற்று கொள்ள வேண்டும்.எல்லாவற்றையும் தேவனுடைய அனுமதியோடு ஒழுங்கும் கிரமமுமாக போதிக்க வேண்டும்.
சந்திப்பின் நாளிலே புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளை கண்டு பிதாவாகிய தேவனை மகிமைப் படுத்துவார்கள் என்று இயேசு சொன்னார். இன்றைக்கு நம்முடைய கிரியைகள் நம்முடைய நடவடிக்கைகளைப் பார்த்து அனேகர் இரட்சிக்கப்பட்டு சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும் விதமாக இருக்கிறததா?
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். கொலோசெயர் 3-17.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10-31.
இன்றைக்கு நாம் இணையத்தளத்தில் எதை பதிவிட்டோம்? நீங்கள் பதிவிட்டது யாரால் உருவாக்கப்பட்டது? இதன் மூலம் தேவன் மகிமை படுவாரா?தேவனுடைய மகிமைக்காக இதை செய்தோமா?இதை பார்க்கும் புற மதத்தினர் என்ன நினைப்பார்கள்..என்பதை யோசித்து பாருங்கள்.
ஒரு முறை ஒரு ஊழியக்காரரை ஒரு பெண்ணோடு இணைத்து கேவலப்படுத்தி செய்தியை பரப்பின ஒருவருடைய வீட்டில் தேவ கோபாக்கினை வெளிப்பட்டது, அவருடைய வேலி எடுத்து போடப்பட்டது, அவருடைய மகன் மேல் ஒரு பயங்கர போராட்டம். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்து போனார்கள். இன்று வரை அவர்களுக்கு நிம்மதியில்லை, எவ்வளவு ஜெபித்தும் அந்த போராட்டம் அவனை விட்டு நீங்கவில்லை.
ஒரு முறை ஒரு ஊழியக்காரர் ஒரு மருத்துவமனையில் ஒருவருக்காக ஜெபிக்க போன போது,பக்கத்து அறையில் ஒருவர் மிகவும் வேதனையில் புலம்பி கொண்டிருந்தார்.இவர் ஜெபிக்க போன போது ஆவியானவர் இவரிடம்,இவனுக்காக ஜெபிக்காதே,
இவன் என் ஊழியக்காரனை அடித்து கேவலப்படுத்தியதால் இவன் மேல் என் நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது என்றாராம். ஒரு வேளை நீங்கள் குற்றம் சுமத்தி தூசிக்கிற அந்த ஊழியக்காரன் செய்த தவறுக்கு மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பி தேவனிடம் மன்னிப்பை பெற்றிருக்கலாம். அதனால் தான் காலத்துக்கு முன்னே எதை குறித்தும் தீர்ப்பு சொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இன்றைக்கு ஒருவரை குற்றப்படுத்தி நியாயம் தீர்க்கும் நீங்கள் நாளை அதே தவறை செய்யக்கூடும்.
ஒரு ஊழியக்காரன் லட்சக்கணக்கில் காணிக்கை பணத்தை தவறாக பயன் படுத்தியிருக்கலாம், நீங்கள் அவரை குற்றம் சுமத்தி தூசித்திருக்கலாம்.ஆனால் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ 20 ரூபாயை அபகரித்திருக்கலாம், அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் பண விஷயத்தில் உண்மையில்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது அவரை குற்றம் சாட்டுகிற நீங்கள் அதே தவறை செய்ததால் நியாயத்தீர்பை உங்கள் மேல் குவித்து கொள்கிறீர்கள். அதாவது மற்றவர்களுக்கு எப்படி அளந்தீர்களோ அப்படியே உங்களுக்கும் அளக்கப்படும். தன்னிடம் குறைகளை வைத்து கொண்டு பிறருடைய குறையை சுட்டி காட்டுகிறவனை மாயக்காரனே என்று இயேசு சொன்னார். ஒருவர் இணையத்தளத்தில் ஊழியக்காரர்களையும் ஊழியங்களையும் குறித்து இழிவாக விமர்சித்து வந்தார், அவரை பற்றி விசாரித்த போது,அவர் அநேகரிடம் பணத்தை வாங்கி திரும்ப கொடுக்கவில்லை, பண விஷயத்தில் உண்மையில்லாதவர். துன்மார்க்கன் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் போகிறான் என்று வேதம் சொல்கிறது. இவர் ஊழியமும் செய்கிறார் என்பது தான் வருத்தத்துக்குறியது.
இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தின விசேஷம் 12-10
சாத்தானுக்கு குற்றஞ்சாட்டுகிறவன் என்கிற பெயர் உண்டு. இதே ஆவியால் நிரப்பபட்டவர்கள் அநேகர் இணையத்தளங்களில் எழும்பியிருக்கிறார்கள். இவர்கள் You tube போன்றவற்றில் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்துக்கு எதிராக பதிவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள், கிறிஸ்தவத்துக்கு எதிரான காரியங்களை பார்ப்பவர்கள் அதிகம், இதன் மூலம் இவர்களுக்கு ஏராளமான பணம் வருகிறது.
பிரியமானவார்களே, உடனடியாக இப்படிபட்ட காரியங்களை பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.இவர்களை விட்டு விலகுங்கள்.அதே மாதிரி பணத்துக்கு அடிமையாகி தேவ சித்தத்தை செய்யாமல் தேவனுடைய ராஜியத்தை கட்டாமல் தங்களுடைய ராஜியத்தையும் வாழ்வாதாரங்களையும் கட்டி கொண்டிருக்கிறவர்களையும் விட்டு விலகுங்கள். ஒரு ஊழியக்காரன் என்ன நோக்கத்துக்காக ஒரு காரியத்தை செய்கிறான் என்பதை பகுத்தறியுங்கள்.கனிகளினால் ஒவ்வொரு ஊழியக்காரர்களையும் நிதானித்து அறியுங்கள். ஆமென்.