top of page

ஆசீர்வாதத்தின் வாசலை நாமே அடைக்கிறோம்!

 

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். யாக்கோபு 4-7

 

இன்றைக்கு கீழ்ப்படியாமையினாலே அநேக குடும்பங்கள் ஊழியக்காரர்கள் மற்றும் அநேக சபைகள் தங்கள் அதிகாரத்தை இழந்து போய் நின்று கொண்டிருக்கின்றன. பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியில்லாமல் தேவ பலனை இழந்து போய் நிற்கும் ஊழியக்காரர்கள் பலர் உண்டு. வைராக்கியமாக பிரசங்கிப்பார்கள், ஜெபிப்பார்கள், அருமையாக ஆராதிப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு வகையில் பிசாசின் கிரியைகளின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எதாவது ஒரு வழியில் பிசாசு அவர்களை அடிமையாக்கி அவனது ஆளுகையில் வைத்திருக்கிறான்.

 

இயேசு கிறிஸ்துவை பார்த்து பிசாசுகள் பயந்து கெஞ்சின. எங்களை விட்டுவிடும் எங்களைத் போக விடும். காலம் வருவதற்கு முன்பாக எங்களை வேதனைப்படுத்த வந்தீரோ என்றன. ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்கு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.பிசாசினால் அவரை குற்றப்படுத்த முடியவில்லை.சாத்தான் தன்னை சோதனைக்குட்படுத்தும் போது அவனை துரத்தினார்.அவர் தன் சீஷர்களை குறித்து வேண்டுதல் செய்யும் போது என்னை போல இவர்களும் உலகத்தார்களல்ல என்றார். இன்றைக்கு ஊழியம் செய்கிற பலர் உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு அடிமையாகவே இருக்கின்றனர்.

 

மாற்கு 16 -17 ல் விசுவாசிகள் கூட என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்னார். ஆனால் இன்றைக்கு விசுவாசிகள் மற்றும் ஊழியக்காரர்கள் பிசாசின் வல்லமைகளுக்கு எதிராக யுத்தம் செய்ய திராணியற்றவர்களாக இருக்கின்றனர், சர்வாயுதவர்க்கம் என்ற தகுதியை அவர்கள் இன்னும் பெற்று கொள்ளவில்லை.

 

வெளிப்படுத்தின விசேஷம் இரண்டாவது அதிகாரம் 11 வது வசனத்தில் மரணம் நேரிடுகிறதாக இருந்தாலும் அதற்குத் தன் ஜீவனையும் பாராமல் இயேசுவின் இரத்ததாலும் சாட்சியின் வசனத்தாலும் அவனை ஜெயித்தார்கள்.அதாவது இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு தேவனுக்குக் கீழ்ப்படிந்து சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலம் அவனை ஜெயித்தார்கள், அவர்கள் தங்கள் உயிர் மேல் ஆசை வைக்கவில்லை.

 

பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதி முதல் பாவம் செய்கிறான் பிசாசின் கிரியைகளை அளிக்கும்படி தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் (1 யோவான் 3-8) இன்றைக்கு ஊழியம் செய்கிறோம். கர்த்தருக்காக நிறைய காரியங்களை வைராக்கியமாக செய்கிறோம்.ஆனால் நம் நடக்கைகளில் ஏதோ ஒரு பகுதியில் பிசாசின் கிரியைகளை உடையவர்களாய் இருக்கிறோம்.

ஏனென்றால்?,  இயேசுவின் பிள்ளை என்கிற அதிகாரத்தையும் வசனத்துக்கு கீழ்ப்படிதலினால் வரும் ஆசீர்வாதத்தையும் மேலும் வார்த்தையில் நிலைத்திருக்கும் போது பிதாவிடம் கேட்டுக் கொள்வதை பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதியையும் கனி கொடுப்பதினால் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வதெதுவோ அதை உங்களுக்குச் கொடுப்பார் என்கிற ஆசீர்வாதத்தையும் பிசாசானவன்  தந்திரமாக பறித்துக் கொள்கிறான். தேவன் நமக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்திருக்கிறார். ஆனால், நாமோ ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் வழியில் நடப்பதில்லை.

