பிறரை குற்றவாளியாய் தீர்க்கிறவனே! 

போக்கு சொல்ல இடமில்லை.!?

 

ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.  ரோமர் 2:1

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?  ரோமர் 2:3

 

மேலே சொல்லப்பட்ட வசனங்களில்  சொல்லப்பட்டிருப்பதை கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் குற்றம் சாட்டுகிற அதே காரியத்தை நீங்களே செய்கிறீர்கள்.  அல்லது அதே மாதிரி வேறு ஒரு குற்றத்தை செய்கிறாய் அல்லது செய்வாய்.

 

இன்றைக்கு  இணையதளங்களில் தேவன் அழைத்த ஊழியக்காரர்களின் தவறுகளை பதிவிட்டு அவர்களை எல்லாருக்கும் முன்பாக குற்றவாளிகளாக தீர்க்கிறவர்களே ஜாக்கிரதை!!  ஏனென்றால்? அவர்களை குற்றவாளிகளாக தீர்த்தும் தெரிந்தோ தெரியாமலோ அதே மாதிரியான தவறை அவர்களே செய்வதினால் அல்லது செய்து கொண்டிருப்பதினால் தங்கள் மேலே அந்த தீர்ப்பு  வருகிறது.

 

நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.  நீதிமொழிகள் 6-2

 

மேலே சொன்ன வசனத்தின் படி தங்கள் வாயினாலே பிறரை குற்றவாளிகளாக தீர்த்து தூசித்து அதே பாவத்தை அவர்களே செய்து சிக்கி கொள்கிறார்கள்.

 

இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் ..... தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். என்று பவுல் எச்சரிக்கிறார்.இன்றைக்கு கர்த்தருடைய கிருபையால் நீங்கள் நிற்கலாம். ஆனால் நாளைக்கு பாவத்தில் விழுந்து போக மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? ஒரு வேளை அன்றைக்கு எல்லாருக்கும் முன்பாக பிறனை அவதூறாக பேசாமல் குற்றப்படுத்தாமல் நியாயம் தீர்க்காமல் அவனுக்காக பரிந்து பேசி ஜெபம் பண்ணியிருந்தால் இன்றைக்கு நீயும் விடுவிக்கப்படுவாய்.  பிறருக்கு எப்படி அளக்கிறாயோ அதன்படி நீயும் அளக்கப்படுவாய்.  பிறருடைய குற்றங்களை சொல்லி அவர்களை தூசித்தவர்களின் குடும்பத்திலே அதே குற்றங்கள் செய்யப்படும் போது அவர்களால் அதை தாங்க முடியாது.

 

ஒரு வாலிபன், ஒரு ஊழியக்காரரை ஒரு பெண்ணோடு இணைத்து தவறாக பேசினான். அந்த ஊழியக்காரருக்கு அது தெரிந்த போது அவர் தேவனுடைய சமூகத்தில் கதறி அழுதார். ஏனென்றால் அதை அவர் செய்யவில்லை. சில வருடங்களுக்கு,  பிறகு அதே வாலிபன் தன் மனைவியை விட்டு விட்டு திருமணமான வேறொரு பெண்ணோடு  ஓடி போய் விட்டான்.  ஊழியக்காரனை குற்றம் சாட்டின அந்த வாலிபன் அதே பாவத்தை செய்யும்படியாக ஆனது.  அவன் தன் குடும்பத்தை இழந்து போனான்.

 

ஒரு முறை கல்லூரியில் படித்து கொண்டிருந்த ஒரு பெண் ஒரு வாலிபனோடு நெருங்கி பழகினதால் கர்ப்பமடைந்தாள். அவளது பெற்றோர் ரகசியமாக கர்ப்பத்தை கலைத்து விட்டார்கள். ஆனால் இதை எப்படியோ அறிந்த   அந்த பெண்ணின் சித்தி அதை ஊரெல்லாம் சொல்லி அவமானப்படுத்தி விட்டார்கள் அதனால் அந்த குடும்பத்தினருக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது.  பல வருடங்களுக்கு பிறகு அவமானபடுத்தியவரின் மகன் திருமணமான ஒரு பெண்ணோடு கொண்ட தகாக உறவினால் அவர்கள் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாகிவிட்டது.  ஆகையால், அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுத்தார்கள்.

