பொல்லாத ஊழியக்காரனே
நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். யோவான் 8:15,16
இயேசு கிறிஸ்து பிலாத்துவிடம் சத்தியவான் எவனும் என் குரல் கேட்கிறான் என்றார்.சத்தியத்தின் படி நியாயத்தீர்ப்பு என்றால்...உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் கல்லெறியக்கடவன்.
அடுத்ததாக, உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன? அதாவது, உன்னிடம் குறை இருக்கும் போது அதை உணராமல் பிறரின் குறைகளை பார்க்கிற மாயமாலம்.
உன்னிடம் பாவம் இருக்கையில் பிறரின் பாவத்தை சொல்லி அவர்களை நியாயம் தீர்க்கும் பயங்கரமான செயல் ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் தங்கள் மேலே ஆக்கினையை வரவழைத்து கொள்கிறார்கள்.
உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லெறியக்கடவன் என்று இயேசு சொன்னதை கேட்ட சிறியோர் முதல் பெரியோர் வரை மனசாட்சியில் குத்தப்பட்டவர்களாய் கற்களை கீழே போட்டு விட்டு சென்று விட்டனர். ஆனால் இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் பிரசங்க மேடையிலும் இணையத்தளங்களிலும் பிற ஊழியக்காரர்கள் மேல் தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் கூட இயேசு காட்டிய சத்தியத்துக்கு கீழ்படியாமல் துணிகரமாக பிற ஊழியக்காரர்கள் மேல் கல்லெறிகிறார்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் மாம்சத்துக்கேற்றப்படி நியாயம் தீர்க்கிறார்கள்.
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாளிகையிலும், அவனுடைய எஜமான் வந்து அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத்தேயு 24:48-51
தேவனுடைய தோட்டத்தில் வேலைக்காரர்களாக தேவன் உங்களை நியமித்திருக்க நீங்களோ உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல் எஜமான் வருகையை பற்றி கவலைப்படாமல் உடன் வேலைக்காரனை கல்லால் அடித்து துன்புறுத்தி கொண்டிருக்கும் போது...எஜமான் வந்து அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த இடத்தில் அவனுடைய பங்கை நியமிக்கிறார். இது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.
தன் மாம்சத்தினால் விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்.கலா6-8
தேவனுடைய தோட்டத்தில் நடுகிறதற்காகவும் நீர் பாய்சுவதற்காகவும் நியமிக்கபட்ட ஊழியக்காரனே...உன் எஜமான் ஸ்தானத்தை எடுத்து கொள்ள யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது.ஜனங்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனையும் நியாயம் தீர்ப்பேன் என்று தேவன் சொல்லியிருக்க உடன் வேலைக்காரனை கல்லெறிய யார் உன்னை அனுமதித்தது.
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். யாக்கோபு 5:9
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12
நீங்கள் முழுக்க முழுக்க தேவனுடைய சித்தத்தை ஊழியத்தில் செய்கிறீர்களா?எத்தனையோ காரியங்களில் உங்கள் சொந்த ஆவி ஏவினதை செயல்படுத்தி விட்டு தெரிந்தோ தெரியாமலோ தேவன் சொன்னார் என்று சொல்லி பல காரியங்களை செய்திருக்கிறீர்கள்.
அப்படியிருக்க பிற ஊழியக்காரர்களை பொது மேடைகளிலும் இணையத்தளத்திலும் நீங்கள் கேவலப்படுத்தும் படி செயல்பட்டிருக்கிறீர்களே?நீதி 13-13ல் பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் என்ற சத்தியத்தின் படி நியாயதீர்ப்பின் அளவு கோல் உங்கள் தலையின் மேல் இருக்கிறதே!!
இப்படி செய்வதை உங்களை ஊழியத்துக்கு அழைத்த எஜமானனாகிய கிறிஸ்து அனுமதிப்பாரா?