 

ஒரு  மனுஷன்  ஜெபிப்பதை கூட பிசாசானவன் அனுமதிக்கிறான். ஓய்வில்லாமல் அதிக நேரம் ஓடி ஓடி ஊழியம் செய்கிறதை அவன் தடுப்பதேயில்லை. ஆனால் தேவ சமுகத்தில் காத்திருந்து தேவ பிரசன்னத்தை பெற்றுக்கொண்டு   தேவனுடைய வசனத்தை அறிந்து கீழ்ப்படிந்து கனி  கொடுப்பதை அவன் நிச்சயம் அனுமதிப்பதில்லை.

ஒரு மனுஷன் உங்களுக்கு விரோதமாய் எழும்பும் போது அவன் உங்களை தூசிக்கும் போது நாம் அவனை வீணான வார்த்தைகளினாலே திருப்பி தாக்குகிறோம். மேலும் நம் கோபம் தீரும் வரை புறம் கூறுகிறோம். இதனால் யாருக்கு லாபம்.நாம் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளின் நிமித்தம் நீதிமான் என்றும் குற்றவாளி என்று தீர்க்கப்படுவோம்.அது மாத்திரமல்ல கோபத்தில் பேசப்பட்ட வார்தைகளினாலே  நம்மை நாமே தீட்டுப்படுத்துகிறோம். கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே என்று வேதம் எச்சரிக்கிறது.நீதி செய்கிறவன் இன்னும் நீதி செய்யட்டும் என்ற இயேசுவின் கட்டளைக்கு கீழ்படியாமல் போகிறோம்.

 

நம்மை சபிக்கிறவர்களை சபித்து தீமை செய்தவர்களுக்கு தீமை செய்து இயேசுவின் கற்பனைகளை மீறுகிறோம். கோபத்தில் , பிறர் மீது சாபத்தை அளக்கும் நாம் பிறருக்கு அளக்கும் அளவின் படியே  அளக்கப்படுகிறோம்.

தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து நீதி செய்வதினால் தேவன் நமக்கும் நம் சந்ததிக்கும் வைத்திருக்கக்கூடிய ஆசீர்வாதங்களை நாம் நொடி பொழுதில் இழந்து போகிறோம். நமக்கு எதிராய் வைத்திருக்கக்கூடிய ஆசீர்வாத வாசல்களை  நாமே அவருடைய  கற்பனைகளை மீறி அடைத்து கொள்கிறோம்.கர்த்தர் சொல்கிறார்...உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் என் வசனத்தை கைக்கொண்டபடியால் திறந்த வாசலை உனக்கு முன்பாக  வைத்திருக்கிறேன் அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

 

இன்றைக்கு, தரிசனங்களை அடையவேண்டிய வாலிபர்கள் தீர்க்க தீர்க்கதரிசனங்களை பேசவேண்டிய குமாரர்கள் குமாரத்திகள் இன்றைக்கு உலக இச்சையென்னும் காரியங்களில் விழுந்து போகிறார்கள். தேவன் தங்களுக்கு வைத்திருக்கும்  தரிசனங்களையும் தேவ திட்டத்தையும் அவர்கள் மறந்து போகிறார்கள். வசனத்துக்கு கீழ்படிந்து தங்கள் பரிசுத்தை காத்து கொள்ள வேண்டிய வாலிபர்கள் பிசாசின் கண்ணியில் எளிதாக வீழ்ந்து விடுகிறார்கள்.

 

பிசாசானவன் இச்சைகளை விதைக்கிறான்.அதாவது இச்சைகளை உண்டாக்கக்கூடிய ஆவிகளை அனுப்புகிறான். வாலிபர்கள் தேவ பெலனில்லாததினால் உலகமும் அதன் ஆசை இச்சைகளை அன்றைக்கு ஏவாள் விருட்சத்தை பார்த்த மாதிரி பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது போல பார்த்து அதற்குள் வீழ்ந்து விடுகிறார்கள். தேவ சமூகத்தில் காத்திருக்கிற பிள்ளைகள் மாத்திரம்  வசனத்தால் தங்களை கறைப்படாதவாறு  காத்துக் கொள்கிறார்கள்.

