பிதாக்களுடைய பாவத்தின் விளைவான
சாபத்தை பிள்ளைகள் சுமப்பார்களா??
முதலாவது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.மனித அறிவை கொண்டு தேவனுடைய செயல்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள். ரோமர் 11-33
எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். ரோமர் 9-18
வேதாகமத்தில் பிதாக்களுடையபாவத்தை பிள்ளைகளிடம் சரிகட்டுகிறவர் என்று தேவனை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.இந்த வசனத்தை கிருபையை பற்றி போதிக்கிறவர்கள் மறுத்து போதிக்கிறார்கள்.இந்த கிருபை பிரசங்கிகள், சந்ததியினர் மேல் சாபங்கள் கட்டவிழ்க்கப்படுகிறது என்பதை மறுக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் வாலிப பிள்ளைகள் 17 வயதில் மரித்து விடுவார்களாம். ஏனென்றால் அவர் தாத்தா ஒரு 17 வயதான வாலிபனை கொலை செய்ததின் நிமித்தமாக அந்த வாலிபனின் தாயார் இட்ட சாபம் அந்த குடும்பத்தின் சந்ததி மேல் ஆளுகை செய்கிறது.
அநேக குடும்பங்களில் நடக்கும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் அகால மரணங்கள் விபத்துக்கள், நஷ்டங்கள்,காலம் தவறாமல் வரும் வியாதிகள்,தானாக கரு அழிதல்,மலட்டு தன்மை,தாமதமான திருமணங்கள்,உடைந்து போன திருமணங்கள்,தரித்திரம்,மனநிலை பாதிப்பு,வாழ முடியாத நிலைமைகள் போன்ற காரியங்கள் பெரும்பாலும் சாபத்தின் விளைவுகளே.
கிறிஸ்துவை ஏற்று கொண்டு உடன்படிக்கை செய்த பிறகு சலுகைகளுக்காக கிறிஸ்துவை மறுதலித்து நாங்கள் விக்கிரகத்தை வணங்குகிறவர்கள் என்று அறிக்கை பண்ணுகிறவர்களின் சந்ததியில் சாபங்கள் பின் தொடருவதை காணலாம்.தேவனுக்கு முன்பாக ஆலயத்தில் உடன்படிக்கை செய்து கொண்ட பெற்றோர்கள் அந்த உடன்படிக்கையை மீறி செய்த விபச்சாரம் வேசித்தனத்தினால் அதன் பின் விளைவுகள் அவர்கள் சந்ததியினரை பாதிக்கிறது.
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். உபாகமம் 30-15
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொள். உபாகமம் 30:19
இன்றைக்கு ஜனங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்காமல் அநியாயம் செய்து சாபத்தையே தங்கள் சந்ததியினருக்கு சம்பாதித்து வைத்து போகிறார்கள்.
ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். யாத்திராகமம் 34-7
ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவன். எரேமியா 32-18
பல குடும்பங்களில் பெற்றோர் செய்த பாவங்களின் விளைவான சாபங்களை பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள் என்பது உண்மையே.
இயேசு கிறிஸ்து சிலுவையில் பெற்று தந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை சரியாக முழுமையாக பெற்று கொள்ளாத பல குடும்பங்களில் முன்னோர்களின் சாபங்கள் பிள்ளைகள் மேல் வருகிறது. துன்மார்க்கமாக வாழ்ந்தவர்கள் மேலும் பிறருக்கு அநியாயம் செய்தவர்களின் பிள்ளைகள் அவர்கள் செய்த அக்கிரமங்களின் விளைவுகளை சுமக்கிறார்கள்.தேவனால் அழைக்கப்பட்ட உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்களை கேவலப்படுத்தும் படியாக அவர்கள் மீது சொல்லப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லியவர்களின் சந்ததிகள் மேல் அதன் சாபங்கள் கடந்து வருவதை காணலாம்.(பார்க்க மத் 23-36)
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 2 தெச 1-6
அதே மாதிரி தேவ சட்டத்துக்கு புறம்பாக போதிக்கிற உண்மையற்ற ஊழியக்காரர்கள்,தேவ ஊழியத்தை பணத்துக்காக வஞ்சகமாக செய்கிறவர்கள் சந்ததி மேல் தேவனுடைய கோபாக்கினை கடந்து வருவதை காணலாம்.