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2-1
மேற் சொல்லப்பட்ட வசனத்தின் படி நீ குற்றவாளியாய் தீர்க்கிற காரியத்தை நீ செய்தாய் !..... செய்து கொண்டிருக்கிறாய்!...... செய்யப் போகிறாய்!!
உங்கள் மேல் வரக்கூடிய தீர்ப்பின் அளவு இப்படியாக தான் இருக்கும்.அதை இயேசு தெளிவாக எச்சரிக்கிறார்.
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7-2
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். நீதிமொழிகள் 6-2
இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் கொஞ்சம் ஊழியம் செய்தவுடனே தாங்கள் பரிசுத்தவான் என்று நினைத்து கொண்டு தங்களிடமிருக்கும் பெருமையினாலே பிற ஊழியக்காரர்களை தூசித்து குற்றப்படுத்தி அவர்களை கேவலப்படுத்தும் வேலையை தூரிதமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. சங்கீதம் 59-12
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. கலாத்தியர் 6:1
மேற் சொன்ன வசனத்துக்கு மாறாக செயல்படுகிறவர்கள் மாம்சத்துக்குறியவர்கள்.
ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான்.
அவன் தினமும் தன்னை தானே நிதானித்து அறிவான்.தாவீது சொன்னது போல வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும். (சங்கீதம் 139-24) என்று சொல்லுவான்.
மத்தேயு 18 ம் அதிகாரத்திலே, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். மத்தேயு 18:32-34
இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களிடம் ஆண்டவர் கேட்கும் கேள்வி இது தான்.
நான் உன் கடன்களை அதாவது தப்பிதங்களை மன்னித்தது போல நீயும் உன் உடன் வேலைக்காரனின் தப்பிதங்களை மன்னிக்க வேண்டாமா? இன்றைக்கு அநேகர் உபாதிக்கிறவர்களிடம் ஒப்பு கொடுக்கப்படுவதற்கு இது தான் காரணம். உபாத்திக்கிறவன் என்றால் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
சகரியா 3 ம் அதிகாரத்தில் யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான்.
சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலது பக்கத்திலே நின்று கொண்டிருந்தான். இப்பொழுது புரிகிறதா?
யூதா 23 ம் வசனத்தில் மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்து தள்ளுங்கள் என்று வேதம் எச்சரிக்கிறதே.
இயேசுவுக்காக ஊழியம் செய்கிற நாம் சத்தியத்தையே அறிந்து கொள்ளவில்லையே!?
தேவனையே அறிந்து கொள்ளவில்லையே. ?!
அவருடைய அடிச்சுவடையே பின்பற்றவில்லையே?அவரது மாதிரியை காண்பிக்கவில்லையே!?
இன்றைக்கு இணையத்தளங்களில் பல ஊழியக்காரர்களை குற்றம் சுமத்தி கேவலப்படுத்தி பதிவிடுகிற ஊழியக்காரர்களே! உங்களால் அநேகர் கிறிஸ்துவினிமித்தம் இடறலடைந்து பின்வாங்கியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னை பின்பற்ற கடவன் என்று இயேசு சொன்னாரே?
தன்னை காட்டி கொடுக்க போகும் யூதாஸை சிநேகிதனே என்று அழைத்தாரே?தன்னை மறுதலித்த பேதுருவை தேடி வந்து சீமோனே என்னை நேசிக்கிறாயா என்று கேட்டாரே.உங்களுக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினால் தேவ அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றப்பட்டிருந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் அன்பு அயோக்கியமானதை செய்யாது.
பிரியமான ஊழியக்காரர்களே, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள். இனிமேலும் அக்கிரமத்தை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை பாவத்துக்கு அடிமைகளாக ஒப்பு கொடுக்காதீர்கள்.
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. ரோமர் 14-4
சத்தியத்தையும் அறிவீர்கள்.சத்தியம் விடுதலையாக்கும். ஆமென்.