 

ஒரு வாலிபப் பெண் தன் தாயை பார்த்து அறிவு கெட்டவளே என்று சொல்லுகிறாள். பெற்றோரை கனம் பண்ணுவாயாக என்ற கற்பனையை மீறின படியினாலே தனக்கு முன்பாக இருக்கக்கூடிய ஆசீர்வாதத்தின் வாசலை அடைத்துக் கொள்கிறாள். மனைவியை கனம் பண்ணுங்கள்... கசந்து கொள்ளாதிருங்கள் என்கிற வசனத்துக்கு மாறாக மனைவியை துன்புறுத்தி அடிமையாக நடத்துகின்றவன் குடும்பத்தின் ஆசீர்வாதத்தின் கதவை அடைத்து விடுகிறான். இப்படி அநேக காரியங்களில் தேவனுடைய கற்பனையை மீறி ஆசீர்வாதத்தின் வாசலை தாங்களே அடைத்து கொள்கிறார்கள்.

குடும்பத்தில் சண்டை போட்டு கொண்டு சாட்சியில்லாமல் வாழ்ந்து கொண்டு பிசாசின் ராஜ்ஜியங்களுக்கு எதிராக போராடி ஜெபிக்காதீர்கள்.தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,  அப்பொழுது அவன் ஓடிப் போவான்.

 

பவுல் சொல்லுகிறார் மனரம்மியமாக இருக்க நான் கற்றுக் கொண்டேன்.  இன்றைக்கு  அநேகருடைய இருதயத்தில் ஆறாத காயம் இருக்கிறது. அநேகர் பிறரை காயப்படுத்தி இருக்கிறார்கள். பிறரை மன்னிக்க முடியாத நிலையிலும் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பை பெற்று கொள்ளாத நிலையிலும்  அந்த காயம் ஆறாமல் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியாதபடி தடை செய்கிறது. வசனத்தை பார்க்கிறோம் படிக்கிறோம் ஆனால் அதன்படி செய்வதில்லை ஏனென்றால்  உணர்வடையவில்லை. கேட்டும் கேளாதவர்களாகவும்  கண்டும் காணாதவர்களாகவும் உணர்ந்தும்  உணராதவர்களாகவும் இருக்கிறோம். அநேகருடைய மனக்கண்கள் வசனத்தை கேளாதபடி அதன்படி நடக்காதபடி குருடாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

 

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு தொழில் செய்கிறவர்கள் பண ஆசையினால் பணத்திற்கு அடிமையாகி தேவ நீதியை மீறுகிறார்கள். உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் என்கிற வசனத்தை  கிரியைகளினால் மறுதலிக்கிறார்கள், பண விஷயத்தில் உண்மையில்லை.  அடுத்தவரது பணத்தை அபகரிக்கிறார்கள்! வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நீதியாக சரியாக கொடுப்பதில்லை!

 

அநேகர் கடன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதில்லை. தேவன் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப கொடுக்கும் படிக்கு தேவைகளை சந்திக்கும் போது அவர்கள் கடனை திரும்ப செலுத்தாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர்.

பிறருடைய பணம் நம் வீடுகளில் ஏதாவது ஒரு வழியில் இருக்கும் போது நிச்சயமாக தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியாது.கடன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருப்பது அடுத்தவர் பணத்தை அபகரிப்பதற்கும் ஏமாற்றுவதற்கும்  ஒப்பானதாகும்.எனவே பொருளாதார ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டுமென்றால் பண விஷயத்தில் நேர்மையுள்ளவர்களாக இருங்கள்.

 

துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்.  சங்கீதம் 37-21.

 

தங்களுக்கு உதவி செய்தவர்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிக்கும் போது தேவனிடமிருந்து எப்படி ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியும்.

 

அன்றைக்கு சாத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சகல ராஜ்ஜியங்களின் மகிமையை காண்பித்து என்னை பணிந்து கொண்டால் இவை எல்லாம் உமக்கு தருகிறேன் என்று சொன்னபோது அவர் பிசாசுக்கு எதிர்த்து நின்றார். ஆனால், இன்றைக்கு அநேகர் உலக ஆசைகளுக்கும் பணத்துக்கும் முன்பாக வீழ்ந்து விட்டார்கள். அநேகர் உலகத்தை நேசித்து  பணப்பிரியர்களாகவும் தற்பிரியர்களாக மாறி விட்டார்கள். இவர்கள் தங்களுக்காக பாவத்தை கண்டித்து உணர்த்தாக  செவிதினவுள்ள  ஊழியர்களை வைத்துக் கொள்கிறார்கள்.

