top of page

இயேசு ஏன் உலகத்தில் பிறந்தார் ?

 

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21

 

இன்றைக்கு கிறிஸ்து பிறந்த நாளை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிறவர்களில் பெரும்பாலோர் அவர் எதற்காக பிறந்தார் என்ற  நோக்கத்தை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்!!

 

இயேசு கிறிஸ்து பிறந்தது நிச்சயமாக எல்லாருக்கும் நற் செய்தி தான்.

லூக்கா 2-16 ல் தேவ தூதன் மேய்பர்களிடத்தில் கிறிஸ்து பிறப்பை பற்றி சொல்லும் போது,  இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்வதை பார்க்கலாம். அதை தொடர்ந்து வானத்தில் பரம சேனையின் திரள் தேவனை துதித்த போது பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்ற வார்த்தைகளை விளங்கி கொண்டீர்களா?

 

இந்த நற்செய்தி என்னவெனில் அவர் தமது ஜனங்களின் பாவத்தை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு தேவன் தன் ஒரே பேரான குமாரனை தந்தார்.

 

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.   யோவான் 3-16

 

ஆதாமின் கீழ்படியாமையினாலே பாவமும் மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போல, இயேசு கிறிஸ்துவின் கீழ்படிதலினாலே அநேகர் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுகின்றனர்.

 

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5-19

 

மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. ஆதியாகமம் 9-6

 

 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும் கறைப்பட்டிருக்கிறது. ஏசாயா 59-3

 

நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 9-22.  

இப்பொழுது புரிகிறதா ? தேவன் ஏன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று!?

 

(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. கொலோசெயர் 1-14

 

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. மத்தேயு 26-28 என்று இயேசு சொன்னதை கவனியுங்கள்.

 

இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பில்லை என்று வேதம் சொல்கிறது.அன்றைக்கு  பாவ மன்னிப்புக்காக பாவ நிவாரண பலியாக விலங்குகளை பலியிட்டார்கள். இப்பொழுது கிறிஸ்து உலகத்தின் பாவத்துக்காக பலியிடப்பட்டார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10-10.

 

அவர் இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரேயர் 9-16.

பாவ அடிமைதனத்திலிருந்த நம்மை தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி மீட்டிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டோம்.ரோமர் 10-9,10 வசனத்தின் படி அவர் என் பாவங்களை சிலுவையில் சுமந்து தீர்த்தார்.என் பாவத்துக்காக பலி கொடுக்கப்பட்டு என்னை விடுதலையாக்கினார், நான் அவர் பிள்ளையாய் மாறியிருக்கிறேன்.

என்று இருதயத்தில் விசுவாசித்து அறிக்கை பண்ணும் போது உண்மையிலே மனசாட்சியில் இருந்த குற்ற உணர்வு நீங்கி தெய்வீக சமாதானமும் சந்தோஷமும் நம்மை ஆளுகை செய்கிறது.இத்தகய பாவ அடிமைதனத்திலிருந்து அதாவது அந்தகார இருளின் அதிகாரத்திலிருந்து வெளிச்சத்துக்கு வந்த அனுபவத்தை பெற்ற அநேகர் தான் கிறிஸ்து எதற்காக பிறந்தார் என்பதை உண்மையிலே அனுபவபூர்வமாக அறிந்து உணர்ந்து கொள்வார்கள்.இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது என்பதை விசுவாசித்து தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு சிலுவையண்டையில் வருகிறவன் இரட்சிக்கப்படுவான்.

 

ஒரு மனிதனுடைய ஆத்துமா விலையேறப்பெற்றது என்றென்றும், ஜீவிக்க கூடியது நித்தியமானது மனுஷனுடைய சரிதத்தை போல மண்ணோடு மண்ணாய் போய் விடக் கூடியது அல்ல. ஆவியைப் போல கர்த்தரிடத்தில் போய் தங்கி விடுவதும் அல்ல, ஆத்துமா நித்திய வேதனையான நரகத்தையோ நித்திய பேரின்பமான பரலோகத்தையோ சுதந்தரிக்க கூடியது. ஆத்துமாவின் ஒரு பக்கம் ஆவி இருக்கிறது. மறுபக்கம் மாம்சமான சரீரம் இருக்கிறது. இந்த ஆத்துமா ஆவியோடு சேர்ந்து இருக்கும்போது தெய்வீகமாக செயல்படும்.சரீரத்தோடு சேர்ந்திருக்கும் போது மாம்சீகமாக செயல்படும்

 

பாவம் கடுமையாக தாக்குவதும் இந்த ஆத்துமாவை தான் ஒருவன் மெய்யான மனஸ்தாபத்தோடே சிலுவை அண்டை வந்து நிற்கும்போது கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிப்பதும் இந்த ஆத்துமாவை தான். பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொள்வதும் இந்த ஆத்துமாவில் தான்.ஆத்தும மீட்பு கர்த்தருடைய பார்வையில் மிகவும் அருமையானது.