நான் கருக்கலைப்பு செய்ததை நியாயப்படுத்தவில்லை. அந்த தவறை செய்த அதே வாலிபனே அவளை திருமணம் செய்து கொண்டான் என்பது வேறு விஷயம்.

 

இன்றைக்கு ஊழியக்காரர்களின் தவறை இணையதளங்களில் பதிவிட்டு அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் கேவலப்படுத்த ஒரு கூட்டம் இறங்கியிருக்கிறது. இவர்கள் வசனங்களை கையில் எடுத்து கொண்டு எல்லாருக்கும் முன்பாக அவர்களை நியாயம் தீர்க்கிறார்கள்.

  • நீங்கள் நூறு சதவீதம் தேவ சித்தப்படி தேவ திட்டப்படி தேவன் சொன்னப்படி ஊழியம் செய்கிறீர்களா?? 

  • தேவனுக்கு முன்பாக கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் நிற்கிறீர்களா??

 

முதலாவது உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

 

இன்றைய நாட்களில் இணையத்தளங்களில் சில ஊழியக்காரர்கள் மூலம் தேவ நாமம் தூசிக்கப்படுகிறது.

அது உண்மை தான்.

 

ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே, அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். ஓசியா 4-9 என்று தேவன் சொல்லியிருக்க நியாதிபதி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு தேவ வசனத்தை கொண்டு அவர்களை தூசித்து நியாயம் செய்ய  தேவன் உங்களை நிச்சயம் அனுமதிக்க மாட்டார். பவுல் அப்படி செய்தார் இயேசு அப்படி சொன்னார் என்று அவர்களுக்கு நிகராக உங்களை உயர்த்தி கொள்ளாதீர்கள்.

 

இன்றைக்கு ஊழியக்காரர்களின்  தவறுகளை தங்களை நீதிமான்கள் என்று நினைத்து கொண்டு இணையதளங்களில் பரப்பும் ஊழியக்காரர்களால் அநேகர் இடறலடைகிறார்கள். இஸ்லாமிய மதத்தினர் தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை,  Media வை தங்கள் மார்க்கத்தை பரப்ப அழகாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் நம்மை நாமே தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கு இணையதளத்தை பயன்படுத்துகிறோம்.

இதை தேவன் உற்று கவனித்து கொண்டிருக்கிறார்.

அன்றைக்கு கானான் தேசத்தை வேவு பார்த்தவர்கள்  அவ்விசுவாச வார்த்தைகளை பரப்பினார்கள். அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கவில்லை.

அதே மாதிரி தான் தேவன் அனுமதிக்காதபட்சத்தில் அவரால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் பிறரது குறைகளை பதிவிடுபவர்கள் அதாவது துர் செய்தியை பரப்புகிறவர்கள் நிச்சயமாக பரலோகத்துக்கு போவார்கள் என்று நினைக்கிறீர்களா? சந்திப்பின் நாளிலே தேவன் இவர்களை பார்த்து நான்  உங்கள் குறைவுகளையெல்லாம் மன்னித்தேனே. நீங்கள் ஏன் பிறரை தூசித்தீர்கள். நீங்கள் பிறருக்கு எப்படி அளந்தீர்களோ அதே மாதிரி உங்களுக்கும் அளக்கப்படும் என்பது எவ்வளவு உண்மை. தேவன் நம் பாவங்களை மன்னித்திருக்க பிறருடைய பாவங்களை குறைகளை இணையதளத்தில் பதிவிடும் உங்களை பார்த்து அக்கிரம சிந்தைகாரர்களே என்று தேவன் சொல்லமாட்டார் என்று என்ன நிச்சயம்.

 

மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14-4

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ரோமர் 8:33.

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

யாக்கோபு 4:11 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?   யாக்கோபு 4:12

ஆமென்