துன்மார்கத்தை கண்டித்து உணர்த்தாத ஊழியக்காரர்கள்.அதாவது பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயத்தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்தாமல் அதனிமித்தம் மனம் திரும்பாமல் அந்த துன்மார்க்கத்தினால் அழிந்து போகிற ஆத்துமாக்களின் இரத்தப்பழி அந்த ஊழியக்காரரிடம் கேட்கப்படும் என்று தேவன் எச்சரிக்கிறார். (பார்க்க எசேக்கியல் 33-8) துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். நீதிமொழிகள் 3-33
எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். புலம்பல் 5:7
அநேக குடும்பங்களில் பெற்றோர்கள் செய்த பாவங்கள் பிள்ளைகள் மேல் கடந்து வருகிறது என்பதை பார்க்கலாம். ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி அவரது வீட்டை அபகரித்து கொண்டு அவரையும் அவரது வீட்டாரையும் துரத்தி விட்டார். பல வருடங்கள் கழிந்து அவரது பிள்ளைகள் குடும்பத்தில் அந்த சாபத்தின் விளைவுகள் பயங்கரமான நோய்கள் மூலமாகவும் விபத்துக்கள் மூலமாகவும் வெளிப்பட்டது. அவர்கள் ஆலயத்துக்கு போகும் கிறிஸ்தவர்களாயிருந்தாலும் அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. இன்றைக்கு அவரது சந்ததியினர் தன் தகப்பன் அபகரித்த அந்த வீட்டை அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்த நிலையில் காணப்படுகிறார்கள்.ஒரு வீட்டில் ஒரு வயதான தாயாரை அடித்து துரத்தி விட்டார்கள்.
இன்றைக்கு அந்த சந்ததியினர் யார் வீட்டிலும் சமாதானம் இல்லை.
பலர் தாங்கள் பிறருக்கு செய்த அநியாயத்திற்காக அவர்களிடம் சென்று மன்னிப்பை பெற்று கொள்வதில்லை. மேலும் பல பெற்றோர்கள் தங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் தங்களிடம் மன்னிப்பு கோரும் போது மன்னிக்காத நிமித்தம் அவர்களை நிறையிருப்புக்குள் வைக்கிறார்கள்.தாங்களும் பரம பிதாவிடமிருந்து மன்னிப்பை பெற்று கொள்வதில்லை. (மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மத்தேயு 6-15)
மத்தேயு 18 ம் அதிகாரம் 22 லிருந்து 35 வரை உள்ள வசனங்களை கவனமாக படித்து பார்க்கும் போது தேவன் நம்மை மன்னித்தும் நாம் பிறருக்கு மன்னிப்பை வழங்காமல் அவர்களை நிறையிருப்புக்குள் வைத்தப்படியினால் நாமும் தேவனுடைய நீதியின் படி மன்னிப்பை பெற்று கொள்ள முடியாத ஒரு விதமான சாபம் என்கிற சிறையிருப்புக்குள் கடந்து போகிறோம். இது நம்முடைய அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது.
பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரீர சுகத்துக்காக விக்கிரகங்களுக்கும் பேய்களுக்கும் செலுத்தப்பட்ட பலிகளை சாப்பிட செய்ததுண்டு. இத்தகய சபிக்கப்பட்ட ஆகாரம் ஜீரணமாகி அதன் கொடிய விளைவுகள் இரத்த ஓட்டத்தோடு கலந்திருக்க கூடும். இயேசுவின் இரத்தத்தால் மாத்திரமே இத்தகய பின் விளைவுகளை செயலிழக்க செய்ய முடியும். பிறரை துன்புறுத்த மந்திரவாத பில்லி சூனியம் வைத்தவர்களை அதன் பாவத்தின் விளைவுகள் தாக்குகிறது, அவர்கள் சந்ததி வரை பின் தொடர்கிறது.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:5
வேதாகமத்திலும் பெற்றேர்கள் செய்த பாவத்தின் விளைவுகள் சாபங்களாக அவர்கள் பிள்ளைகள் மேல் வருவதை பார்க்கலாம்.
2 சாமுவேல் 12 ம் அதிகாரத்தில் தாவீது உரியாவின் மனைவியிடம் செய்த பாவத்தின் நிமித்தமாக தேவன் அவர்களுக்கு பிறந்த குழந்தையை அடித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அவன் மனம் திரும்பி விட்டது உண்மை தான். ஆனால் அதன் விளைவுகள் அவன் சந்ததி மேல் வந்தது.(பார்க்க 2 சாமுவேல் 12,16 அதிகாரங்கள்)
அதே மாதிரி 1 ராஜாக்கள் 21 ம் அதிகாரத்தில் ஆகாப் ராஜாவின் அநியாயத்தின் விளைவான நியாயத்தீர்ப்புகள் அவன் சந்ததி மேல் கூறப்பட்டது.
அடுத்ததாக 1 சாமுவேல் 3 ம் அதிகாரத்தில் ஏலியின் குடும்பத்தின் மேல் நியாயத்தீர்ப்பு கூறப்படுவதை காணலாம்.
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். 1 சாமுவேல் 3:13
அடுத்த வசனத்தில் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒரு போதும் பலியினாலும் காணிக்கையினாலும் நிவர்த்தியாவதில்லை என்று கர்த்தர் ஆணையிடுகிறார்.
தேவனுடைய நியாயத்தீர்ப்புகளையும் அவர் வழிகளையும் ஆராய்ந்து அறிகிறவன் யார்?என் வழிகள் உன் வழிகள் அல்ல என்று கர்த்தர் சொல்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நீங்கள் கொலை செய்த நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள் மேலும் உங்கள் சந்ததி மேலும் வரும் என்று சொல்வதை பார்க்கலாம்.
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார் மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 23-36
மேலும் வெளிப்படுத்தின விஷேசம் 2ம் அதிகாரத்தில் பெர்கமு சபைக்கு தேவன் சொல்லும் போது பிள்ளைகள் மேலே நியாயத்தீர்ப்பு சொல்லப்படுவதை பார்க்கலாம்.
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். வெளிப்படுத்தினத விசேஷம் 2:21-23
இன்றைக்கு சத்தியத்தை அறிந்த பிறகும் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம் திரும்பாத அநேகர் வீடுகளில் சாபங்கள் நிழலிடுவதை காணலாம்.
மேல் சொல்லப்பட்ட வசனத்தின் படி தேவன் புதிய ஏற்ப்பாட்டில் எந்த? பாவமாக இருந்தாலும் மனம் திரும்ப சொல்கிறார். பாவ மன்னிப்பை பெற்று கொள்ள சொல்கிறார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்கு பெற்று தந்த பெரிய ஆசீர்வாதம் பாவத்திலிருந்து மாத்திரமல்ல, சாபத்திலிருந்தும் நமக்கு விடுதலை.இயேசுவின் இரத்தத்தினாலே மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. நாம் விசுவாசிக்கும் போது பாவத்திலிருந்து மாத்திரமல்ல..பரம்பரை சாபத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. விசுவாசத்தோடு இரட்சிப்பை சுதந்தரிக்கிறவர்கள் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கிறார்கள். ஆனால் ஆலயத்துக்கு போகிற அநேகர் இரட்சிப்பு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இரட்சிக்கப்பட்ட பிறகும் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள் என்று (பிலி2-12) வேதம் சொல்கிறது.
