நீங்கள் தான் தேவ சமூகத்தில் வழக்காடும் பிரதிநிதி !
நீங்கள் வாழும் தேசத்தின் பகுதிகளை ஜெபிக்கிறவர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும்.
அதாவது தேசத்தில் MP,MLA போல அந்த பகுதிக்காக உத்தரவாதம் எடுத்து தேவ சந்நிதியில் ஜெபிக்கும்படியாக ஜெப வீரர்களையும் யுத்த வீரர்களையும் ஏற்படுத்த வேண்டும்.இது தான் பிரதிநிதித்துவ ஊழியம்.
ஆபிரகாமிடம் ஆண்டவர் நீ பார்க்கும் இடமெல்லாம் உனக்கு தருவேன்.நீ எழுந்து தேசத்தில் நடந்து திரியும் இடமெல்லாம் உனக்கு தருவேன் என்ற வாக்கு தத்தத்தின் படி விசுவாச கண்களோடு உங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்துக்காக ஜெபியுங்கள்.
முடியுமானால் அந்த இடத்துக்கு சென்று கால் மிதித்து தேவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். ஏனென்றால் அந்த இடத்திற்கான தேவனுடைய பிரதிநிதி நீங்கள் தான்.
முதலாவது தேவனுடைய பிரதிநிதித்துவத்துக்காக நன்றி சொல்லுங்கள். எனக்கு கொடுத்த அந்த பகுதிக்காகவும் இந்த ஊழியத்துக்காகவும் நன்றி சொல்லுங்கள்.
ஆவியானவரே இந்த ஊழியத்தை செய்யும் படி என்னை அபிஷேகித்து உம்முடைய ஞானத்தினாலே நிரப்பும் படி உங்களை ஒப்பு கொடுங்கள். அடுத்ததாக அந்த பிரதிநிதித்துவத்தின் படி அந்த பகுதிக்காக தேவனோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளுங்கள்.எந்த சூழ்நிலையிலும் எனக்கு கொடுக்கப்பட்ட பகுதிக்காக நான் தேவ சமூகத்தில் வந்து விண்ணப்பம் செய்வேன் என்று உங்களை அர்பணியுங்கள்.ஒரு MP பார்லிமெண்டில் விண்ணப்பம் செய்வது போல நீங்கள் தேவ சந்நிதியில் உங்கள் பகுதிக்காகவும் அந்த பகுதியின் ஜனங்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்படவும் அந்த இடத்தில் தேவ வசனம் கடந்து செல்லும்படியாக வாக்கு உண்டாக்கபடவும்,சுவிசேஷகர்கள் எழும்பி சுவிசேஷம் பிரசிங்கிக்கவும் மேலும் அந்த பகுதியின் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படவும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.அந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
முதலாவது உங்களை பரிசுத்தபடுத்தி கொள்ளுங்கள்.தேவன் நீங்கள் செய்யும் ஊழியத்தில் அற்புதங்களை செய்வார்.உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்பு கொடுங்கள்.கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் உங்களை பெலப்படுத்தி கொண்டு அவருடைய சர்வாயுதவர்கத்தை எடுத்து கொள்ளுங்கள்.
தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.அவன் ஓடிப் போவான்.விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.அந்த பகுதியில் இருக்கும் பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை உங்களுக்கு தருவார்.
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16:18
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. லூக்கா 11:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். யோவான் 14-12
தேவனையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கிற உங்களுக்கு பிசாசை துரத்துவதற்கு அதிகாரத்தையும் வரங்களையும் தந்துவிட்டார். ஆமென்.
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. ஏசாயா 52-1
தேவன் எதற்காக உங்களை அந்த பகுதியில் வைத்திருக்கிறார் என்கிற உங்கள் அழைப்பை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
அதாவது எண்ணாகமம் 33 ம் அதிகாரம் 51-56 வரை படியுங்கள்.நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள ஆவிக்குறிய சத்துருக்களை நீங்கள் உங்களுக்கு கொடுத்த அதிகாரத்தின் படி துரத்த வேண்டும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு மிகவும் மேன்மையானது. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9 ஆமென்.
ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும். யோபு 16:21
ஆதியாகமம் 18 ம் அதிகாரத்தில் ஆபிரகாம் தன்னை தாழ்த்தி நான் தூளும் சாம்பலுமானவன், அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். நீர் சர்வலோக நியாயாதிபதி. நீதி செய்யாதிருப்பீரோ என்று சொல்லிவிட்டு ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் அந்த ஸ்தலத்தை இரட்சிக்காமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ என்று மன்றாடுகிறான்.அப்படியே 45,40,30. மேலும், 10 நீதிமான்கள் நிமித்தம் தேசத்தை அழிப்பீரோ என்று வழக்காடுகிறான்.
26ம் வசனத்திலே ஐம்பது நீதிமான்களை கண்டால் அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலம் முழுவதும் இரட்சிப்பேன் என்றார். இது தான் தேவ சமூகத்தில் மன்றாடும் முறை.
உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். ஏசாயா 41:21
உங்கள் வழக்கை கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார்.வழக்கு என்ன?
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1 தீமோத்தேயு 2:4
இந்த இரட்சிப்பை கட்டளையிடும் படி தேவனுடைய வழக்கு மன்றத்தில் அதாவது அவரது ஆலோசனை சங்கத்தில் பரிந்து பேசுவோம்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கி பிதாவே இவர்களுக்கு மன்னியும் இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றாரே! ஸ்தேவான் சாகும் தருவாயில் இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்று சத்தமிட்டு பரிந்து பேசினானே.அதே மாதிரி நாமும் நமக்கு கொடுக்கப்பட்ட இடத்தின் பிரதிநிதியாக அந்த பகுதியில் இருக்கும் ஜனங்கள் இரட்சிக்கப்படும்படியாக தேவ சந்நிதியில் பரிந்து பேசுவோம்.
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 1 யோவான் 2:1
நம்முடைய பிரதான ஆசாரியரான இயேசுவினிடத்தில் நாம் மன்றாடுவோம்.
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. எபிரேயர் 8-2
அடுத்ததாக நமக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் தேவனுடைய தூதர்களை அனுப்பும் படியாக வேண்டுதல் செய்யுங்கள்.
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? எபிரேயர் 1:14
அன்றைக்கு எலிசாவை பிடிப்பதற்கு குதிரைகளும் இரதங்களையும் பலத்த இராணுவமும் அனுப்பபட்ட போது வேலைக்காரன் ஓடி வந்து ஐயோ ஆண்டவனே என்ன செய்வோம் என்னு கேட்ட போது எலிசா விண்ணப்பம் செய்து இவன் பார்க்கும்படி இவன் கண்களை திறந்தருளும் என்று விண்ணப்பம் செய்த போது அவன் கண்கள் திறக்கப்பட்டது.
அப்பொழுது எலிசாவை சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டது போல நீங்கள் இருக்கும் பகுதியில்..தேசத்தில் பொல்லாத இருளின் வல்லமைகளை,பிசாசின் கிரியைகளை, பொல்லாத அதிகாரத்தின் ஆவிகளை அழிக்கும் படியாக தேவன் தன்னுடைய பரம சேனையின் திரள்களை அனுப்பும் படி கேளுங்கள்.
அதற்கு எலிசா: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். 2 இராஜாக்கள் 6:16
அன்றைக்கு எலிசா சொன்னது போல இன்றைக்கு விசுவாசத்தோடு அறிக்கை பண்ண போகிறீர்கள். கர்த்தரின் பிரதிநிதியாகிய உங்கள் மூலம் உங்களுக்கு கொடுக்கபட்ட பகுதியில் தேவன் இரட்சிப்பை கட்டளையிட்டு அந்த பகுதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குள் வரப்போகிறது.கர்த்தர் உங்கள் மூலமாக பெரிய காரியங்களை செய்வார்.
விசுவாசியுங்கள்.தேவ மகிமையை காண்பீர்கள். அல்லேலுயா.ஆமென்...