 

முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள் அப்பொழுது எல்லாம் கூட கொடுக்கப்படும் என்று பிரசங்கிக்கிற ஊழியக்காரர்கள் கூட தங்களுடைய காணிக்கை பணத்தை தேவ சித்தத்திற்கு மாறாகத் தங்கள் சுயத்துக்காக செலவு செய்கிறார்கள். காணிக்கை பணத்தில் லஞ்சம் கொடுக்கிறார்கள்.பண ஆசையே அவர்களுக்கு தீங்காய் மாறிவிடுகிறது.

 

இன்றைக்கு கர்த்தருக்கு பயந்து அவருடைய வசனத்துக்கு கீழ்ப்படிந்து அதனால் வரக்கூடிய ஞானம் அநேகரிடமில்லை. கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் என்று சங்கீதம் 25 -12 ல் சொல்லப்பட்டிருக்கிறது இன்றைக்கு நாம் தேவனுடைய வழிகளை அறிந்து கொள்ள முடியாத ஒரு துர் பாக்கிய நிலைமையில் இருக்கிறோம்.இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் இருளின் வல்லமையின் அடிமைத்தனத்தில் இருக்கிறோம். ஏன் பிரச்சனை? ஏன் வியாதி? ஏன் இன்னும் போராட்டம்?  ஏன் நஷ்டம்?  விட வேண்டியதை விட முடியவில்லை! முழுமையான அர்ப்பணிப்பு இல்லை!  முழுமையான ஒப்புக்கொடுத்தல் இல்லை! முழுமையான மனம் திரும்புதல் இல்லை! நாம் முழுமையாக இருளின் அதிகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியின் ராஜியத்துக்குள் வரவில்லை!  சகல சத்தியத்திற்கும் நடத்தப்படும்படியாய் பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறார். எனவே தேவ சமுகத்தில் காத்திருந்து புதிய பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது.

பரிசுத்த ஆவியின் பெலத்தினால் தான் நாம் எதிர்மறையான சூழ்நிலையில் கூட வசனத்துக்கு கீழ்படிந்து சாட்சியாக வாழ முடியும். பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆளுகை செய்து சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தப்பட அனுமதியுங்கள்..

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில்  இருந்தபோது அநேகரை பாவத்திலிருந்து விடுதலை ஆக்கினார். வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று சொன்னார்.இன்றைக்கு நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாத ஒரு நிலைமையில் இருக்கலாம்.நீங்கள் பிறரால் காயப்பட்டு மன்னிக்க முடியாத நிலையில் உங்கள் இருதயம் கோபத்தினாலும் கசப்பினாலும் இருக்கலாம்.நீங்கள் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம், உலக ஆசை இச்சை களில் அடிமையாக இருக்கலாம்.பணத்தை தவறான வழியில் சம்பாதித்து கொண்டிருக்கலாம்.

நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் இயேசுவே எனக்கு உதவி செய்யும் என்று கூப்பிடுங்கள். நீங்கள் இருக்கும் நிலைமையை அவரிடம் சொல்லுங்கள்.வாசற்படியில் நின்று கதவை தட்டுகிற அவரை உங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்குமாறு அனுமதியுங்கள். முழுமையாக உங்களை அற்பணியுங்கள்.

முரட்டாட்டங்களை விட்டு விடுங்கள், உங்கள் செய்கைகளை ஒழுங்கு படுத்துங்கள், நீங்கள் செய்த தவறை  ஒத்து கொள்ளுங்கள், செய்த தவறுகளை அறிக்கை செய்து விட்டு விட்டு மனம் திரும்பி அவரிடம் வந்து விடுங்கள்.

நிச்சயமாக விடுதலையை காண்பீர்கள்,இரக்கம் பெறுவீர்கள்.

ஏனென்றால் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்னாரே. நிச்சயம் அவர் உங்களை இரட்சிப்பார்.

 

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.   சங்கீதம் 139-24

 

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.  நீதிமொழிகள் 3-6

 

ஆமென் ஆமென்

bottom of page