top of page

ஊழியம் என்பது தெருவில் இறங்கி தரக்குறைவாக பேசுவது அல்ல!!!…

 

 

தேவன் எதற்காக ஒருவனை தன் ராஜ்ஜியத்தின் வேலைக்காக அனுப்புகிறார் தெரியுமா?

 

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:18.

 

 

இது தான் ஊழியம்,  இது தான் தேவனுடைய ஊழிய அழைப்பு, மேல் சொல்லப்பட்ட அவரது கட்டளையை நிறைவேற்றாமல் சும்மா அரசியல்வாதிகளை சந்தித்து Photo க்கு pose கொடுப்பது ஊழியம் அல்ல. சும்மா ஆள்களை சேர்த்து கொண்டு சிறுபான்மையினருக்காக போராடுகிறவர்களாக தங்களை தாங்களே நியமித்து கொண்டு மறைமுகமான அரசியல் கட்சி நடத்தி தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்குவது  தேவனுடைய உன்னத பணி இல்லை.மேலும் தெருவில் இறங்கி அரசியல்வாதிகளையும் ஆளுகிறவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பது தேவனுடைய பணியல்ல.

 

 

கடந்த நாள்களில் ஒரு பாதிரியார் போராட்ட மேடையில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் புழுபுழுத்து சாவார்கள் என்று சாபமிட்டார். அவர் பேசிய எதிரிடையான அவதூரான பேச்சுக்கள் அநேகருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது.புற மதத்தினர் கூட கிறிஸ்தவ ஊழியக்காரர்களிடம் கிறிஸ்துவின் சுபாவத்தை எதிர்பார்க்கின்றனர். அவரது பேச்சால் அவர் ஜெயிலுக்கு போக நேர்ந்தது. இதில் சில ஊழியக்காரர்கள் RSS காரர்கள் கூட நம்மை பற்றி தரந்தாழ்ந்து பேசுகிறார்களே ... இவர் பேசுவதில் என்ன தவறு என்று சொன்னார்கள்.!?  நீ தேவனுடைய ஊழியக்காரன், உனக்கும் அவர்களுக்கும் பேச்சிலும் நடக்கையிலும் வித்தியாசம் உண்டு.ஒருவேளை அவர்கள் நம்மை தரம் தாழ்ந்து விமர்சித்தால் நாம் அன்போடும் பண்போடும் அமைதலாக பதில் கொடுக்க வேண்டும்.

 

துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.  ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?   யாக்கோபு 3:10,11

 

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள்  அதிகாரத்துக்கு எதிராக அநாகரீகமாக மிரட்டல் விட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு ஊழியக்காரர் சமீபத்தில் நாம் மதத்தையும் சாதியையும் தூக்கி எறிந்து விட்டு இனத்துக்காக போராட வேண்டும் என்றார்.

ஜனங்களிடம் கிறிஸ்துவின் அன்பை விதைக்க அழைக்கப்பட்டவர்கள் ஜனங்களிடம் விரோதத்தையும் வைராக்கியதையும் விதைத்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசு சொன்ன சத்தியங்களை மறந்து போய் நமக்கு எதிராய் வருகிறவர்களை சபிக்கவும் பகைக்கவும் வீம்பு பேசவும் மிரட்டவும் தேவன் நம்மை அழைக்கவில்லை.

மனிதர்களுக்கு எதிராக பகைமை உணர்வை உருவாக்கி  ஜனங்களை போராட தூண்டி விடும்படியாக பேசுவதற்கு தேவன் உங்களை தன் பிரதிநிதியாக வைக்கவில்லை.

 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மத்தேயு 5:44

 

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

ரோமர் 12:14

 

 

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ரோமர் 12:19

 

 

இயேசு கிறிஸ்து யார்??அவர் பரம அதிகாரங்களை உடையவர், ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். அவர் ராஜாக்களுக்கல்லாம் அதிபதி.நீங்கள் யார்? உலகத்தில் அவருடைய பிரதிநிதி? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு தேவன் கொடுத்த Assignment என்ன?தேவ மனிதர்கள் இப்படியா தரம் தாழ்ந்த நிலையில் தெருவில் நின்று கொண்டு மனிதர்களையும் ஆளுகிறவர்களையும் விமர்சிப்பது. மேலும், நியாயாதிபதி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்களை தூசித்து அவர்கள் மேல் மரணம் என்கிற நியாயத்தீர்ப்பை கூறுவது ஏற்புடையது அல்ல.

 

தேவனுடைய பிரதிநிதிகளிடம் தேவனுடைய சாயல் இருக்க வேண்டாமா ஒரு தேவ ஊழியக்காரரிடம் தேவன் காட்டிய மாதிரி எங்கே?

