உண்மையற்ற, மாம்சத்துக்குறிய ஆராதனை!!
மத்தேயு 26-40 ஆவது வசனத்தில் யூதாஸ் இயேசுவிடம் வந்து ரபி வாழ்க என்று அவரை ஆராதித்து அவரை முத்தமிடுகிறான். எவ்வளவு அழகாக அவரை வாழ்த்துகிறான் பாருங்கள்.
இயேசு அவனை பார்த்து சிநேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார்? இருதயத்தில் பண ஆசையால் நிரப்பபட்டவனாய் வெறும் உதடுகளால் இயேசுவை வாழ்த்தினான். இப்படிப்பட்ட மாயமாலமான போலியான ஆராதனையை தான் இன்றைக்கு அநேகர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் பணத்தையும் உலகத்தையும் நேசித்து கொண்டு மறுபக்கம் சபையில் இயேசுவை வாழ்த்தி ஆராதிக்கிறார்கள். இன்றைக்கும் இயேசு நம்மை பார்த்து சிநேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்று கேட்கிறார்?
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
மத்தேயு 15-8
இதே கேள்வியை உங்களிடம் நீங்களே கேளுங்கள்.!! நாம் ஞாயிற்று கிழமைகளில் தேவனை ஆராதிக்கிறோம், ஆனால் மற்ற நாள்களில் நம் இருதயம் தேவனை விட எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? இயேசு இந்த வார்த்தையை சொல்வதற்கு முன்பு அதாவது 7ம் வசனத்தில் மாயக்காரனே என்றார், இதன் அர்த்தம் என்னவென்றால் மாம்சத்துக்குறியவர்களாக இருந்து கொண்டு தங்களை ஆவிக்குறியவர்களாக எண்ணி கொண்டு தேவனை புகழ்ந்து பாடுவது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு பரிசுத்த பந்தியில் கலந்துகொண்ட யூதாசை குறித்து, உங்களில் ஒருவன் பிசாசாய் இருக்கிறான் என்று இயேசு சொன்னார்.
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்;
1 யோவான் 3
இன்றைக்கு ஆவிக்குறியவர்கள் என்று சொல்கிறவர்கள் சபையின் உபதேசங்களில் வைராக்கியமாக தீவிரமாக இருக்கிறார்கள், வசனத்தை தாராளமாக பேசுகிறார்கள்,
கிரியைகளில் மாம்சத்துக்குறியவர்களாக இருந்து கொண்டு ஆவிக்குறிய நிலையில் செத்தவர்களாக இருக்கிறார்கள்.
சுத்திகரிப்பு காத்திருப்பு மற்றும் கால்களை கழுவுதல் போன்ற சபையின் காரியங்களில் வைராக்கியமாக இருந்து கொண்டு பாவத்தின் அடிமைதனத்திலும் இருக்க முடியுமென்றால் அது மாயமாலம் தானே?! பல வருடங்களாக இத்தகய சபை பாரம்பரியத்தில் ஊறி போன மூப்பர்கள் கூட தங்கள் இருதயத்தில் விக்கிரகத்தின் ஆணி வேராகிய சாதியை வைத்திருக்கிறாகள் என்றால் இவர்கள் இன்னமும் விடுதலையை பெறவில்லை என்று தானே அர்த்தம்?!
தன்னிடம் உள்ள பண ஆசையால் இயேசுவை 30 காசுக்கு சமமாக்கிய யூதாசை போல பண விஷயத்தில் நேர்மையற்றவர்களாக இருந்து கொண்டு ரபி வாழ்க என்று ஆராதித்து கொண்டிருக்கும் இவர்கள் சபையில் ஒரு வாழ்க்கை வெளியில் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தங்களை தாங்களே வஞ்சித்து கொள்கிறார்கள்.
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஏசாயா 29-13
இந்த வசனத்தின் கடைசி பகுதியை கவனித்தீர்களா?இவர்கள் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட பாரம்பரியமாகவே இருக்கிறது.
இயேசு கிறிஸ்து, ஆவியோடும் உண்மையோடும் பிதாவை ஆராதிக்கும் காலம் வந்திருக்கிறது என்றார். இருதயத்தில்……. கசப்பையும், வெறுப்பையும், பகையையும், சாதி வெறியையும்,
தீமைக்கு வேறாயிருக்கிற பண ஆசையையும் வைத்து கொண்டு இருதயத்தில் சுத்தமில்லாமல் உண்மையற்ற நிலையில் தேவ சமூகத்தில் வந்து யூதாஸை போல நீர் வாழ்க...வாழ்க உம் நாமம் வாழ்க என்று ஆராதித்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம். அதாவது போலியான மாம்சத்துக்குறிய ஆராதனையை செய்து கொண்டிருக்கிற நாம் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.மனம் திரும்ப நம்மை ஒப்பு கொடுப்போம்.
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. மத்தேயு 5-13
இன்றைக்கு ஆழ்ந்த சத்தியத்தை பேசும் சபைகளில் தேவனை ஆராதிக்கும் விசுவாசிகள் கூட தங்கள் சுவையை இழந்து போய் மனுஷரால் மிதிபடும்படியான தரம் தாழ்ந்த நிலைக்கு தள்ளபட்டுவிட்டார்கள். பலருடைய மாம்சம் ஆவிக்கு விரோதமாக இச்சித்து கொண்டிருக்கிறது. மாம்சத்துக்குறியவர்கள் தேவனுக்கு பிரியமாயிருக்கமாட்டார்கள் என்று வேதம் சொல்கிறது.
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3-3
ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். பிலிப்பியர் 3-3
இன்றைக்கு நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் எண்ணங்களும் தேவனுக்கு பிரியமாயிருக்கிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கு பிரியமான சுகந்த வாசனையான பலியாக தம்மை ஒப்பு கொடுத்தது போல நாமும் நம்மை ஒப்பு கொடுப்போம்.
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:1,2
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1
இயேசு கிறிஸ்து சமாரியா பெண்ணிடம் சொன்ன ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதை பவுல் புத்தியுள்ள ஆராதனையாக குறிப்பிடுகிறார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையும் செயல்களும் தேவனுக்கு பிரியப்படும்படியாக இருப்பதே உண்மையான ஆராதனை.
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 பேதுரு 2-12
ஆமென், ஆமென்.