top of page

இயேசுவின் மாதிரியை பின்பற்றாமல் நம் இஷ்டப்படி

ஊழியம் செய்தால் பிதா கனம் பண்ணுவாரா??

 

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் ….

1.என்னைப் பின்பற்றக்கடவன்.

2.நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.

3.ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.   யோவான் 12-26

 

ஊழியம் செய்தால் பிதா கனம் பண்ணுவார் பிதா கனம் பண்ணுவார் என்றே சொல்கிறோம். ஆனால் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட முந்தைய இரண்டு காரியங்களை அறிந்து கொள்வதில்லை.

 

முதலாவதாக ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னை பின்பற்ற கடவன்...

நாம் இயேசுவின் அடிச்சுவடுகளை அவர் வைத்த மாதிரியை பின்பற்றி நடக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஊழியத்தில் அவர் ஒரு போதும் தன்னை உயர்த்தி கொள்ளவில்லை. மனித புகழ்ச்சியை நாடவில்லை.எப்பொழுதும் ஜெபத்தில் தரித்திருந்து பிதாவின் சத்தம் கேட்பவராக இருந்தார். அடுத்ததாக,  அவரது சித்தத்தையே செய்தார், பிதாவானவர் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவி கொடுங்கள் என்று இயேசுவை கனம் பண்ணினார்.

 

இன்றைக்கு  ஊழியம் செய்கிற நம்மை பார்த்து பிதாவானவர் இப்படி சொல்ல முடியுமா? லூக்கா 6 ம் அதிகாரம் 12 ம் வசனத்தில் அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையில் ஏறி இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி கொண்டிருந்தார்.பொழுது விடிந்த போது சீஷர்களை வரவழைத்து 12 பேரை தெரிந்து கொண்டு அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பேரிட்டார்.யோவான் 17-6 ல் நீர் உலகத்தில் தேர்ந்தெடுத்து தந்த மனுஷருக்கு உம்முடைய  நாமத்தை வெளிப்படுத்தினேன் என்றார். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால்  சீஷர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கூட பிதாவிடம் கேட்டு தான் செய்தார். அதற்காக இரா முழுவதும் ஜெபித்து கொண்டிருந்தார்.

 

இன்றைக்கு ஊழியத்தில் யாரை பொறுப்பாளர்களாக நியமிக்கிறோம்? இயேசு காட்டியவர்களை  தனக்கு அடுத்ததாக நியமிக்கிற ஊழியக்காரர்கள் வெகு சிலரே!  ஊழிய அழைப்பே இல்லாத தங்கள் பிள்ளைகளிடமும் சொந்தகாரர்களிடமும் சபையின் பொறுப்புகளை கொடுப்பதால் பல சபைகள் தேவ சித்தத்தை இழந்து போனது.  இன்றைக்கு தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ சித்தத்தை அறிந்து கொண்டு ஊழியத்தில் தேவனுடைய ஆலோசனையையும் சித்தத்தையும் திட்டத்தையும் செயல்படுத்தும் ஊழியக்காரன் எங்கே? இயேசுவை போல் மனித புகழ்சிக்கு விலகி ஓடும் மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரர்கள் எங்கே? இயேசுவை போல சுயத்தை வெறுத்து சிலுவை சுமக்கும் ஊழியக்காரர்கள் எங்கே?மனசும் மாம்சமும் விரும்பினவைகளை செய்து தேவனால் அழைக்கப்பட்டவர்களை சபையில் புறக்கணித்து தங்கள் சுய சித்தத்தை அநேக ஊழியக்காரர்கள் செய்வதால் சபை தேவ மகிமையை இழந்து போனது. தனக்கு ஜால்ரா போடுகிறவர்களையும் தங்களுக்கு ஒத்த வேஷம் தரிப்பவர்களையும் ஊழியத்தில் பயன்படுத்துவதால் தேவ கோபாக்கினை ஊழியக்காரர்கள் மேல் வருகிறது.

 

தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.

லூக்கா 12-47 என்ற வசனத்தின் படி பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியம் செய்ய ஒப்பு கொடுப்போம்.

ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட நாம் பரிசுத்த ஆவியானவரின் குரலை கேட்டு இயேசுவை பின்பற்றும் படியாக நம்மை ஒப்பு கொடுப்போம்.

 

இரண்டாவதாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவனும் இருப்பான் என்று இயேசு சொன்னார்.கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை தேடுங்கள் என்று கொலோசேயர் 3-1 சொல்லப்பட்டது போல இன்றைக்கு ஊழியம் செய்கிற நாம் அழிந்து போகிற உலகத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் நமக்கு  முன்பாக வைத்திருக்கிறோம். முதலாவது உலகத்துக்குறியவைகளை தேடுகிறோம் பிறகு தேவனுடைய ராஜியத்தை தேடுகிறோம். அவரால் உலகம் எனக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்று பவுல் சொன்னார். ஆனால் இன்றைக்கு உலகத்தையே ஊழியத்தில் கொண்டு வந்து வைத்து விட்டார்கள். உலக கார்பரேட்டுகள் எப்படி வியாபாரம் செய்வார்களோ அதே மாதிரி தான் பல சபைகளும் ஊழியங்களும் தேவனை விட்டு விலகி நித்திய ஜீவ வார்த்தைகளை விற்கும் வியாபார ஸ்தலமாகிவிட்டது.

 

அன்றைக்கு இயேசு சொன்னார், ஆவிகள் உங்களுக்கு கீழ்படிகிறதற்கு சந்தோஷப்படாமல் பரலோகத்தில் உங்கள் பெயர் எழுதியிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள். என்றார்.இந்த வசனத்தை ஒவ்வொரு ஊழியக்காரனும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பார்வை உலகத்தை நோக்கி அல்ல பரலோகத்தை நோக்கி இருக்கட்டும்.பரலோகத்தை பார்க்கிற ஊழியக்காரன் தான் தன் ஜனங்களையும் பரலோகத்துக்கு நேராக நடத்துவான். ஸ்தேவான் தன்னை கொல்ல கற்களை எடுத்து கொண்ட மனிதர்கள் மத்தியிலும் பரிசுத்தாவியினால் நிறைந்தவனால் வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவையும் பிதாவின் வலது பாரிசத்தில் இயேசுவையும் பார்த்தான்.  இன்றைக்கு.......தேவ பிரசன்னம், தேவ பிரசன்னம் என்று சொல்கிறவர்கள் பூமிக்குறிய காரியங்களில் அடிமையாக இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்புகிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையிலே பரிசுத்த ஆவியினாலே நடத்தபடவில்லை.

 

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

 

பிரியமானவர்களே, ஊழியம் செய்கிற நாம் இன்றைக்கு நம்மை நிதானித்து பார்ப்போம். இது வரை ஊழியம் செய்த...செய்கிற நாம் இயேசுவின் அடிச்சுவடை பின்பற்றினோமா? அவர் இருக்கும் இடத்தில் நாம் இருக்கிறோமா? நம்மை நாமே சுய பரிசோதனை செய்வோம். இந்த கடைசி நாள்களில் இயேசுவின் மாதிரியை பின்பற்றி  அவர் சித்தத்தின் படி ஊழியம் செய்யும் படி ஒப்புகொடுப்போம்.

ஆவியானவரே நீர் சொல்லும் நான் கேட்கிறேன், நீர் கட்டளையிடும் நான் செய்கிறேன் என்று நம்மை அர்பணிப்போம்.  ஆமென்.

bottom of page