top of page

திரைப்படத்தில் ஊழியங்கள் கேவலமாக சித்தரிக்கப்பட்டதற்கு
யார் காரணம்?!

 

 

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கிறிஸ்தவ சபையை பற்றியும் காணிக்கை கேட்பதை பற்றியும் தரம் தாழ்ந்து கேவலப்படுத்தி காட்டியிருக்கிறார்கள், இதை பார்த்த சிலர் நாம் வழக்கு தொடர வேண்டும்.இதை சும்மா விடக்கூடாது என்று இணையத்தளத்தில் முழக்கமிட்டார்கள்.

 

இதற்கு முன்பே சினிமாவை மிஞ்சும் வகையில்  நம்மை நாமே கேவலப்படுத்தி இணையத்தளத்தில் பதிவிட்டு விட்டோம்! 

 

உதாரணமாக பல வருடங்களுக்கு முன் ரவி பாரத் என்கிற ஊழியக்காரர் ஊழியங்களில் நடக்கும் பல  காரியங்களை criticize பண்ணி video வாக வெளியிட்டிருந்தார். மேலும், அகஸ்தியன் என்ற ஊழியக்காரரும் திரைப்படத்தில் சொல்லப்பட்டதை விட மோசமாக விமர்சித்திருக்கிறார். பல ஊழியக்காரர்கள் பிரசங்க மேடைகளிலும் இணையத்தளங்களிலும் அந்த சினிமாவில் காட்டப்படுவதை விட நக்கல் பண்ணி கேவலமாக கிறிஸ்தவ ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் விமர்சித்துவிட்டார்கள். இவைகளை நாம் பலருக்கு Forward பண்ணி பரவ செய்திருக்கிறோம். எனவே சினிமாவில் வந்த காட்சிகளுக்கு முழுக்க முழுக்க காரணம் நாம் தான்.

 

நாம் உலகத்தார் முன்பாக ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் குற்றம் சுமத்தி  இணையத்தளத்தில் வெளியிடுவதை முதலில் நிறுத்துவோம்.
 

கிறிஸ்தவத்தையும் ஊழியங்களையும் குறித்து கேவலப்படுத்தும் எத்தனை செய்திகளை உலகத்தாருக்கு தெரியும்படி நாம் Forward செய்தோம்.
 

உலகத்தார் முன்பாக நாமே நம்மை  கேவலப்படுத்தி கொண்ட பிறகு உலகத்தான் நம்மை கேவலப்படுத்துவதை பற்றி எதற்கு கவலைப்படுகிறீர்கள். தன் வினை தன்னை சுடும்! எதை விதைத்தோமோ அதை அறுத்து கொண்டிருக்கிறோம்.

 

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.  கலாத்தியர் 5-15.

 

உங்களை இயேசு நல்லவர் என்று சொல்வதற்கு தானே உங்கள் எஜமான் ஊழியத்துக்கு அழைத்தார், நீங்களோ இணையத்தளத்தில் புகுந்து பிறரின் தவறுகளை வெளியிட்டு தூசித்து கொண்டிருக்கிறீர்கள். நோவாவின் நிர்வாணத்தை அவனது ஒரு மகன் வெளியே சொன்னான் இதை அறிந்த நோவா அவனை சபித்தான், மற்ற மகன்கள் அதை மூடினார்கள். தேவன் உங்கள் பாவத்தினாலாகிய நிர்வாணத்தை மறைத்திருக்கும் போது நீங்கள் பிறருடைய நிர்வாணத்தை இணையத்தளத்தில் சொல்லி சொல்லி தூசித்து கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமா?

 

நீங்கள் 100 சதவீதம் தேவனுடைய சித்தத்தை செய்கிறீர்களா?  தேவனுடைய சித்தத்தை செய்யாதவர்களை பார்த்து உங்களை எனக்கு தெரியாது... அக்கிரம சிந்தை காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று என்று இயேசு சொல்லும் போது நாங்கள் தான் நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டு  கிறிஸ்தவ ஊழியக்காரர்களின் தவறுகளை இணையத்தளத்தில் Forward செய்யும் போது அதன் விளைவுகள் என்ன என்பதை புரிந்து கொண்டீர்களா? நீங்கள் செய்யும் தூஷணத்தின் விளைவுகளும் இதன் மூலம் புறமதத்தினர் அடைந்த இடறல்களின் விளைவுகளும் நிச்சயம் உங்கள் மேல் வரும்.நீங்கள் பேசிய வீணான வார்த்தைகள் குறித்து நியாய தீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதை மறந்து விடாதீர்கள்.