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3-13
முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ மேலும் வேண்டுமென்றே செய்த பாவங்கள், தேவனுக்கு கீழ்ப்படியாமை, அநியாயங்கள் மற்றும் அந்நிய தெய்வங்களோடு செய்த உடன்படிக்கைகள்,சுயமாய் சொல்லப்பட்ட சாப வார்த்தைகள், கள்ள தொடர்புகளும் இயற்க்கைக்கு முரணான பாலுணர்வுகளும், இரட்சிப்பை சரியாக பெற்று கொண்டு தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிவதன் தடுக்கப்படுகின்றன.
அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்காக பஸ்கா ஆட்டு குட்டி பலியிடப்பட்டு அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு அதன் பின் செங்கடலை கடந்து வந்தார்கள்.தங்களை துரத்தி கொண்டு வந்த எகிப்திய சேனைகளிடம் இருந்து காக்கப்பட்டார்கள்.இன்றைக்கும் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு ஞானஸ்நானம் என்கிற சத்தியத்தை விசுவாசத்தோடு எடுப்பவர்கள் தங்களை துரத்தி கொண்டு வரும் சாபத்திலிருந்தும் பாவத்தின் விளைவுகளில் இருந்தும் காக்கப்படுகிறார்கள்.
1 கொரி 5-7 ன் படி நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
அடுத்து, செங்கடல் வழியான பயணம் ஞானஸ்நானத்துக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.(எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.1கொரி10-2)
கிறிஸ்துவின் சிலுவையண்டையில் மனம்திரும்பி பாவ மன்னிப்பை பெற்று கொண்ட ஒருவன் நிச்சயமாக ஞானஸ்நானம் என்ற என்கிற சத்தியத்தின் வழியாக தான் இரட்சிப்பின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியும்.இன்றைக்கு அநேகர் விடுதலையாகாதப்படிக்கு ஞானஸ்நானம் என்கிற சத்தியத்தை உல்டாவாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.சில சபைகளில் ஞானஸ்நானம் தேவையில்லை என்று போதிக்கிறார்கள்.ஞானஸ்நானம் எடுக்க தேவையில்லை என்று இயேசு சொன்ன கட்டளையை மறுதலித்து போதிப்பது சாபத்தை கொண்டு வரும்.
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.லூக்கா 7-30
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
அப்போஸ்தலர் 22-16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16:16
1பேதுரு 3-20 ல் நோவாவும் அவன்குடும்பத்தாரும் ஜலத்தினால் காக்கப்பட்டார்கள்.இதற்கு அடுத்த வசனத்திலே இது ஞானஸ்நானத்துக்கு ஒப்பிடப்பட்டு தேவனை பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கைக்கையாயிருந்து நம்மையும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
இன்றைக்கு பலருடைய வாழ்க்கையில் பின் தொடரும் சாபங்கள் இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரட்சிப்பின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது.இப்படி இரட்சிப்பை பெற்றவன் தான் தேவன் தனக்கு கொடுத்த அதிகாரத்தை பெற்று கொண்டவனாய் விசுவாசத்தோடே பிசாசுக்கு என் மேல் அதிகாரமில்லை என்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய விலையேறப் பெற்ற இரத்தத்தை சிந்தி என்னை மீட்டு கொண்டார் என்றும் தைரியமாக சொல்லுவான். கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் மாத்திரமே அவரது கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து இரட்சிப்பை பெற்று கொள்வான்.
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். எசேக்கியேல் 18:19
அடுத்த வசனத்தில் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தை சுமப்பதில்லை என்று தேவன் சொல்கிறார்.
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
சங்கீதம் 103:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
தானியேல் 9:10
பிறர் நமக்கு செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காவிட்டால் நாமும் தேவனிடம் இருந்து மன்னிப்பையும்இரக்கத்தையும் பெற்று கொள்ள முடியாது.
ஆமென்