 

கிறிஸ்து தம்முடைய ஆத்துமாவை நமக்காக குற்ற நிவாரண பலியாக ஒப்புக் கொடுத்ததினால் தான்(பார்க்க ஏசாயா 53-10) நம்முடைய ஆத்துமா இன்று மீட்கப்பட்டது. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். சாத்தானுடைய பிடியிலிருந்தும் தப்பி இருக்கிறோம். நமக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகம் எவ்வளவு பெரியது.

 

பிரியமானவர்களே கர்த்தர் உங்களுடைய ஆத்துமாவை மீட்க செய்த தியாகங்களை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.உலக மனிதர்களை போல கிறிஸ்து பிறப்பை கொண்டாடாமல் கல்வாரி அன்பையும் அவரது தியாகத்தையும் உணர்ந்தவர்களாய் தகுதியுள்ள வாழ்க்கை வாழ உங்களை ஒப்பு கொடுங்கள். இந்த கிறிஸ்து பிறப்பின் நாளிலே இயேசு சிலுவையில் பெற்று தந்த இரட்சிப்பை நாம் பெற்றிருக்கிறோமா என்று யோசித்து பார்ப்போம்!

மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். மத்தேயு 13:45,46

 

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.  1 யோவான் 2-2

 

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.  யோவான் 1-29

 

இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்காக பிறந்தார்.இந்த விலைமதிக்க முடியாத இரட்சிப்பை சுதந்தரித்து அதை முடிவு பரியந்தம் காத்து கொள்கிறவர்கள். பாக்கியவான்கள்.

 

அடுத்ததாக இயேசு கிறிஸ்து யார்?அவர் எங்கிருந்து வந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்: அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,  உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்து வைக்கையிலும்,  சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன் ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்: என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.  நீதிமொழிகள் 8:26-32

 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:1-4,9

 

இன்றைக்கு இயேசு கிறிஸ்து யார் எதற்காக பிறந்தார் அவர் பிறந்த நோக்கம் நம் வாழ்வில் நிறைவேறியிருக்கிறதா என்பதை அறியாமல் கிறிஸ்து பிறப்பு தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

அநேகர் இயேசு கிறிஸ்து   பெற்று தந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்று கொள்ளவில்லை. அநேக சபைகளில் ஜனங்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்துவதில்லை. ஏதோ சபைக்கு போகிறார்கள் வருகிறார்கள், இம்மைக்காக கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பின் நாளிலே புது உடை அணிகிறார்கள்.நல்லது தான் ஆனால் பழைய மனிதர்களாகவே இருக்கிறார்கள்.பாவம் என்ற அடிமைதனத்திலே தான் இருக்கிறார்கள். அநேக குடும்பங்களில்  இரட்சிப்பின்  சந்தோஷம் இல்லை.

அதாவது,  அநேகர் கிறிஸ்தவ மதம் சார்ந்த கொள்கைகளிலும் சபையின் கொள்கைகளிலும் தங்களை அற்பணித்து கொண்டவர்களாக இருக்கின்றனர். இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க ஒருக்காலும் வரவில்லை.அவர் உலக இரட்சகர். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார்.மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார். இப்பொழுது நீங்கள் தாலாட்டு பாடுவதற்கு அவர் பாலகன் அல்ல. பிதாவின் மகிமை பொருந்தினவராய் உலகத்தை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாய் வரப்போகிறார். அவர் வரும் போது இரட்சிக்கப்பட்டவர்கள் மாத்திரமே களிக்கூறுவார்கள்.

எனவே ஜனங்கள் இயேசு  பிறந்ததை அறிந்திருக்கிறார்கள். இயேசு மீண்டும் நியாயாதிபதியாய் வரப்போவதை அறியாதிருக்கிறார்கள்.

 

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,  கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.  அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். 2 தெசலோனிக்கேயர் 1:7-10.

 

பிரியமானவர்களே கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது நல்லது தான், மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் கடைசி நாள்கள் பற்றி அவர் சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கின்றன என்பதை ஏன் நம்மால் இன்னும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

நாள்கள் பொல்லாதவையாக மாறி கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல் இருக்கிறோம்.கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து இந்த உலகத்தில் வந்த  நிறைவேறிவிட்டதா என்பதை நிதானித்து பாருங்கள்.

 

இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.   1 கொரிந்தியர் 15-19

bottom of page