 

நீங்கள் 100 சதவீதம் உங்கள் நடக்கைகளில் கறையற்றவர்களாகவும் குறையற்றவர்களாகவும் இருக்கிறீர்களா?

 

இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?  மத்தேயு 7-4

 

ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2-1

 

இப்படி பிறரை தூசித்து பேசுகிறவர்கள் ஏதாவது ஒரு பாவத்தை செய்து தங்களை தாங்களே குற்றவாளியாக தீர்த்து கொள்கிறார்கள்.லட்சக்கணக்கில் காணிக்கை பணத்தை தவறாக  பயன்படுத்துகிறார் என்று ஒரு ஊழியக்காரனை இணையதளத்தில் குறை கூறி தூசிக்கும் ஒரு ஊழியக்காரர் தெரிந்தோ தெரியாமலோ 20 ரூபாயை தவறாக பயன்படுத்தி தனக்கு தானே ஆக்கினையை ஏற்படுத்தி கொள்கிறார்.
 

முந்தி வந்தவனுக்கும் பிந்தி வந்தவனுக்கும்  ஒரே கூலியை கொடுத்த எஜமானன்,லட்சக்கணக்கில் பணத்தை தவறாக பயன் படுத்தியவருக்கும் 20 ரூபாயை தவறாக பயன்படுத்தியவருக்கும் ஒரே தண்டனையை கொடுக்க கூடும்.

 

ஒரு வேளை லட்சக்கணக்கில் காணிக்கையை பணத்தை தவறாக பயன்படுத்தியவர் தான் செய்த தவறை உணர்ந்து மனம் திரும்பி மன்னிப்பை பெற்று கொள்வார். ஆனால் நான் நீதிமான், வாரத்தில் 2 நாள் உபவாசம் இருக்கிறேன், தசம பாகம் கொடுக்கிறேன், பண விஷயத்தில்  இவனை மாதிரி தேவனை ஏமாற்றுகிறவன் நானல்ல என்று சொல்லி கொள்கிற இவர் நியாயம் தீர்க்கப்படுவார். ஏனென்றால் அதே காரியத்தை செய்த பிற ஊழியக்காரனை நியாயம் தீர்த்து தூசித்து அதே காரியத்தை அவரும் செய்கிற படியால் சொல்லப்பட்ட தேவ நீதியின் படி மன்னிப்பை பெற்று கொள்ளாமல் அவர் தன்னை தானே நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்துகிறார்.

 

இளையக்குமாரன் மன்னிக்கப்பட்டு தகப்பன் வீட்டிற்குள் பிரவேசித்தான். வேசிகளிடம் ஆஸ்தியை அழித்த இவனுக்கு கொளுத்த கன்றை அடிப்பித்தீரோ என்று இளைய குமாரனை தூசித்த மூத்தவன் தகப்பன் வீட்டிற்குள் போகவில்லை.

 

 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.  1 தீமோத்தேயு 5-24

 

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7:1

 

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.  மத்தேயு 7:2

 

நீங்கள் பிறரை குற்றவாளிகள் என்று அளப்பது போல நீங்களும் நிச்சயமாக அளக்கப்படுவீர்கள்.

 

ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். ஓசியா 4-9

 

உங்களை அழைத்த தேவன் ஊழியக்காரர்களை அவர்களின் வழிகளை விசாரித்து அவர்களின் கிரியைகளுக்கு பலனளிப்பேன் என்று சொல்லியிருக்க நீங்களோ உங்கள் எஜமானனுடைய ஸ்தானத்தில் நின்று கொண்டு நியாயம் தீர்ப்பது சரியா??

 

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; மத்தேயு 9-13

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தின் ஆழங்களை போய் கற்று கொள்ளுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு தெரியாதது எதுவுமில்லை. அவர் ஏன் பொறுமையாக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

 

தன்னை காட்டி கொடுத்த யூதாசையும் தன்னை மறுதலித்த பேதுருவையும் அவர் எப்படி பார்த்தார், எப்படி அழைத்தார் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள்.

 

இன்றைக்கு இணையத்தளத்தில் ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் தூசிக்கும் அநேகர் எழும்பியிருக்கிறார்கள்.  இவர்களை நீங்கள் அங்கிகரித்தீர்களானால் நாளை சினிமாவில் நம்மை கேவலப்படுத்துகிறவர்களையும் அங்கீகரித்து தானே ஆக வேண்டும்!!!

bottom of page