 

தேவனுடைய செய்கை ஒரு ஊழியக்காரனின் செயல்களில் வெளிப்பட வேண்டாமா?அவர் உண்மை உள்ளவர் என்றால் அவரால் அழைக்கப்பட்ட உங்களிடம் உண்மை இருக்க வேண்டாமா?

 

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2-10

 

ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். மல்கியா 2:7

 

 

உங்களை பிசாசின் ராஜியங்களுக்கு எதிராக போராட அழைத்திருக்க மனிதர்களுக்கு விரோதமாக போரிட்டு கொண்டிருக்கிறீர்கள்?  தேவ மனிதர்கள் என்றால் தேவனுடைய அதிகாரம் எங்கே?சர்வாயுதவர்க்கம் என்கிற தேவனுடைய போர் சேவகனுக்குறிய தகுதி  எங்கே?அவருடைய அன்பு என்கிற மார்க்கவசம் எங்கே?கழுகு போன்ற பெலன் எங்கே??

 

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12

 

 

இன்றைக்கு மனிதர்களின் பின்புலத்தில் இருக்கும் சாத்தானின் அதிகாரத்துக்கு எதிராக ஜெபிக்காமல் தெருவுக்கு வந்து மனிதர்களோடு யுத்தம் பண்ண வைப்பது அவனது தந்திரம் தானே. மேலும், அநேக ஊழியக்காரர்களை உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க வைத்து விட்டது அவன் தானே.

 

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:13

 

தேவனுடைய ஊழியம் என்று சொல்லி அவர் கட்டளையிடாததை செய்து விட்டு உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்.அநேகர் சாத்தானின் தந்திரத்துக்கும் உலகத்துக்கும் அடிமையாகி வீழ்ச்சியடைந்து விட்டார்கள்.

 

நமக்கு எதற்கு அரசாங்கத்தக்கு எதிராக  போராட்டம்.நமக்கு எதற்கு ஆளுகிறவர்களுக்கு எதிரான ஆணவ பேச்சு.ஒரு வேளை நாம் போராட்டம் நடத்தினால் அமைதியாக நம் எதிர்ப்பை காண்பித்திருக்கலாமே. நம்முடைய அடிப்படை சத்தியத்தில் முக்கியமானது அன்பும் மன்னித்தலும். அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வேதம் சொல்கிறது.இன்றைக்கு  நாம் பகைமையை அல்லவா காண்பித்து கொண்டிருக்கிறோம்.

 

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2

 

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2-23

 

ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

தீத்து 3-2

 

ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.  ரோமர் 13-2

 

மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

ரோமர் 13-3

 

எலியாவின் கண்களை தேவன் திறந்த போது பரம சேனையின் திரள்களை பார்த்தான்.உலகத்தில் இருப்பவனை காட்டிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் என்று சொல்லி விட்டு தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக தேவன் போராட அனுமதித்தாரா?அவர் பரம அதிகாரங்களை உடையவர், ராஜாதி ராஜா,கர்த்தாதி கர்த்தா.  நானே பதில் செய்வேன் என்கிறார்? தேசங்களில் நடக்கும் அழிவுகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். தேசத்தில் பாழ்க்கடிப்புகளை உண்டாக்குகிறவர்.

அவருடைய பயங்கரமான நாள் வருகிறது, தேசத்தை ஆளுகிற எந்த அதிகாரத்தில் இருப்பவர்களானாலும் தேவனுடைய அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்க முடியாது.

 

தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது.  தேவ சமூகத்தில் தரித்திருக்காமல் இணையதளங்களில் வீணான பேச்சுகளை பேசுவதற்கு தேவன் உங்களை அழைக்கவில்லை. கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படுங்கள்.

தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் நம்பாமல் நம்முடைய பெலத்தை காண்பித்தால் நாம் தோற்று போவோம். இயேசு கிறிஸ்து எதற்காக தன் சீஷர்களை உருவாக்கினார் என்பதிலிருந்து அவரது ஊழியத்தின் நோக்கத்தை தயவு செய்து விளங்கி கொள்ளுங்கள்.

 

அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். மாற்கு 3:13,15

 

இதில் தம்மோடு கூட இருக்கவும் என்ற காரியத்துக்கு யாரும் கீழ்படிவதில்லை.அதாவது இன்றைக்கு தேவனோடு ஊழியம் செய்பவர்கள் மிகவும் குறைவு.

 

பிரியமானவர்களே, இந்த கடைசி நாள்களில் சபைகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும்எதிராக உபத்திரவங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதுவும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்களில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். மத்தேயு 24:9

 

அப்படியானால் கடைசி நாள்களில் நடக்கும் இப்படிபட்ட உபத்திரவங்களுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் வேதம் நமக்கு தெளிவாக காட்டுகிறது.

 

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.  ரோமர் 12:11,12

 

இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். 2 கொரிந்தியர் 6:3

 

ஆமென், ஆமென்.

bottom of page